ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை


ஆதம்நபி  யைஇறைவன் படைத்ததிந்த  நாளே

 அவர்கள் பிழை மன்னித்து பொறுத்ததிந்த நாளே

சீதுநபி மகனார்நம்  நூஹு நபிகப்பல்

சேதமின்றி பிரளயத்தில் காத்ததுமிந் நாளே

ஈதுலகில் இருந்துநபி இத்ரீஸும் சுவனம்

இன்பமுறக் கண்டுவந்த நாளுமிந்த நாளே

தூதர்நபி இப்றாஹீம் நெருப்பினிலே எறிய

சூடின்றி  சுகமாக  திரும்பியதிந் நாளே

அய்யூபு நபியவர்கள் நோய்முழுதும் நீங்கி

அழகோடு அனைத்துநலம் பெற்றதிந்த நாளே

மெய்த்தூதர் தாவூது நபியவர்கள் எண்ணம்

மேலிட்ட பவம்நீக்கி தெளிந்ததிந்த நாளே

கைநழுவிப் போய்விட்ட  சுலைமான்நபி ஆட்சி

கனிவோடு  மீண்டும்இறை கொடுத்ததிந்த நாளே

நைல்நதியில் ஃபிர்அவ்னை மூழ்கடித்து மூஸா

நபியோடு அவர்சமுகம் காத்ததிந்த நாளே

மீன்வயிற்றி லிருந்துநபி யூனுஸ்தமை மீட்டு

மீண்டும் ஒரு புதுவாழ்வு அளித்ததிந்த நாளே

வானுயர்த்தி  ஈஸாவை  சிலுவையறை யாமல்

வாஞ்சையுடன் இறைகாத்த நாளுமிந்த நாளே

நோன்புஅது  ரமளானில் நோற்பதற்கு முன்னே

முதன்முதலாய் முஸ்லிம்கள் நோற்றதிந்த நாளே

மாநபியின் திருப்பேரர் இமாம்ஹுஸைனார் உயிரை

மக்களாட்சி மலர்ந்திடவே தியாகம்செய்த நாளே

ஆஷீரா நாள்முஹர்ரம்  பத்தாம்நாள் மலரும்

அந்நாளே வரலாற்றில் முக்கியநாள் ஆகும்

ஆசையுடன் இருநோன்பு நோற்றவர்க்கு வல்லோன்

அருள்பொழியும் இருள்விலகும் வெற்றிகளும் விரியும் 

பாசநபி மேல்ஸலவாத் பஞ்சமின்றி மொழிவோம்

பணம்கொடுத்து ஏழைகளின் மனம்குளிரச் செய்வோம்

நேசமற்ற கர்பலாவின் நிகழ்வுகளை எண்ணி

நெக்குருகி  இமாம்ஹுஸைனார் தியாகத்தைப் புகழ்வோம்!  


(கலீபா ஆலிம் புலவர்)