ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

நேரம் உயிர் போன்றது!
சுலைமான், 7ஆம் படிவ மாணவர், ஜாமிஆயாஸீன்- திருச்சி.

காலத்தின் மீது சத்தியம் செய்யக்கூடிய இறைவனைப் போற்றியவனாகவும், ஒவ்வொரு நிமிடத்தையும் நமக்கு போதனையாகத் தந்து நாமும் அவர்களைப் பின்பற்றி சாதனை அடைய வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போற்றியவனாகவும் என் எழுத்தைத் தொடங்குகிறேன்.

ஒருவனிடம் நிறைய செல்வங்கள் இருந்தது. சிறிது காலம் சென்றவுடன் அவனிடம் இருந்த செல்வங்கள் எல்லாம் காணாமற் போய்விட்டது. அதாவது செலவாகி விட்டது. அவனும் ஏழையாகி விட்டான். பிறகு காணாமல் போன செல்வங்களைத் தன் கடுமையான உழைப்பின் மூலம் திரும்பப் பெற்று விட்டான். 

இதைப் போல் ஒருவனிடம் மிகப் பிரம்மாண்டமான வீடு இருந்தது. அது தரைமட்டமாக்கப்ட்டது. அவன் கவலை கொள்ளவில்லை. மீண்டும் இன்னொரு வீட்டை முன் கட்டியதை விட அழகானதாகவும், மிகப் பெரியதாகவும் கட்டினான்.  எதை இழந்தாலும் மனிதன் திரும்பப் பெற்று விடுகிறான். சொத்து, சுகம், சத்து இவைகளில் எதை இழந்தாலும், பணத்தின் மூலமாகவோ, அவனின் உழைப்பின் மூலமாகவோ பெற்று விடுகிறான். ஆனால் அவன் எவ்வளவு பணத்தைக் கொடுத்தாலும், எந்தக் கடையிலும், எந்தச் சந்தையிலும், எந்த அரசனிடத்திலும் எந்தவொரு மனிதரிடத்திலும் பொக்கிஷத்தை விட அணு அணுவாகச் செலவழிக்க வேண்டிய நேரம் எனும் அருட்கொடையை மட்டும் திரும்பப் பெறவே முடியாது.  ஏன் தன் உயிரைக் கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது.

எனவேதான், மேலை நாட்டவர் நேரத்தைப் பற்றிக் கூறிய வைர வரி:

  TIME IS GOLD - நேரம் பொன் போன்றது.

நம்மிடம் அதிகமான தங்கமோ, பணமோ இருக்கின்றன. அதை நாம் எப்படிச் செலவழிக்கப் பயப்படுகிறோமோ, அப்படியும் செலவழித்தால் ஏதாவது முக்கியமான நற்காரியங்களுக்காக அதில் பயன் இருக்கிறது என்று தெரிந்தால் தான் செலவு செய்வோம். அதைப் போல நேரத்தைச் செலவழிக்க ரொம்ப பயப்பட வேண்டும். நாம் செலவழிக்கின்ற ஒவ்வொரு நொடியும் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய நாடித் துடிப்பாக இருத்தல் வேண்டும்.

இதைத்தான் நம் முன்னோர்கள்,

“காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்றார்கள்”

ஆனால் உண்மை இதுவல்ல. காலம் பொன் போன்றதல்ல. பொன்னை விட மேலானது. ஏன் தெரியுமா, பொன்னை இழந்தால் மீண்டும் பெறலாம்.ஆனால் காலத்தை இழந்தால் மீண்டும் பெறவே இயலாது.

“சென்று விட்ட காலம்
பேசி விட்ட வார்த்தை
எய்து விட்ட அம்பு”

இம்மூன்றையும் திரும்பப் பெற இயலாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகக் கவனித்து சிந்தித்துச் செலவழிக்க வேண்டும்.

“பணத்தை செலவழித்தால் தான்குறையும்.

கனத்தை இறக்கினால் தான் குறையும்.

சோப்பை உபயோகித்தால் தான் குறையும்

தப்பை உணர்ந்தால் தான் குறையும்’’

ஆனால் நீ எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தாலும் நேரம் குறையும்.

“காலமும் கடல் அலையும் யாருக்காகவும் காத்திருக்காது;  தக்க காலத்தில் செய்யப்படாத எதுவும் வெற்றி பெறாது”


நாம் நேரத்தின் விலையை உணராமல் பொடு போக்காக இருந்து கொண்டிருக்கின்றோம். மக்கள் நேரத்தின் மதிப்பை உணர மாட்டார்கள் என்பதற்காகவே அல்லாஹ் நேரத்தின் மீது சத்தியம் செய்து அதன் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறான்.


1. அதிகாலையின் மீது சத்தியமாக.

2. காலத்தின் மீது சத்தியமாக.

3. பத்து இரவுகள் மீது சத்தியமாக எனப் பல இடங்களில் காலத்தின் மீது சத்தியம் செய்கின்றான்.

இஸ்லாம் என்பதே ஒரு குறிப்பிட்ட நேரத்தின் அடிப்படையில்தான் வகுக்கப்பட்டது. “உழைப்பவனுக்கு நேரம் போதாது; ஊதாரிக்கு நேரம் போகாது”.


உழைக்கக் கூடியவன் எவ்வளவு நேரத்தைச் சேமித்தாலும் அவனுக்கு அந்த நேரங்கள் போதாது. ஊதாரியாக எந்தவொரு இலட்சியமும் இல்லாத ஒருவனுக்கு ஒரு நாளே ஒரு வருடத்தைப் போல் மலையாகத் தெரியும். ஆகவே இந்த இரண்டில் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்?


நேரத்தின் மதிப்பை உணர்ந்து முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் மனிதனைப் போலவா? இல்லை நேரத்தின் மதிப்பை உணராமல் வெட்டியாகக் கழித்துக் கொண்டிருக்கும் ஊதாரி போலவா?

அதை நீங்களே தீர யோசித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத்தின் அருமையைத் தொடர் வண்டியைத் தவற விட்டவனிடம் கேட்டுப் பாருங்கள்.

ஒரு நொடியின் பெருமையை ஒலிம்பிக் களத்தில் பதக்கத்தைப் பறிகொடுத்தவனிடம் கேட்டுப் பாருங்கள்.

தொழுகைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலே கூறும்போது,

“நிச்சயமாக தொழுகை என்பதுநேரமும் காலமும் குறிப்பிட்ட வணக்கமாகும்”

நேரத்தை சென்னை வாசிகள் எப்படித் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவு செய்வார்களோ அதைப் போலச் செலவு செய்ய வேண்டும்.

நாம் சொத்து, பணம் இவைகளை சேமிக்கின்றோம். ஏன் - எதற்காக சேமிக்கின்றோம்? நாம் இறந்த பின் இவை நம்மோடு வரப் போகிறதா?

ஆனால் நாம் நேரத்தைச் சேமிக்காமல் வீணான பொழுது போக்கிலே அதைக் கழித்துக் கொண்டிருக்கின்றோம்.

நேரத்திற்கு உண்டான தனிச் சிறப்பு அதை யாராலும் சேமிக்க முடியாது.

“It Can’t Be Saved”

வீணாகப் பொழுது போக்குபவருக்கு பொழுதை வீணாக்கி விட்டோமே என அழுது புலம்புவதுண்டு. பொழுது போகவில்லையே என அலம்பல் செய்வோரும் உண்டு.

நாம் எத்தனையோ, வீணான பொழுதுபோக்கில் எவ்வளவோ நேரத்தை வீணாக்குகின்றோம். அந்த நேரத்தில் பயனுள்ள ஒரு புத்தகத்தைப் படிக்கலாம். பயனுள்ளதைச் செய்யலாம்.

நேரத்தை உயிர் போல் கருதுதல் வேண்டும். ஒரு நொடி நம்மை விட்டுக் கடந்தால் அது மீண்டும் திரும்பாது. ஒரு நாள் முடியும் போது நம் ஆயுளில் ஒரு நாள் குறைகிறதே என்று கவலைப்படல் வேண்டும். 

தள்ளிப் போடுகின்ற வேலையை உடனே முடியுங்கள்.

 உருது மொழியில் பொறிக்கப்பட்ட வாசகம்:

“ஆஜ் கா காம் கல் பர் நடால்” 

-  இன்றைய வேலையை நாளை தள்ளிப் போடாதே. இது நம் மனதில் பொறிக்கப்பட வேண்டிய வாசகம்.

ஓர் அறிஞன் கூறியுள்ளான்:

“நேற்றைய நாள் இன்றைய நாளைத் தின்று விடாமல் இருக்கட்டும்”

நீங்கள் ஒவ்வொரு வேலையையும் அந்தந்த  நேரத்திலே செய்தால், நிச்சயமாக நீங்கள் வெற்றியாளர்களே. அப்படி இல்லை யென்றால் நிச்சயமாக நீங்கள் தோல்வியாளர்களே.

வாழ்க்கையில் முன்னேறியவர்களின் வாழ்க்கையைத் தயாரித்து அவைகளைக் கணக்கெடுத்துப் பார்த்தால் அவர்கள் மகா கஞ்சர்களாக இருந்தார்கள்; எதில்?

நேரத்தைச் செலவிடுவதில். உடலமைப்புக் கலை அறிஞராகிய ஜான் ஹண்டர் முதுமையிலும் ஓயாது வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் இன்னுமா வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு டாக்டர் கேட்ட பொழுது, ஆம் டாக்டர்  நான் போன பின் மற்றொரு ஹண்டரைக் காண முடியுமா? என்று பதில் கூறினார்.

நம் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான பெரிய பெரிய இமாம்களால் எப்படி 500 க்கும் அதிகமான புத்தகங்கள் எழுத முடிந்தது.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களால் 999 கிதாபுகளை எப்படி குறுகிய காலத்தில் எழுத முடிந்தது?

அவர்கள் நேரத்தைத் திட்டமிட்டு, இறைவனுக்கு பயந்து ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகக் கழித்ததால் அவர்களால் இவ்வளவு நிறைய அருமையான புத்தகங்களை உருவாக்க முடிந்தது.

உலகத்தையே ஆண்ட மாமன்னர் அலெக்ஸாண்டர் ஒரு பயணத்தின் போது கடுமையான நோய்வாய்ப்பட்டு இருந்தார். நாட்கள் போகப் போக அவர் மரணத் தருவாயை நெருங்கிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த தமது சகோதரர்களை அழைத்து உங்களில் யாரேனுமொருவர் தன் நேரத்தைக் கொடுத்து என் வீடு வரை என்னைச் சேர்த்து விட முடியுமா என்று கேட்டார். இதற்கு யாராலும் பதிலளிக்க முடியவில்லை.

உலகத்தை ஆண்ட அரசன் கூட தன் இறுதி நாளில் உலகிற்கு அளித்த உபதேசம், மனிதனுக்குக் கொடுக்கப் பட்ட கால அவகாசத்தை அவன் தவறவிட்டால் அது தவறிவிடும் என்பதுதான்.

உலகில் முன்னேறியவர்கள் முன்னேறக் கூடியவர்களுக்கு கூறும் பாடம்:

1. நேரம் தவறாமை

2. நேரக் கஞ்சர்களாக இருப்பது.

இமாம் ஷாஃபியீ ரஹ்மத் துல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

“நேரத்தை நீ வெட்டாவிட்டால் அது உன்னை வெட்டிவிடும்”

ஆகவே வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைவது காலம் அறிதல் ஆகும்.

“அழுது புரண்டாலும் அணை தாண்டிய வெள்ளம் மீண்டும் வராது” - என்ற பழமொழியை போல் தவறவிட்ட காலமும் திரும்ப வரவே வராது என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். இதை மனதிற் கொண்டு காலத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கெள்ளல் வேண்டும்.

நாம் எப்படி நேரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது? ஓய்வு நேரத்தை சுருக்குங்கள். சோம்பேறித் தனத்தை மூட்டை கட்டிவிடுங்கள். வீண் அரட்டைகளைத் தூக்கி எறியுங்கள். உபயோகமில் லாதவரின் நட்பைத் துண்டியுங்கள். உங்கள் நேரத்தை விரயமாக்கும் செயல் எந்தச் சூழ்நிலையில் வந்தாலும் தவிருங்கள்.

நாளை மறுமை நாளில் உன் வாலிபத்தை எவ்வாறு செலவு செய்தாய், உன் ஆயுளை எவ்வாறு செலவழித்தாய் என்று கேட்கப்படும். அக்கேள்விக்கு நாமும் பதில் சொல்வோம்.

ஆகவே நேரத்தை நம் உயிரினும் மேலாகக் கருதி அதை நல்ல வழியில் செலவழித்து நாமும் பலருக்கு முன்னோடியாகத் திகழ்ந்து மறுமையில் இறைவனால் கேட்கப்படும் கேள்விக்கு நல்ல பதில் சொல்வோமாக.

ஆமீன்!