ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

கலீபா பெருந்தகைகள்!

தமிழ் மாமணி, மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி

வலிய்யுல் கறீம்

கலீபா வலிய்யுல் கறீம் அவர்கள் ஒருமுறை கூறினார்கள்:

1970 ம் வருஷம் நவம்பர் மாதம் பிற்பகுதியில் ஹக்கின் புறத்திலிருந்துள்ள அறிவிப்பாக ஓர் அற்புதமான மனாம் கண்டேன். அதில் தர்பாரின் பக்தர்களில் ஒருவருடைய இடத்தில் ஓர் ஆசனத்தில் முதியோர்களும் சூஃபியாக்களுமாகிய சிலருடன் வரிசையாக நானும் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த வரிசையில் முதலாவதாக அமர்ந்திருக்கும் பெரியார் ஏதோ எழுதப்பட்ட பூஞ்சிவப்பு நிறமுள்ள ஒரு கவரை கையில் வைத்துக் கொண்டு அதில் எழுதப்பட்டிருப்பதை வெகு நேரம் வரையிலும் மிகுந்த வியப்புடனும் சாந்தத்துடனும் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு வரிசையில் அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக அமர்ந்திருக்கும் என் பக்கம் திரும்பி அந்தக் கவரை என்னிடம் கொடுக்கிறார். அதை நான் வாங்கி அதன்மேல் எழுதப்பட்டிருக்கும் செய்தியை சிரத்தையுடன் படித்துப் பார்த்தேன்.


  அரபியில் அது இவ்வாறு எழுதப்பட்டு இருக்கிறது. மினஸ் ஸைய்யிதி கலீலி அவ்னில் ஹக்கில் முபீனி. அதன் தாற்பரியமாகிறது. பகிரங்கமாக வெளியாகியிருக்கும் ஹக்கு (பிரம்மம்) ஆகிய ஸய்யிது கலீல் அவ்னிலிருந்து என்பதாகும். சுப்ஹானல்லாஹ். இம் மாபெரும் அறிவிப்பின் மூலம் ஷைகு நாயகம் அவர்களின் மகத்தான ஸ்தானம் (மகாம்) என்ன என்பதை சத்திய ஹக்கு புனித அறிவிப்பு செய்துவிட்டது. அதன்பின் எனக்கு அடுத்தபடியாக அமர்ந்திருக்கும் சூஃபியாகிய பெரியார் அதை ஆவலுடன் பார்க்கத் துடிக்கிறார். நான் அதை அவர் கையில் கொடுக்கிறேன். இவ்வாறான முறையில் அந்தப் புனித கனவு நடந்து முடிந்தது. என்னே! நமது குத்பு நாயகத்தின் மகோன்னத நிலை! (அல்ஹம்துலில்லாஹ்)ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை மாதக்கூட்டமொன்றில் வலிய்யுல் கரீம் அவர்கள், தமக்கு சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் அருளிய பட்டோலை ஒன்றைப் படித்துக் காட்டினார்கள். ஷரீஅத்தும் ஹகீகத்தும் பூமியும் வானமும் போன்றது. அதுவே உடலும் உயிரும் போன்றது. ஷரீஅத்தின் படியில் ஏறியவர்கள் அப்படியே நின்றுவிடாது ஹகீகத்தின் படியில் நிச்சயம் ஏறுதல் வேண்டும். உயிர் இல்லாவிட்டால் உடல் என்ன செய்யும்? உயிரில்லாத உடல் பிணமாகும். உயிரே ஒரு மாபெரும் சக்தி. அது எதையும் செய்ய முடியுமானது. அதுவே ஜோதிப் பிரவாகம்.


உலகமே பொய்யானது. அதில் உள்ள எல்லாம் பொய்யானவை. வெளியிலே நம் கண்ணுக்குப் புலப்படும் அனைத்தும் பொய்யானவையே. அவற்றின் இரகசியமே (பாத்தினிய்யா) உண்மையானது. அது இல்லை என்னும் இரகசியத்தில் பொதிந்திருக்கும் உண்டு என்னும் மாபெரும் உண்மையாகும்.


  வந்தவழி என்னவென அறிய வேண்டும்

  சிந்தனையில் வைத்ததனை வாழ வேண்டும்

  வந்தவழி போவதுண்மை அஞ்ச வேண்டாம்

  சொந்தவிடம் செல்வதற்கோ கவலை வேண்டாம்.     


 (பட்டோலைகள் பட்டொளி வீசும்.)