ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Islam and the West


இஸ்லாமும் மேற்கு நாடுகளும்

உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வி மையத்தின் தொடக்கவிழாவின் போது (27.10.1993)

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆற்றிய சொற்பொழிவு!

தமிழில்: கவிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது


ஆனாலும் நண்பர்களே! நான் வாதாடுவது உலகைப் பற்றி இப்போது இருப்பதை விட ஓர் அகன்ற, ஆழ்ந்த மிகக் கவனமான அணுகுமுறைக்காகத்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளளவிலும் புலன் உணர்வுகளைக் கடந்த நுட்பமான ஆய்வு பற்றிய தத்துவ அளவிலும் நம்முடைய வாழ்க்கையை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். நாம் துறந்துவிட்ட ஒரு நெறிமுறையை - சமநிலையை நாம் திரும்பப் பெற்றாக வேண்டும். இவற்றை இழந்து இருந்தால் காலப் போக்கில் நமக்குக் கேடு பயக்குமென நான் நம்புகிறேன்.

இந்தத் தேடுதலில் இஸ்லாமியச் சிந்தனை முறைகள் நமக்கு உதவுமென்றால் அவற்றை நாம் கற்றறியத்தான் வேண்டும். அவற்றைக் கற்காது நாம் புறக்கணித்தால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும்.

நண்பர்களே!

நம்முடைய பாட்டன் காலத்தவர்கள் கனவுகூடக் கண்டிராத அளவுக்கு செய்திப் பரிமாற்றத்தால், தொலைக்காட்சியால், உடனடிச் செய்தித் தொடர்பால் ஒன்றிணைந்த ஓர் உலகில் இன்று நாம் வாழ்கிறோம். உலகப் பொருளாதாரம் பன்னாட்டுப் பொருளாதாரத்தை இணைத்திருக்கிறது.

சமூகம், வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் பற்றிய பிரச்சினைகள் உலகளாவிய காரணங்களால் ஏற்படுகின்றன; உலகளாவிய விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.  இந்தப் பிரச்சினைகளைத் தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்ளும் நிலையில் நாம் யாருமில்லை. இஸ்லாமிய உலகமும் மேற்கு உலகமும் அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கின்றன. சமுதாய மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வது எப்படி? பெற்றோரிடம் இருந்தும் சமுதாயத்தின் மாண்புகளில் இருந்தும் விலகி நிற்கின்ற இளைஞர்களுக்கு உதவியளிப்பது எப்படி? எய்ட்ஸ், போதைப் பொருள்கள், குடும்ப உறவுகளின் சீர்குலைவு ஆகியவற்றைச் சமாளிப்பது எப்படி, இந்தப் பிரச்சினைகள் ஏறத்தாழ எல்லாச் சமுதாயங்களையும் எதிர்நோக்கி இருக்கின்றன.

நம்முடைய நகரங்களில் உள்ள பிரச்சினைகள் கெய்ரோவிலோ, டமாஸ்கஸிலோ அப்படியே இருப்பதில்லை. ஆனால் மனித அனுபவத்தின் ஒற்றுமைகள் பெருமளவிலானவை. போதைப் பொருள்களுக்கான சர்வதேச வாணிகம் இதற்கோர் எடுத்துக்காட்டு; மற்றொன்று நாமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நம்முடைய சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தும் சிதைவு. நம்முடைய சமுதாயங்களுக்கும் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக உள்ள இந்தப் பிரச்சினைகளை நாம் ஒன்றிணைந்து தீர்க்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் அற்புத விளைவை ஏற்படுத்தும்.

இதற்கு எடுத்துக்காட்டாக, எனக்குத் தெளிவாக நினைவிலிருக்கின்ற ஒன்றை எடுத்துக் கூறுகிறேன். லண்டனில் அமைந்துள்ள பெரில்போன் சுகாதார மையத்துக்கு நான் புரவலராக உள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மையத்தில் பணிபுரிய முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதோரும் கொண்ட ஒரு குழுவை ஊக்குவித்தேன். அந்தப் பணியில் ஏற்பட்ட பொது அனுபவம், அந்தக் கூட்டு முயற்சியில் ஏற்பட்ட பொது உற்சாகம், உறுதி மனதுக்கு மிகப்பெரும் நிறைவளிப்பதாக இருந்தது.


நண்பர்களே!

நாம் எப்பாடு பட்டாவது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.  நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த நல்லெண்ணத்தை உணர்ந்து கற்றுக் கொடுக்க வேண்டும். நம்மிடையே புகுத்தப்பட்டுள்ள நஞ்சைக் களைந்து, சந்தேகம் எனும் பேயை விரட்டியடிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் (குழந்தைகள்) ஒரு புதிய தலைமுறையினர்; அவர்களுடைய நோக்கும், கலாச்சார மனப்பான்மையும் நம்முடைய வற்றிலிருந்து மாறுபட்டவையாக இருக்கும்.  ஆனாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நம்பிக்கையுடனும் ஒருவருக்கொருவர் மதிப்புடனும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு இருக்கக்கூடிய பொதுவான ஆதாரத்தை உணர்ந்து பிரச்சினை களுக்குத் தீர்வு காண முடியும்.  என்னுடைய அறக் கட்டளையில் நிலவி வருகிற சமுதாய அணுகுமுறை, பல்லாண்டுகளாக அங்கு வெற்றிகரமாகச் செயல்படுத்தப் படுகின்ற தன்னார்வத் தொண்டர்கள் திட்டம் ஆகியவை இனம், சமயம், கலாச்சாரம் போன்ற வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுக் கூட்டு முயற்சியால் எத்தகைய சாதனைகள் புரிய முடியும் என்பதை மெய்ப்பிக்கின்றன.

    
    நம்முடைய பொதுவான பிரச்சினைகளுக்கு ஒரு பொதுத் தீர்வினைக் காணும் கூட்டு முயற்சியில் இருந்து இஸ்லாமிய உலகமும் மேற்கு நாடுகளும் பிரிந்து செயல்பட முடியாது; சேர்ந்தே செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் நாட்டெல்லைகள் மற்றும் அரசியல் தொடர்பாக இருந்து வந்த சச்சரவுகளை இன்றும் பாராட்டக் கூடாது. நாம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்; ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும்; சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்; நம் இரு கலாச்சாரங்களுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய, ஐயத்திற்கு இடமின்றி நம்பிக்கையூட்டக்கூடிய கொள்கைகளை முன்வைத்துச் செயல்பட்டு ஒரு புதிய உலகை உருவாக்க வேண்டும். இந்தப் பரிமாற்றம் இருதரப்புச் செயலாக இருத்தல் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஆழ்ந்த சிந்தனை, நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை நன்கு உணர வேண்டும். நம் உள்ளங்களைத் திறந்து இதயக் கதவுகளின் பூட்டுகளை அகற்றுவோம்.


இஸ்லாமிய உலகமும் மேற்கு உலகமும் ஒன்றிடமிருந்து மற்றொன்று கற்றுக் கொள்ள வேண்டியனவாக நிறைய இருக்கின்றன என்று நான் முற்ற முழுக்க நம்புகிறேன். வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்ற எண்ணெய்ப் பொறியியல் வல்லுநர் ஓர் ஐரோப்பியராக இருக்கையில் பிரிட்டனில் பணியாற்றுகின்ற இதய மாற்று அறுவை மருத்துவ வல்லுநர் ஓர் எகிப்தியராக இருக்கிறார். இந்தப் பரிமாற்றமும் சகிப்புத் தன்மையும் சர்வதேச அளவில் தேவை என்றால் அவை பிரிட்டனுக்கே கூடப் பெருமளவில் சிறப்பாகத் தேவைப்படுகின்றன. நம்முடைய நாடு பல இனத்தவர்களைக் கொண்டுள்ள நாடு; பல கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நாடு.  பிராட்ஃபோர்டு போன்ற பெரிய நகரங்களிலும் ஸ்டோர்னவே போன்ற தொலைதூர இடங்களில் உள்ள சிறிய ஊர்களிலும் என பிரிட்டன் முழுவதுமாக முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வருவதை நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.


நண்பர்களே!

இந்த முஸ்லிம் மக்கள் நம் நாட்டின் செல்வம் ஆவர். நம்முடைய பொருளாதாரத்தின் எல்லாப் பகுதிகளிலும் அவர்கள் சிறந்த பங்குப்பணி ஆற்றி வருகிறார்கள். தொழில்துறையிலும் சரி, தனியார் துறையிலும் சரி, பொதுத் துறையிலும் சரி, சேவைப் பணிகளிலும் சரி, பொதுத் தொண்டிலும் சரி, அவர்களின் பங்களிப்பு போற்றத் தக்கது ஆகும். அவர்கள் ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, அறிவியல் வல்லுநர்களாகப் பணியாற்றி வருவதை நாம் காண்கிறோம். இந்த நாட்டின் பொருளாதார வளத்துக்கும், நம் பண்பாட்டின் செழுமைக்கும் அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். சகிப்புத்தன்மையும் புரிந்து கொள்ளும் ஆர்வமும் இரு தரப்பினரிடமும் இருத்தல் வேண்டும்.


நம்மிடையே உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள், முஸ்லிம்களால் இஸ்லாமிய நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்படும் அன்றாட அனுஷ்டானங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்; முஸ்லிம் சகோதரர்களுடைய மனதைப் புண்படுத்தாமல் தவிர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த கவனம் உண்மையான மதிப்பின் அடிப்படையில் பிறந்ததாக இருக்க வேண்டும். முஸ்லிம்களாக இருந்து கொண்டே நம் நாட்டு வாழ்க்கை முறை முதலியவற்றைப் புரிந்து கொண்டு பிரிட்டிஷ் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை முஸ்லிம்களும் உணர வேண்டும்.


நம் நாட்டுக் குடிமக்களிடையே ஒரு சமரச நோக்கு வளர வேண்டும். இந்த நோக்கத்துக்காக இங்கிலாந்தில் லண்டன், செளத்வேல்ஸ், மிட்லண்டஸ் போன்ற பல்வேறு இடங்களில் அரும்பாடுபட்டு வருகிற பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆடவரையும் பெண்டிரையும் நான் போற்றுகின்றேன்; பாராட்டுகின்றேன்,


பர்மிங்ஹாமில் அமைந்துள்ள இஸ்லாமியக் கல்வி மற்றும் கிறிஸ்துவ முஸ்லிம் நல்லுறவு மையம் (The Centre for the study of Islam & Christian Muslim Relations in Burmingham) இதற்கு ஒரு சிறந்த, வெற்றிகரமான எடுத்துக்காட்டு ஆகும். மக்களிடையே நல்லுறவைப் பெருக்குவதற்கு அர்ப்பணித்துக் கொண்டு அரும்பாடுபடுகின்ற எல்லாப் பணியாளர்களுக்கும் நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். இஸ்லாமிய உலகமும் மேற்கு நாடுகளும் பிரிந்திருப்பது நல்லதல்ல. இவை ஒன்றையொன்று எதிர்த்துக் கொள்ளும் போக்குதான் நிலவுகிறது என்ற கருத்தை நான் ஆதரிக்க வில்லை. 

இவை இணைந்து சாதிக்க வேண்டியவை நிறைய உள்ளன. பிரிட்டனிலும் சரி, பிற இடங்களிலும் சரி, இஸ்லாமிய உலகமும் மேற்கு நாடுகளும் ஒன்றையொன்று நெருங்கிவரத் தொடங்கிவிட்டன என்பதை நான் மகிழ்ச்சியுடன் உணருகிறேன். ஆனாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் முயற்சியில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும்; நமக்கிடையே எந்த நஞ்சும் இல்லாமல் செய்ய வேண்டும். கோர உருவம் கொண்ட கொடிய பேய்களான அச்ச உணர்வையும் ஐயப்பாட்டையும் நாம் விரட்டியடிக்க வேண்டும். இந்தப் பாதையில் நாம் எவ்வளவு தொலைவில் செல்கிறோம் என்பதற்கு ஏற்பத்தான் நாம் நம்முடைய குழந்தைகளுக்கும் வருங்காலத் தலைமுறையினருக்கும் நாம் விட்டுச் செல்ல இருக்கின்ற உலகத்தின் தன்மை இருக்கும். 

   (நிறைவு பெற்றது)