ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai   »  2014   »  Oct2014   »  தற்கலை


தற்கலை!

“கலையினிற் சிறந்தது ஞானம்” என நம் ஆருயிர் ஞானத் தந்தை செய்கு நாயகம் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

ஆய கலைகள் அறுபத்து நான்கு என முன்னோர் வகைப்படுத்தியுள்ளார்கள்.

எழுத்துக்கலை, பேச்சுக்கலை, இசைக்கலை, நடிப்புக்கலை, நாட்டியக்கலை, சிற்பக்கலை, வர்மக்கலை, சமையற்கலை, அச்சுக்கலை, தொழிற்கலை, அரசியல்கலை, அழகுக்கலை என கலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. 

ஒரு செயலைத் தொடர்ந்து செய்து அதில் நுட்பம் - அழகு - நேர்த்தி வெளிப்படும்பொழுது அது கலை எனும் பெயரைப் பெறுகின்றது!


கலைகள் கண்களுக்கு அழகையும் - மனதுக்கு அமைதியையும் தருவன! அழகான ஓவியத்தைப் பார்க்கும் போது மனம் சலனமின்றி அசையாமல் நின்றுவிடுகிறது. இனிமையான இசையைக் கேட்டும்போது இதயம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறது.

கலைகள் மனித வாழ்வுக்கு ஊக்கத்தையும் - ஊட்டத்தையும் தருகின்றன. கலையில் தோய்ந்து மூழ்கியவர்கள் கலைஞன் என மதித்துப்போற்றப்படுகின்றனர்.


கலைகளில் முதன்மையானது - தலையாயது - சிறந்தது எது?


நம் அருமை கலீல் அவுன் நாயகர் அவர்கள் “கலைகளில் சிறந்தது ஞானம்”  தான் ஒரு புதுமையான கருத்தை உலகுக்கு முன் வைக்கின்றார்கள்.


ஞானம் ஏன் சிறந்தது?


மற்ற கலைகளெல்லாம் அது வெளிப்படுவதற்கு இரண்டு பொருள் வேண்டும்!

சிற்பி செதுக்குவதற்கு பக்குவமான கல் வேண்டும். இசைக்கலைஞன் வாசிப்பதற்கு கருவி வேண்டும்.

நாட்டியம் போன்ற சுயமாகச் செய்ய முடியும் மற்ற கலைகளுக்கு அதனை ரசிப்பதற்கு இன்னொருவர் வேண்டும்.

ஆனால் ஞானத்திற்கு மட்டும் “தான் ஒருவனே” போதும். ஞானம் ஒரு தற்கலை!

தன்னில் தொடங்கி தன்னிலே முடிவடையும் தற்பரக்கலை!

மற்ற கலைகளெல்லாம் அதனை முடித்தபின் அடுத்தது என்னவென ஒரு நிலைதொடரும். ஆனால் ஞானக்கலை மட்டும் தானே தன்னில் தானாகி முழுமைபெற்று விடும்!

அது கலையையும் கலைஞனையும் பிரியாமல் ஒன்றாக முழுமைப்படுத்தி மனித வாழ்க்கையையும் பூரணப்படுத்தி விடும். எனவே “கலையினிற் சிறந்தது ஞானம்” என்பது சத்தியம் தானே!