ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

பொக்கிஷம்

அமைதி வழங்கும் ஆதிஞானம் !

(15-2-1993 திங்கட்கிழமை மாலை மதுரை அசோக்பவன் உரிமையாளர்  திரு. பட்டாபிராமன் அவர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் நமது சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள் நிகழ்த்திய ஆன்மிகச் சொற்பொழிவின் சாராம்சம்)


தமிழ்ச் சொற்களோ, அரபிச் சொற்களோ எதுவான போதும் அவை வேதத்தை மட்டுப்படுத்துவதில்லை.

அதாவது தமிழ்ச் சொற்களைச் சொல்வதால் இஸ்லாமியர் மனம் புண்படப் போவதில்லை. அதே போன்று அரபி வார்த்தைகளைச் சொல்வதால் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மனம் புண்படப் போவதில்லை.

சொற்கள் எம்மொழியாயினும் அவற்றின் கருத்துக்களை அச்சொற்களின் தாற்பரியத்தைத் தான் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு பாடப்பட்ட பாடல்களில் ஏகம் ஆதி என்பதனைப் பற்றிய வியங்கள்தான் கூறப்பட்டன.

ஆதி என்பது ஆதி அற்ற நிலை. இதற்கு முன்னால் எனக் கூறிக் கொள்ள முடியாத நிலையே ஆதி நிலையாகும்.

ஆதியே இறைவன். அந்த ஆதி இறைவனை இந்தப் பாமாலைகள் கொண்டு புகழ்ந்து பாடப்பட்டன. மேலும் ஆதி என்னும் போது ஆதிக்கு ஆதியும் அதற்கு ஆதியும் இல்லை.

ஆதி என்பது ஒன்றே எங்கும் ஆதியான நிலை. ஓரிடம் இல்லாத நிலை.  சூன்யமான நிலை. அப்பொழுது எங்களுக்கு (நம்மிடையே) எந்த விதமான பேதமும் இல்லை.

ஆண்களோ, பெண்களோ, மிருகமோ இப்படியான பஞ்ச பூதங்களோ ஆகிய எந்த வகையான மாற்றங்களும் எந்த விதமான பேதங்களுமின்றி ஒன்றாக அந்தக் காலத்தில் இருந்தோம்.

அந்தக் காலத்தில் எனும் போது பூரணமான நிலையிலிருந்தோம்.  அப்படியிருந்த நாம் எப்படி இங்கு வந்தோம்?

(அந்தப் பரிபூரணம்) ஓர் அசைவை நாடியது. நாடியதும் இக் கோலத்தில் வந்துவிட்டோம்.

மனிதர்களாக - மிருகங்களாக - மண்ணாக - காற்றாக - பறவைகளாக - இப்படிப் பலவகை உருவங்களைக் கொண்டு வந்த பிறகு நாம் பேதப்பட்டு விட்டோம். பல வேறுபாடுகளைக் கொண்டு வந்தோம். எங்கிருந்தோம் என்பதனையும் எவ்வாறிருந்தோம் என்பதனையும் மறந்து விட்டோம்!

எனவே, வேறுபாடுகளை மறந்த  நாம் எப்படியிருந்தோம்? எவ்வாறிருந்தோம்? அப்போதிருந்த நிலையில் தான் இப்போதும் இருக்கிறோம் எனும் உண்மையை நினைத்துக் கொண்டால் - பூரணமான ஒரு நிம்மதி நிலை மனிதனின் உள்ளத்தில் பிரகாசிக்கும்.

அந்தப் பிரகாசம் தான் பரிபூரண நிலை இருக்க வேண்டிய மனம் என்னும் சிம்மாசனம் என்னும் சிறப்பான தானமாகும்! எனவே, இறைவன் எங்குள்ளான்? என்றால் பரிசுத்தமான மக்களின் கண்ணோட்டத்தில் இருக்கின்றான். உள்ளத்தில் இருக்கிறான். உள்ளும் புறத்தும் இருக்கிறான். நாமாகவும் இருக்கிறான். நானாகவும் இருக்கிறான். அவனாகவும் இருக்கிறான். அதாகவும் இருக்கிறான். அதாவது பேதமற்ற நிலையில் இருக்கிறான் என்பதாகும்.

இவற்றை உணர்ந்து கொள்வோமானால் எங்களில் (நம்மில்) எந்தக் குழப்பமும் கட்டுப்பாடும் (வேறுபாடும்) இருப்பதில்லை. இஃதுவே தான் ஆதி ஞானம் என்பதாகும். இக்கருத்துக்ளைத்தான் சென்ற வருட (வரவேற்பு)க்கூட்டத்திலும் கூறினோம். அவற்றின் உட்கருத்தை விளங்கியிருப்பீர்கள் என நம்புகிறோம்.

இச்சிறு விளக்கம் இப்போது அனைவருக்கும் சிறப்பாக விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம்.


பேதங்கள் யாவும் நீங்கி - சிறப்புடன் வாழ அந்த இறை அருள் புரியுமாக எனக் கேட்டுக் கொண்டு (இவ்வுரையை) முடித்துக கொள்கிறோம்.

   தொகுப்பு : ஆஷிகுல் கலீல், திருச்சி