ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

(தெளர் மலைக்குகையில்) இருந்த இருவரில் ஒருவராக (நபி)அவர்(கள்) இருந்த (போதுபகைவர்கள் சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தம்முடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி, நீர் கவலைப்படாதீர்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று (ஆறுதல்) கூறிய போதும்....அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் அன்புத்தோழர் ஹள்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களும் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த இரவில் எதிரிகளின் கண்களில் படாமல் தெளர் எனும் குகையில் ஒளிந்திருந்திருந்தார்கள். பகைவர்கள் அவர்களைத்தேடி குகை வாசலுக்கே வந்துவிட்ட பதட்டமான சூழ்நிலையில் ஹள்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அண்ணலாரிடம், நாயகமே! நாம் இருவர்தாமே இங்கிருக்கின்றோம்; எனப் பதறியபோது அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தம் தோழரிடம் நிதானமாகக் கூறிய வாக்கியத்தைத்தான் அல்லாஹ் மேற்கண்ட திருவசனத்தில் பாராட்டி விபரித்துரைக்கின்றான்.தாம் மாட்டிக்கொள்வோமே என்ற அச்சமெல்லாம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இல்லை. அண்ணலாரை பாதுகாப்பாக மதீனாவரை கொண்டு சேர்க்க முடியவில்லையே என்ற கவலைதான் அவர்களுக்கு. பின்னாளில் பத்ருப்போர்க்களத்தில் என்ன சூழல் ஏற்பட்டதோ அதே சூழ் நிலைதான் இந்த இரவிலும். அதாவது: பத்ருப்போரில் தோல்வியடைந்தால் இஸ்லாம் எப்படி தலை தூக்கியிருக்க முடியாதோ அதே போல்தான், இந்த இரவில் பெருமானாரும் தோழரும் பகைவரிடம் சிக்கியிருந்தால் ஹிஜ்ரத்தோ மதீனா மறுமலர்ச்சியோ ஏற்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே!இத்தகைய இக்கட்டான காலகட்டத்திலும் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் இறைவன் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை வரலாற்றில் எந்தத் தலைவரிடமும் காணமுடியாதது. அத்துடன், அல்லாஹ் என்னுடன் இருக்கிறான் எனத் தங்களைத்  தனிமைப்படுத்திக் கூறாமல் அல்லாஹ் நம்முடன் எனக்கூறி புறத்தில் தோழருக்கு நம்பிக்கையையும், அகத்தில் தெளஹீத் எனும் மெய்ஞ்ஞான உண்மையையும் போதித்தது கவனிக்கத்தக்கது. இக்காட்சியை சீறாப்புராணத்தில் உமறுப்புலவர் இவ்வாறு அழகாக விளக்கிப் பாடுவார்.  


                                          இருவர்நா மிருப்பப் பூவில் இருந்தபல் லுயிருங் காக்கும்
                                          ஒருவன்நம் மிடத்தை நீங்கா துடனுறைந்திருப்பக் காபிர்
                                          தெரிதரும் கண்ணிற்காணச் செயலுமற்றுண்டோ வென்றார்
                                          அருவரை முழையிற்புக்கி அருக்கனொத் திருக்கும் வள்ளல்.