ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
வாழ்க்கை வரலாறு!

மூலம் : திருநபி சரித்திரம். தொகுப்பு : முஹம்மதடிமை, திருச்சி


கைருன்னபி திருக்கரங்களில் தஞ்சம் புகுந்த கைபர்!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள், லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வையல்லாமல் யாதொரு சக்தியும், திரும்புதலுமில்லை) என்று உரக்க மொழிந்து கொண்டு சென்றார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதைக் கேட்டு, அப்துல்லாஹ் இப்னு கீஸே! (அபூமூஸா அவர்களின் மற்றொரு பெயர்) என்று கூப்பிட அவர்கள், யாரசூலல்லாஹ்! நான் இதோ ஆயத்தமாயிருக்கிறேன்! என்று சொன்னார்கள். அப்போது பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சொர்க்கத்தின் பொக்கிஷ­ங்களில் ஒன்றான ஒரு வாக்கியத்தை நான் உமக்குக் கூற வேண்டாமா? என்று கேட்க, அபூமூஸா (ரலி) அவர்கள், ஆம்! அவசியம் கூறும்படி வேண்டுகிறேன்; என்னுடைய பெற்றோர்கள் தங்களுக்கு அர்ப்பணமாகுக! என்று சொல்ல, பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; அது, லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதே என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.

இச்சண்டையில் சில பெண்களும் தாங்களாகவே சென்றிருந்தார்கள். பெருமானார் அவர்களுக்குப் பெண்கள் சேர்ந்து வந்த விஷ­யம் தெரிந்ததும், அவர்களை அழைத்து, நீங்கள் யாருடன் எவருடைய உத்திரவின் பேரில் வந்தீர்கள்? எனக் கோபக்குரலுடன் கேட்டார்கள். அப்போது அந்தப் பெண்கள் எல்லோரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி, நாயகமே! நூல் நூற்று ஏதாவது சம்பாதித்து, இச்சண்டையில் உதவி செய்யலாமென்றுதான் நாங்கள் வந்தோம். நாங்கள் காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சைகள் செய்ய மருந்துகள் வைத்திருக்கிறோம். சண்டையில் அம்புகள் எடுத்துக் கொண்டு வந்தும் கொடுப்போம் என்று சொன்னார்கள். அவர்கள் செல்லும் வழியில் ரஜிஅ என்னுமிடத்தில் தங்கள் பொருட்களையும், கூடாரங்களையும் பெண்களையும் வைத்து விட்டார்கள். அந்த இடம் கத்பான் கூட்டத்தார் இருக்கும் இடத்திற்கும், கைபருக்கும் மத்தியில் இருந்தது. முஸ்லிம் படைகள் கைபரை நோக்கிப் புறப்பட்டுப் போயின. இதை அறிந்த கத்பான் கூட்டத்தாரும் ஆயுதங்களை அணிந்து கொண்டு கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள்.  ஆனால் கொஞ்ச தூரம் சென்றதும் தங்களுடைய வீடுகளெல்லாம் பாதுகாக்கப்படாமல் இருப்பதாக் கூறிப் பின்வாங்கி ஊருக்குத் திரும்பி விட்டார்கள்.

கைபரில் ஆறு கோட்டைகளிருந்தன. அவைகளில் 20,000 போர் வீரர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அக்கோட்டைகளில் அதிக பலமும் பாதுகாப்பும் வாய்ந்தது கமூஸ் என்னும் கோட்டைதான்.

அரபு நாட்டில் பெயர் பெற்ற வீரனான மர்ஹப் என்பவன் அக்கோட்டைக்குத் தலைவனாயிருந்தான். அரேபியர் அவனை 1000 குதிரை வீரர்களுக்குச் சமமாய்க் கருதி இருந்தனர். மதீனாவை விட்டுத் துரத்தப் பட்டு கைபரில் வந்து சேர்ந்து அங்கு தலைமை வகித்து வந்த இப்னு அபில் ஹகீக் என்பவனுடைய குடும்பமும் அக்கோட்டையில் தான் இருந்தது. முஸ்லிம் சேனை கைபருக்குச் சமமாயுள்ள ஸஹ்பா என்னும் இடத்தை அடைந்ததும் அஸருடைய (மாலை) நேரமாகி விட்டது.  அங்கு அஸருடைய தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றினார்கள். அதன்பின் ஆகாரமருந்தினார்கள். அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுக் கைபருக்கு சமீபமாகப் போகவும் இரவு நேரமாகி விட்டது. ஆனால் கைபரிலுள்ள கட்டடங்களெல்லாம் சேனைகளின் பார்வைக்குத் தென்பட்டன. முன்னேறாமல் அவ்விடத்திலேயே நின்று கொள்ளும்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சேனைக்குக் கட்டளை பிறப்பித்தார்கள். அதன்பின் அல்லாஹ்விடம் கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை செய்தார்கள்:

அல்லாஹ்வே! நாங்கள் இந்நகரத்தினுடையவும், நகர்வாசிகளுடையவும், இன்னும் இந் நகரத்திலுள்ள எல்லா வஸ்துக்களுடையவும் நன்மையே உன்னிடத்தில் வேண்டுகிறோம். இன்னும் இவைகள் எல்லாவற்றின் தீங்கை விட்டும் உன்னிடத்தில் பாதுகாவல் தேடுகிறோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வோர் ஊருக்குள்ளும் பிரவேசிக்கும் முன்பு இப்பிரார்த்தனையை ஓதுவது வழக்கமாயிருந்தது. அவர்கள் பகைவர்களை இராக் காலங்களில் தாக்குவதில்லை.  ஆதலால் அன்றிரவு அங்கேயே தாமதித்து விட்டுக் காலையில் கைபருக்குள் பிரவேசித்தார்கள். யூதர்கள் தங்களுடைய பெண்களையும் நல்ல பொருள்களையும் பாதுகாப்புள்ள அல்குதையா என்ற கோட்டையிலும் தானியத்தையும், சண்டைக்கு வேண்டிய மற்ற தளவாடங்களையும் நஈம் என்று ஒரு கோட்டையிலும் சேனைகளை இரண்டு கோட்டைகளிலும் ஒழுங்குப்படுத்தி வைத்திருந்தார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சண்டை செய்யும் நோக்கத்துடன் வரவில்லை. ஆனால் யூதர்கள் சண்டைக்கு ஆயத்தமாய் இருப்பதைக் கண்டு, அவர்களும் அருமை ஸஹாபாக்களை நோக்கி அல்லாஹ்விற்காகப் போர் செய்வதைப் பற்றிப் போதித்தார்கள்.

முதலாவதாக நஈம் என்னும் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். மஹ்மூது இபுனு மஸ்லமா (ரலி) என்ற பெயருள்ள ஸஹாபி அக் கோட்டையைத் தாக்கி வெகு நேரம் வரை வெகு வீரத்துடன் சண்டை செய்து கொண்டிருந்தார். ஆனால் வெயில் உக்கிரமாய் இருந்தபடியால் கோட்டைச் சுவரின் ஓரமாயுள்ள நிழலில் கொஞ்ச நேரம் இளைப்பாறுவதற்காகப் போய் உட்கார்ந்தார். அவர் உட்காருவதைக் கோட்டையினுள்ளிருந்த கினானத என்பவன் கண்டு ஒரு திருகைக் கல்லை அவர் சிரசின் மேல் போட்டு விட்டான். அதனால் ஏற்பட்ட காய்ச்சலால் அவர்கள் ­ஷஹீதானார்கள் (உயிர் துறந்தார்கள்). அதன்பின் அவரின் சகோதரர் முஹம்மதிப்னு மஸ்லமா (ரலி) அவர்கள் தலைமை தாங்கி தாக்குதலை நடத்தினார்கள். பின்னர் அக்கோட்டை கைப்பற்றப்பட்டது. அதற்குப் பின் மற்றைய கோட்டைகளும் எளிதில் முஸ்லிம்கள் கைவசமாயின.

கடைசியாக மர்ஹப் என்னும் சுத்தவீரன் தங்கியிருந்த கமூஸ் என்னும் கோட்டையைத் தாக்குவதற்காகப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் (ரலி), அபூபக்கர் (ரலி) போன்ற பெயர் பெற்ற சுத்த வீரர்களை அனுப்பினார்கள்.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மற்றவர்களைப் போல் உருக்குச் சட்டையையும் கவசத்தையும் அணிந்து சாதாரண போர் வீரர்களைப் போல் போரில் கலந்து கொண்டார்கள். இது 6வது நாள் போராகும்.  இறுதியில் ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஓர் யூதத் தலைவனைப் பிடித்துக் கொண்டு வந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் நிறுத்தினார்கள். அந்த யூதர் மூலம் கோட்டைகளின் ரகசியமாகிய பல்வேறு நிலைகளையும் சாதுர்யமாகத் தெரிந்து கொண்டார்கள். அவருக்கு அபய மளித்துத் தங்களுடன் வைத்துக் கொண்டார்கள். அன்று மாலை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களையெல்லாம் அழைத்துக் கீழ்க்கண்டபடிக் கூறினார்கள்:

எவருடைய கையில் அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பானோ அவரிடம் நாளைய தினம் என்னுடைய கொடியைக் கொடுப்பேன். அவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிக்கிறார். அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள். அவர் தோல்வி அடையமாட்டார் என்று கூறினார்கள்.

ஸஹாபாக்கள் எல்லோரும் அன்று இரவு முழுவதும் இப்பெருமை யாருக்குக் கிடைக்குமோ என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், உலகத்தில் நான் எந்தப் பதவி, அதிகாரத்தையும் விரும்பியதே இல்லை. ஆனால் அந்தக் கொடி என் கையில் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பொழுது புலர்ந்ததும் அலி எங்கே? என்ற சப்தம் வந்தது.  ஆனால் இது எதிர்பார்க்கப்படாத சப்தமாய் இருந்தது. ஏனெனில் அலி (ரலி) அவர்களுக்குக் கண்வலி அதிகம் இருந்ததால் அவர்கள் சண்டையில் சம்பந்தப்படாமல் கூடாரத்தில் தங்கி இருந்தார்கள். ஆனால் அவர்கள் அழைக்கப்பட்டதும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திற்குப் போனார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தங்களுடைய முபாரக்கான உமிழ் நீரை அவர்களுடைய கண்களில் தடவி ஆசீர்வதித்தார்கள். (துஆச் செய்தார்கள்)

அலி (ரலி) அவர்கள் கையில் கொடி கொடுக்கப்பட்டதும், அவர்கள் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நம்மைப் போல் அவர்கள் ஆகும்வரை போராடுவேன் என்றார்கள். அதற்கு பெருமானார் அவர்கள் நீர் அவர்களின் போர்க்களத்தில் சென்று அவர்களை இஸ்லாத்தின் பால் அழையும்.  உமக்கு அவர்கள் கீழ்ப்படியாவிட்டால் அவர்களுடன் போரில் இறங்கும். உமது மூலமாக ஒரு மனிதனை அல்லாஹ் நேர்வழியில் சேர்த்துவிடுவதாய் இருந்தால் அது செந்நிறமான ஒட்டகைகளை விட மேலானதாயிருக்கும் என்று சொல்லி அனுப்பினார்கள். யூதர்கள் இஸ்லாத்தையாவது சமாதானத்தையாவது விரும்பவில்லை. அவர்கள் சண்டையே செய்ய வேண்டுமென்றே ஒரே தீர்மானத்துடன் இருந்தார்கள். கோட்டைக்கு முன் ஹள்ரத் (ரலி) அவர்கள் தங்கள் கொடியை நாட்டினார்கள். மாபெரும் வீரனான மர்ஹப், கோட்டைக்குள்ளிலிருந்து கொண்டே தன்னுடைய வீர பராக்கிரமங்களைப் பற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தான்.

அலி (ரலி) அவர்களும் தங்களைப் பற்றிப் பாடிக் கொண்டே முன் சென்றார்கள். வீரன் மர்ஹப், கோட்டையை விட்டு ஆவேசத்துடன் வெளியே வந்தான். அலி (ரலி) அவர்கள் அவனுடன் எதிர்த்துப் போர் செய்து தங்களுடைய வாளை உக்கிரமாய் அவன் மீது வீசவே அவ்வாள் அவனுடைய சிரசைப் பிளந்து பல் வரையிலும் வந்துவிட்டது. இச்சப்தம் வெகுதூரம் வரை கேட்டது. சுத்த வீரனான மர்ஹப், கீழே விழுந்துவிடவே, யூதர்கள் அனைவரும் வெளிக்கிளம்பிச் சண்டை செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் முடிவில் யூதர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.  அக்கோட்டையும் முஸ்லிம்கள் கைவசமாயிற்று. அக்கோட்டை இருபது நாட்கள் உக்கிரமாக முற்றுகை போட்டதன் பின்னரே கைப்பற்றப்பட்டது. இச் சண்டையில் யூதர்களில் 93 பேரும் முஸ்லிம்களில் 15 பேரும் உயிர் துறந்தார்கள். சண்டை முடிந்த பின் முஸ்லிம்கள் நாட்டைக் கைப்பற்ற ஆரம்பித்தார்கள். ஆனால் நாட்டைத் தங்கள் வசம் விட்டுவிடும்படியும் பிரதி வருடமும் விளை பொருளில் பாதியைக் கொடுத்து விடுவதாயும் சொல்லி யூதர்கள் வேண்டிக் கொள்ள, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அதற்குச் சம்மதித்தார்கள்.  

  (சமத்துவ நாயகரின் பொற்பாதங்களைத் தொடர்வோம்!)