ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

கண்ணொளி தாருங்கள்! கண்மணி நாயகமே!

ஈருலக இரட்சகர் நாயகம் கண்மணி பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புனித சுவனப் பூஞ்சோலையாம் ரவ்ழா ­ஷரீபில் நின்று அடியார்கள் முறையிட்டால் அது நிச்சயம்  அங்கீகரிக்கப்படும் என்பதில் ஐயமே கிடையாது. இதற்கு கண்ணிய ஸஹாபாக்களின் காலந்தொட்டு சங்கைமிக்க இமாம்கள் என இன்று வரை ஆயிரமாயிரம் வரலாறுகள் சாட்சி.

ஆனால் இன்று எந்தளவு வழிகேடு மலிந்து போய்விட்டதென்றால் பெருமானாரின் ரவ்லாவில் துஆச் செய்வதைக் கூடாதென்கிறார்கள் வஹ்ஹாபிகள்.  இன்னும் கேடு கெட்ட வஹ்ஹாபிகளோ அங்கு போகவே கூடாதென்கிறார்கள்.  அல்லாஹ் யாருக்கு ஹிதாயத் (நேர்வழி) வழங்கவில்லையோ அவருக்கு கோடி ஆதாரங்கள் இருந்தாலும் வழிகாட்டப் போவதில்லை.

எனினும் ஈமானுடைய சீதேவிகள் அந்த வஹ்ஹாபிய மூதேவிகளின் வீண் பேச்சில் மயங்கி ஈமானை இழந்துவிடக் கூடாதென அரபு தேசத்தில் அக்பாருல் பயான் பத்திரிக்கை (அரபியில்) செய்தி வெளியிட்டு பின் 15.10.2013 கராச்சியின் உம்மத் இதழ் (உருதுவில்) பிரசுரித்த இக்கட்டுரையைத் தமிழில் சமர்ப்பிக்கின்றோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆதி முதலே அகிலத்தின் அருட்கொடைதான். எனவே தான் உலக நபியாக அவதரிக்கும் முன்பும் சரி, அவதரித்த பின்பும் சரி, மறைந்த பிறகும் சரி அண்ணலின் அருட்கொடை வாசல் மூடப்படவே இல்லை. மூடப்படுவதேயில்லை. அவ்வகையில் பெருமானாரின் அருள் வாசல் வேண்டி அருள் பெற்றவர்கள் தாம் சூடான் நாட்டைச் சேர்ந்த ஃபாத்திமா அல் மாஹூ என்ற பெண்மணி.

ஏழு வருடங்களாகப் பார்வை இழந்து போயிருந்த அந்தப் பெண்மணி செய்யாத வைத்தியங்களோ, ஆபரே­னோ இல்லை. எனினும் பலன் எதுவும் அதனால் கிட்டவில்லை. முற்றிலுமாக மருத்துவத்தில் நம்பிக்கையிழந்த அவர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார். நாயனின் ஹபீப் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித ரவ்ழாவில் நாம் துஆச் செய்வோம். நிச்சயம் நம் துஆ உடனே கபூலாகும் என எண்ணம் கொண்டார்.

அதே எண்ணத்தில் ஹஜ்ஜுக்குப் புறப்பட்ட அப்பெண்மணி பெருமானாரின் ரவ்ழாவுக்கு வந்தார். முழு நம்பிக்கையோடு தம் உயிரினும் மேலான உத்தமத்திருநபியின் முன் சங்கையோடு நின்று அன்னவர்களின் அருட்கடாட்சத்தை மனதில் தாங்கி ரஸூல் நாயகத்தின் ரப்புல் ஆலமீன் அல்லாஹ்விடம் மனமுருகி துஆச்செய்தார். இன்னும் அவர் துஆவினை நிறைவும் செய்யவில்லை. தூயோன் அல்லாஹ் தன் அளப்பரிய நேசத்திற்குரிய ஹபீபுக்காக சூடான் தேசத்தைச் சேர்ந்த பாத்திமா அம்மையாருக்கு பார்வை மீளச் செய்தான். சுப்ஹானல்லாஹ்!


மேற்கண்ட நிகழ்ச்சி குறித்து சூடான் ஃபாத்திமா அவர்கள் குறிப்பிடுகிறார்... நான் இதே நோக்கில் என் மகனோடு ஹஜ்ஜுக்காக முதலில் மதீனா முனவ்வரா வந்தேன்.  மற்ற நாட்களில் கூட்டமாக இருக்கும். நம்மால் தனிமையில் நின்று துஆச் செய்ய சாத்தியமில்லை என்பதால் துல்ஹஜ் பிறை 8-ஐ தேர்வு செய்தேன்.

ஏனெனில் அன்றுதான் எல்லா ஹாஜிகளும் மதீனாவில் இருப்பார்கள்.

  துல்ஹஜ் எட்டன்று மினாவில் இருக்காவிட்டாலும் ஹஜ் நிறைவேறும் என்பதால் நான் தாமதமாக மக்கா சென்றாலும் பிரச்சனையில்லை என நினைத்தேன். அன்று நான் புனித ரவ்ழாவிற்கு வந்தேன். எனக்கு என் கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும் என்பதில் உறுதியான நம்பிக்கை இருந்தது. யா அல்லாஹ்! உனது ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இதயக்கனி ஹள்ரத் அன்னை ஃபாத்திமா பெயர் தாங்கிய இந்த அடிமைக்கு அவர்களின் பரக்கத்தால் பார்வை மோட்சம் அளிப்பாயாக! என மனமுருகி நின்றேன். என் துஆ வீண் போகவில்லை.

பெருமானாரின் அருள் வாசலில் கையேந்தி வருவோரை நாயன் வெறுங்கையோடு திருப்பி அனுப்புவதில்லை. நான் துஆவை முடிக்கும் முன்பே என் பார்வை கிட்டியது. அதுவும் என் சிறு வயதிலே கூட அவ்வளவு தெளிவாக எனக்குப் பார்வை இருந்ததில்லை. என் பார்வை இப்போது முதல் கூர்மை யாகிவிட்டது. இதனால் எனக்கு அளவு கடந்த ஆனந்தம். நாங்கள் அழுது அழுது அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினோம்.


வரலாற்றில் அன்று தம் தீரா நோயினால் மரணப் படுக்கையில் கிடந்த இமாம் அல்லாமா ஷ­ரஃபுத்தீன் பூசிரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பெருமானாரை நினைத்து உருகி உருகி கவிமாலை (கஸீதா - புர்தா ஷ­ரீஃப்) இயற்றினார். அவர்களின் கனவில் வந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களின் நோய் தீர்த்து அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்துச் சென்றார்கள். கண்விழித்த இமாம் பூசிரி தாம் பூரண சுகம் அடைந்திருப்பதையும், அண்ணலார் அளித்த பொன்னாடையையும் கண்டு புளகாங்கிதம் அடைந்தது பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டது.

ஈமான் என்னும் பொக்கிஷ­த்தை கொண்ட தூய உள்ளங்களைக் கொண்ட  வாசகர்களே! அண்ணலின் அருள் வாசல் என்றும் அடைக்கப்படாது! வாரீர்!! அண்ணலாரின் திருக்கரம் என்றும் நம் மீது இருக்கும்! வாரீர்!! வாரீர்!! முடிவில்லா இறையருள் அங்கிருந்தே வினியோகிக்கப் படுகிறது. இறைஞ்சிக் கேளீர்!!  


நன்றி: தர்ஹா மாத இதழ்.
தகவல்: காதிமுல் கலீல் யாஸீனிய்.