ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

போதும் மெளனம்! 


ஆர்.எஸ்.எஸ். வழி நடத்தும் பார - தீய ஜனதா அரசு தனது ஆசைத்திட்டங்களை சிறிது சிறிதாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் பக்ரீத்துக்கு விடுமுறையில்லை என்ற செய்தி, மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை, டெல்லி சாலைக்கு அவ்ரங்கஸீப் அவர்களின் பெயரை நீக்கி அப்துல்கலாம் பெயர்வைத்த மாற்றம், பொது சிவில் சட்டத்தை முன்னோக்கும் அறிக்கைகள்.  இப்படி மெல்லமெல்ல தனது செயல்திட்டத்தை விரிவாக்கிக் கொண்டே போகிறது.  இவற்றை எதிர்த்து இந்தியாவில் வாழும் நடு நிலையாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.பொது சிவில் சட்டம் என்ற திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1 கோடிப்பேரிடம் கையயழுத்து வாங்கும் இயக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திவருகிறது.இஃது இப்படி நிகழ்ந்து கொண்டிருக்க, உலகில் இந்தோனே´யாவுக்கு அடுத்து பெரிய எண்ணிக்கையில் வாழும் இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் ஆபத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதே என்ற எண்ணம் - கவலை- சலனம் எந்த முஸ்லிம் நாடுகளுக்கும் இல்லையே  என நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது! சற்றொப்ப நாற்பத்தைந்து  ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலியர் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு தீவைத்த போது உலகமெங்கும் - குறிப்பாக  இந்தியாவில் - தமிழகத்தில் ஊர் ஊராக கண்டன ஊர்வலம் நடந்தது  நினைவுக்கு வருகிறது. இப்போதெல்லாம் அது போன்ற ஒற்றுமை உணர்வு இல்லையே என உணரும்போது வேதனையாக இருக்கிறது. பர்மாவில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இன்னல்களின் போதும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத  முஸ்லிம் நாடுகள் தற்போதும் மெளனம் காத்து வருவது ஆபத்தானது.குளோபல் உலகில் எல்லாநாடுகளும் எல்லாநாடுகளிடமும் தேவையுடையதாக இருக்கின்றன.  முஸ்லிம்கள்; குறிப்பாக அறபு நாடுகள் இந்தியாவில் இஸ்லாத்தின் மீது அதன் ­ரீஆவின் மீது தொடுக்கப்படும்  தாக்குதல்களைக் கண்டித்து  வாய்திறக்க வேண்டும்! தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யவேண்டும்.பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் அபுதாபியில்  தங்களின் வழிபாட்டுத் தலத்துக்கு இடம் கேட்டுத் துணிச்சலாக வரும்போது - இந்தியாவில் பாபர் மஸ்ஜிதை மீண்டும் கட்டித்தாருங்கள் என்று கேட்கும் தைரியம் நம்மவர்களுக்கு ஏன் இல்லாமற் போய்விட்டது? இடித்தவர்கள் நாண ஒரு நாலுவார்த்தை இடித்துணர்த்தியிருக்க வேண்டாமா?