ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்

அமுதமொழிகள்

துபையில் கலீபா ஏ . பி . ஸஹாபுத்தீன்பி . . எம் . பி . . ஹக்கிய்யுல் காதிரிய் 
அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை


விளங்கவேண்டும் !


ஒவ்வொன்றையும் நாம் சிந்தித்து வாழ்க்கையை ஒழுங்கு பண்ணிக் கொள்ள வேண்டும் . குர்ஆனுக்கு ஏன் இவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் . அல்லாஹ்வுக்குக் கொடுக்கும் மரியாதை குர்ஆனுக்குப் கொடுப்பதில்லையே ! யாருமே அல்லாஹ்வுக்குக் கொடுக்கும் மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். அல்லாஹ்வுக்கு ஐந்து நேரமும் தொழுகின்றோமே அதுபோல் யாருக்கும் தொழுகிறோமா? அவனுக்கு சஜ்தா செய்வது போல யாருக்காவது சஜ்தா செய்கிறோமா? இல்லையே? அல்லாஹ்வுக்குத் தான் சஜ்தா செய்வது ஓர் ஒழுங்குமுறைப்படி! எந்த ஒழுங்கு முறைப்படி செய்கிறோமோ அதுதான் சஜ்தா!  சஜ்தா என்றால் என்னவென்று தெரியாதவனுக்கு அவனுடைய வாழ்க்கை முறையே அவனுக்குத் தெரியாது என்று பொருள். சஜ்தாவை வேறு மாதிரி நினைத்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் சிறிது சிறிதாவது விளங்கியிருக்க வேண்டும். குர்ஆன் எவ்விதம் இறக்கப்பட்டது. அது எப்படி வந்தது என்பதையெல்லாம் முறைப்படி விளங்க வேண்டும்.அல்லாஹ் சொன்னான் என்றால் அர்ஷிலே கால் மேல் கால் போட்டு பெரிய மீசையை வைத்துக் கெண்டிருக்கிறானே அவன் அனுப்பினது என (பாமரர்கள்) விளங்கிக் கொள்கிறார்கள். அவன் எழுதியனுப்பியுள்ளான். இவ்வாறெல்லாம் விளங்கினால் அது சரிவருமா? அதனால் தான் குர்ஆனுக்கு மரியாதை கொடுப்பதில்லை. குர்ஆனை முழங்காலுக்குக் கீழே வைத்து ஓதுகின்றனர். அவனது முழங்காலை விடத் தாழ்ந்ததா குர்ஆன்? இப்படி செய்கின்றவர்களெல்லாம் இருக்கின்றனர். இதையெல்லாம் சரி செய்து ஓர் ஒழுங்கு முறைக்கு வருகின்றவன் தான் சரியாக வாழக்கூடிய மனிதன் எனச் சொல்வோம். அல்லாமல் நாம் அவர் சொல்வது போல் - இவர் சொல்வது போல் அவன் நினைப்பது போல் - இவன் நினைப்பது போல் நான்  நினைப்பது போல் என்றெல்லாம் போக முடியாது! நான் நினைப்பது போல நடக்க இயலாது. அல்லாஹ் நினைப்பது போல் தான் நடக்கும். நீங்கள் நினைப்பது போல நடக்க முடியுமா? நீங்கள் நினைப்பது போல் நடந்தால் அதை மாற்றக் கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான். அது நல்லதாக இருக்க வேண்டும். அதனால் எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு முறையை உண்டு பண்ணி அதன்படி நடப்பதே இஸ்லாத்தின் மிக முக்கியமான விஷயமாகும் .இஸ்லாத்தின் கொடை !

மாற்று மதத்தினர் யாருக்கும் இந்த ஒழுங்குமுறை இருக்காது. இஸ்லாத்தில் மட்டும் தான் இந்த ஒழுங்குமுறை இருக்கிறது. தலையில் தொப்பி போடுவதென்றால் எப்படிப் போட வேண்டும்? சிறுநீர் கழித்தால் எவ்விதம் இருக்க வேண்டும்? எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? மலம் கழிக்கச் சென்றால் எவ்விதம் சுத்தம் செய்ய வேண்டும்? இதற்கெல்லாம் சட்டதிட்டங்கள் இருக்கின்றன .  இந்த சட்ட திட்டங்களை யார் வகுத்தது ? ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி வகுக்கப்பட்ட சட்டங்கள் அவை !  அவர்கள் இல்லையென்றால் நாங்கள் இப்படி இருப்போமா ?  ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரவில்லையென்றால் நாம் எப்படி சிறு நீர் கழிப்போம் ?  மற்ற சமயத்தவர் இருப்பது போலத் தான்இருப்போம் !  சுத்தம் செய்யவும் மாட்டோம் ! அந்த அசுத்தத்துடனே சுற்றித் திரிவது தான் !  ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரவில்லையென்றால் நடந்திருக்கும் விஷயம் இதுதான்!


ஐந்து நேரமும் தொழ வேண்டும் என அல்லாஹ் சொன்னதை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் .  அவர்கள் சொன்னபடி நாம் நடந்து வருகிறோம் . அவர்களே வரவில்லையென்றால் ஐந்து நேரம் தொழுகை இருக்குமா ?  மாற்று மதத்தவர் போல் கைகூப்பிக் கொண்டிருப்போம் ! அல்லாஹ் ரஸூல் சொன்னதை அறிந்து கடைப்பிடித்து ஒழுங்குமுறையோடு வாழ வேண்டும் .  நல்ல ஒரு முறையை ஒருவர் பின்பற்றி வாழ்ந்தால் அவரை முஸ்லிம் என்று தான் சொல்லவேண்டும் .  “ மன்கால லாஇலாஹ இல்லல்லாஹ் தகலல் ஜன்னத”  யாரொருவர் லாஇலாஹ இல்லல்லாஹு சொன்னாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸில் வருகிறது .  மேலும் “மன் கால லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லலாஹ் தகலல் ஜன்னத”  யாரொருவர் லாஇலாஹ இல்லால்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் எனச் சொன்னாரோ அவர் சுவனத்தில் நுழைந்து விட்டார் என்று வேறொரு ஹதீஸ் வருகிறது . இதன் கருத்து அல்லாஹ்வைத் தெரிந்தவன் ரஸுலுல்லாஹ்வை அறிந்து கொண்டான் என்பதாகும்.  அல்லாஹ்வைப் பற்றி ஒருவன் விளங்கி விட்டால் ரஸுலைப் பற்றியும் விளங்கிவிட இயலும் . அப்படி இல்லையெனில் இந்த ஹதீஸ் வரவேண்டிய அவசியமில்லையே ! மாற்று மதத்தில் வாழ்வோரும் நல்ல முறையில் நடத்திருந்தால் - ஷிர்க் இல்லாமல் வாழ்ந்திருந்தால் அவர்களை நாம் ஒன்றும் சொல்ல முடியாது !  அல்லாஹ்வை அறிந்து ஷிர்க் இல்லாமல் வாழ்ந்து வருவோரை காபிர் என நாம் எப்படி சொல்ல முடியும் ?  சாலையில் நடப்பவனைப் பார்த்து அவன் காபிர் எனச் சொல்ல முடியாதே !  அவனுடைய நிலைமை என்ன ? அதைத் தெரிந்திருக்க வேண்டுமே !  அசுத்தமாக - அருவருப்பாக - பல மாதிரியும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் மனம் சுத்தமாக இருக்கும் !மனச்சுத்தம் !


நிகழ்ச்சியொன்றை ஒருவர் சொல்வார் .  அக்காலத்தில் பிரபலமாக ஓர் வலிய்யுல்லாஹ் இலங்கையில் “நூரேலியா” எனும் ஊருக்குச் சென்று தங்கியிருந்தார்கள் .  அங்கே முஸ்லிமல்லாத தமிழர் ஒருவர் சாக்கடையில் - அருவருப்பான இடங்களிளெல்லாம் இருந்து பார்க்க அசுத்தமாகத் தான் இருப்பாராம் . அவருக்கு அருகே அசுத்தம் பட்டுவிடும் என வேறு யாரும் சொல்வதில்லை . அவர் ஒரு நாள் திடீரென ஆற்றில் குளித்து சுத்தம் செய்து நல்ல ஆடையை அணிந்து மணமெல்லாம் பூசி நேரே அந்த வலியுல்லாஹ் அவர்களைக் காணச் சென்றாராம் . அங்கே இருந்தவர்கள் அவரை உள்ளே விடாமல் விரட்டி நீ அசுத்தமான ஆள் ! உள்ளே போகக் கூடாது எனத் தடுத்தார்களாம் . ஆனால் அதனையறிந்த வலிய்யுல்லாஹ் அவர்கள் அவரை அழைத்து வரச்சொல்லி பார்க்க அனுமதித்தார்கள் .  எனவே மனிதனுடைய நிலை எப்படி இருக்கிறது என எங்களுக்குச் சொல்ல முடியாது ! அவனுடைய மனதில்தான் எல்லாம் இருக்கிறது ! மனதைத் தான் மனிதன் திருத்தி வைத்துக் கொள்ள வேண்டும் .மனம் தான் மிக முக்கியமானது ! மனதை எவன் திருப்திப்படுத்தவில்லையோ அவனுடைய வாழ்க்கையே கஷ்டமாகத் தான் இருக்கும் !  மனதைக் கொண்டு உலகத்தையே புரட்டலாம் . தேவையானால் ! மலைகளையே புரட்டலாம் ! மனம் சரியாயிருந்தால் எதையும் செய்யலாம் ! ஆதலால் மனதை மட்டும் திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும் ! அவன் சரியில்லை .... இவன் சரியில்லை .... அவன் ஒருவகையானவன் .... அவனுடைய இடத்திற்கு நாம் போகக் கூடாது ! சும்மா திடீரென இவ்வாறு நினைத்துக் கொள்வது !  யாராவது ஒருவர் ஒன்று சொன்னால் போகக் கூடாது என முடிவெடுத்துக் கொள்வது ! அவனை அப்படிச் சொன்னான் . இப்படிச் சொன்னான் என நாங்களே உண்டு பண்ணிக் கொள்வது ! அது பெரியபாபமான வேலை ! அது தேவையில்லை . அப்படி இருக்கக் கூடாது ! சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள் . ஏதோ அவர்களை வெறுத்தது போல நினைத்துக் கொள்கிறார்கள் . அவர்கள் வெறுத்தால் அல்லாஹ் வெறுத்துவிடுவானா ?  அவர்கள் வெறுத்ததற்கு அல்லாஹ் வெறுக்கமாட்டான் . மேலே குறிப்பிட்ட அந்தத் தமிழரை எல்லோரும் வெறுத்து விரட்டினர் . ஆனால் அந்த வலிய்யுல்லாஹ் அவரைக் கூப்பிட்டு எடுத்துக் கொண்டார்களே ! அவரிடம் வெளியே உடல்தான் அசுத்தமாயிருந்தது . அவருடைய மனம் சுத்தமாக இருந்ததே ! மனதைக் கட்டுப்படுத்துவதற்காக இப்படியெல்லாம் பெரியார்கள் நடந்துள்ளார்கள் . மனம் கட்டுப்பட்டதென்றால் எல்லாமே நன்றாக இருக்கும் .நேரத்துக்கு நேரம் மாறாமல் மனதை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு நேரம் கடைக்குப் போய் நான் சாமான்களை வாங்கி வருகிறேன் என்பது. அடுத்த நாள் போக மாட்டேன் உன் வேலையைப் பார் என மாறி விடுவது.  இதற்கு என்ன காரணம் ?  எதற்காக அவன் போனான் ? எதற்காக அவன் போக மறுத்தான் ? எனவே ஒழுங்காக நடப்பதென்றால் மாறாமல் ஒழுங்காகவே நடந்து கொள்ள வேண்டும் !  சபை விஷயங்களிலும் சிலர் அவ்வாறு தான் நடந்து கொள்கின்றனர் நான் பார்த்திருக்கிறேன் .  தொழில் இல்லாத நேரங்களில் நல்ல விஷயங்களைக் கேட்பதற்காக எல்லாப் பிள்ளைகளும் ஒழுங்காக வந்துவிட வேண்டும் !  அதனால் எங்கள் மனம் சுத்தமாகுமே தவிர அசுத்தமாகாது !  ஆனால் அசுத்தமாக்குபவர்களும் இருக்கிறார்கள்.  அதனால் கெட்டுப் போவதும் இருக்கிறது . அப்படி இருக்கக்கூடாது .  எனவே உங்கள் மனதை திருப்திப்படுத்திக் கொள்ளுங்கள்.  இதுவே கடைசி முடிவு


 ( மஜ்லிஸ் நிறைவு பெற்றது ) .