ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

புகழ்ப்பூக்கள்

காதலன் வெறும் திரைதான்!

காதலன் வெறும் திரைதான்

பாரசீக மொழியில் இயற்றப்பட்ட பெரும் படைப்பான ‘மஸ்னவி’யை யாத்தவர் மெளலானா ஜலாலுத்தீன் ரூமியாவார். ரூமி பாரசீக மொழியில் இரண்டு கவிதைத் திரட்டுக்களையும், மூன்று உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். புகழின் உச்சாணிக் கொம்பிற்கே ரூமியை அழைத்துச் சென்ற படைப்பே ‘மஸ்னவி’யாகும்.  இக்கவிதைத் திரட்டில் 26,600 அடிகள் இடம் பெற்றுள்ளன.

மஸ்னவி கவிதைக் களஞ்சியத்தின் ஆசிரியரான ரூமி, 1207 ஆம் ஆண்டு பல்க்கில் (இன்றைய ஆப்கானிஸ்தானின் வடபகுதி) பிறந்தார். ரூமியின் தந்தையான பஹாவுத்தீன் 1219 ஆம் ஆண்டு தனது குடும்பத்தோடு நிஷாபூருக்கு (இன்றைய ஈரானில் உள்ளது) புலம் பெயர்ந்தார். ரூமி தனது தந்தையிடமிருந்து ஆரம்பக் கல்வியும், ஷ­ம்ஸ் தப்ரீஸிடமிருந்து ஆன்மீகக் கல்வியும் பயின்றார். இக்கல்வி ரூமியை ஒரு பட்டை தீட்டிய அறிஞராக மாற்றியது. 1273 ஆம் ஆண்டு இன்றைய துருக்கியில் உள்ள கோனியொவிலேயே மரணமடைந்தார். ரூமியின் சமாதி அங்கேதான் அமைந்துள்ளது.

‘மஸ்னவி’ என்றால் இரண்டடி என பொருள். 26,600 அடிகளைக் கொண்ட இக்கவிதைத் திரட்டை, நாம் 13,300 ஈரடிகளாக எடுத்துக் கெண்டால், ஒவ்வொ ஈரடிகளுமே ஒரே எழுத்தைக் கொண்டதாக முடியும்படி உருவாக்கப்பட்டுள்ளது.  மரபுக் கவிதைக்குரிய யாப்பிலக்கண விதிகளின்படி மஸ்னவி இயற்றப்பட்டுள்ளது.  சிறியதொரு உதாரணத்தின் மூலமாக, பெரியதொரு விஷ­யத்தைச் சிந்திக்க வைக்கும் திறனே, மஸ்னவியின் கவித்துவமாகும். இன்னும் சுருங்கக் கூறப் போனால், மஸ்னவி சூஃபி பிரிவுகளின் சங்கமமாகும்.

`ஒவ்வொரு வரியிலும் ரூமியின் ஆன்மீக ஆளுமை, கவிதைச் செறிவு நமக்கு கண்கூடாகத் தெரியும்.

  எல்லாமே காதலி தான்

  காதலன் வெறும் திரை தான்


மஸ்னவியில் கதை, கவிதை, இசை, ஆன்மீகம், குர்ஆன், நபிமொழி, வரலாறு, தத்துவம், உவமானம், உவமேயம், குறியீடு, விளக்கம், நாடகம் என அனைத்து அம்சங்களும் உள்ளன.

வாழ்வியல் முன்னேற்றங்களை இயம்பும் கவிதை வரிகள் மஸ்னவியில் அதிகம் இடம் பெற்றுள்ளன.

ரூமி, மஸ்னவியில் புல்லாங்குழலின் முறையீட்டிலிருந்து தொடங்கியுள்ளார்.  ஆன்மிக கீதத்தை இசைக்க ஆரம்பிக்கிறார். உலகிலேயே சிறந்த குறியீட்டுவாதியாகத் தன்னைப் பதிவு செய்கிறார்.

புல்லாங்குழலைப் பார். அது சொல்வதைக் கேள்!

பிரிவுத்துயரின் முறையீட்டைக் கூர்ந்து கவனி!


உலக விவகாரங்களில், ஆடம்பரங்களில் உழல்பவன், உண்மையில் விழித்திருந்தாலும், இறைவனை மறந்து உறக்கத்திலிருப்பவன் ஆவான். அவன் விழிப்புநிலை உறக்கத்தைவிடக் கீழ்த்தரமானது. அம்மனிதன் உண்மையான விழிப்பு கொள்வதே மேலானது.

மஸ்னவி, ஆசியக் கண்டத்தில் பெற்ற அங்கீகாரத்தைவிட, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அதிக அதிக அங்கீகாரம் கண்டுள்ளது. ரூமியின் வார்த்தைகள், கவிதைகள் அமெரிக்கா நாட்டின் கவியரங்குகளையும், திருமண வைபவங்களிலும் இடம்பெறுகின்றன. பாடப்படுகின்றன. இசைக்கப் படுகின்றன. அமெரிக்காவின் ஒவ்வொரு பிரபல புத்தகக் கடைகளில், பத்துக்கும் மேற்பட்ட ரூமியின் கவிதைகள், சிறுகதைகள் அடங்கிய நூல்கள் விற்பனைப் பிரிவில் தென்படுகின்றன. 

அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் கவிஞர்களில், ரூமி முதலிடம் வகிக்கின்றார். 1960களிலும், அதற்குப் பின்னரும் அமெரிக்காவில் அதிகம் தாக்கத்தை உண்டு பண்ணிய கவிஞர் ரூமிதான் என நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மனிதநேயச் சிந்தனைகள் துளிர்விட, மானுட எழுச்சி பெற ரூமி எழுதியது போல், ஆங்கிலக் கவிஞன் வால்ட் விட்மனின் கவிதைகள் இடம் பெற்றுள்ளதால் அமெரிக்கர்கள் ரூமி மற்றும் விட்மேனின் கவிதைகளை ஒப்பிட்டு வாசிக்கின்றனர்.