ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

சிந்தனை

ஷிர்க் - இணை வைத்தல்

A.N.M. யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய் - கத்தார்


இறைவன் மன்னிக்காத கொடிய பாவம் இறைவனுக்கு இணை வைத்தல் என்பதாகும். அதாவது இறைவனுக்கு ஈடாக மற்றொன்றைக் கருதுதல், இறைவனுக்குத் துணையாக இன்னொரு இருப்பு உள்ளது என்று நினைத்தல், கூறுதல் இணையாகும். இங்கு இறைவன் தன்னுடைய ஆதி நிலையாகிய அமா என்னும் நிலையிலிருந்து இன்று வெளியாகிய, மறைந்துள்ள அனைத்துமாகவும் அவனே இருக்கிறான் என்பதே உண்மை. இறைவனுக்கு முன்பு ஏதும் இல்லை என்றால் இப்போது வெளியாகியுள்ள இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் அவனிடமிருந்தே வெளியாகியுள்ளன என்பதுதானே உண்மை.

எனவே இப்பிரபஞ்சம் அனைத்தும் ஓருடலாக அதிலுள்ள அனைத்துமே அவனாகவே இருக்கிறான் என்பதை கருதுதல் அவசியம். பார்ப்பதற்கு இப்பிரபஞ்சத்திலுள்ள பஞ்ச பூதங்களும், தாவரங்களும், பட்சிகளும், கோள்களும், உயிரினங்களும் மனிதனுக்குத் தனித்தனியாக இயங்குவதாகக் காட்சி அளித்தாலும் இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடன் இடைவெளியின்றி ஒன்றாகவே இயங்குகின்றது என்பது சிந்திக்கும் எந்த மனிதனும் அறியற்பாலதே!

இறைவன் தன்னை அறிய நாடி இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் தன்னிலிருந்து வெளியாக்கி அதை மனிதன் தனது கலீபாவாக இருந்து அறிந்து கொள்ள ஆசை கொண்டுள்ளதை குர்ஆன் மூலம் விளக்கியுள்ளான். எனவே இதில் எந்த எந்த வஸ்துக்களும் தனித்தனியாகக் காட்சி அளித்தாலும் இவை அனைத்தும் பரிபூரணமான இறைவனின் ஒரே இருப்பு என்ற உண்மையில் இருந்து வேறுபடும் எந்த சிந்தனையுமே சிர்க் இணை வைத்தலாகும் என்பது தெளிவாக விளங்கும்.  இறைவன் இருப்பதை இவ்வுலக இயக்கத்தின் சீரான இயக்க நிலையைக் கொண்டு எல்லோரும் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் இவ்வுலகத்திலுள்ள அனைத்தும் தனித்தனியாக இருப்பதைக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான இருப்பு நிலை இருப்பதாக நினைத்து நாமும் இருக்கிறோம்;


இறைவனுக்கும் வேறு வேறு இருப்பு நிலைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இறைவன் என்ற ஒன்றேயான இருப்பு நிலையில் தான் பஞ்ச பூதங்களும், கோள்களும், தாவரங்களும், பட்சிகளும், உயிரினங்களும், மனிதனும் இருக்கிறான் என்பதே உண்மை. எனவே இந்த நிலையில் இருந்து சிந்திக்காத செயல்படாத நிலையில் தான் சிர்க் ஏற்படுகிறது.


இந்த ஏகத்துவ நிலையைத்தான் கலிமா இறைவனைத் தவிர வேறு ஏதும் இல்லை என்றும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனுடைய திருத்தூதர் என்றும் பறை சாற்றுகிறது. இங்கு மேலே கூறியுள்ள இறைவனுக்கான பிரபஞ்சத்திலுள்ள எல்லாமும் ஒன்று சேர்ந்த ஒரே இருப்பு நிலையைக் கொண்டுள்ளது என்பதை தனது ஹபீபான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு இந்த உலக மாந்தர்கள் அனைவருக்கும் தவ்ஹீதான இத்தன்மையை விளக்கி மனிதன் சிர்க் என்னும் இணை வைக்கும் பாவத்தில் இருந்து மீண்டு கொள்ள அறிவுறுத்துகிறான். எனவே இதன்மூலம் இவ்வுலகத்திலுள்ள, பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் மூலமான இறைவனுக்கு மட்டுமே இருப்பு நிலை சொந்தமானது என்பதும், இங்குள்ள அனைத்தும் ஒரே உயிராகவும், உடலாகவும்; எப்படி ஒரு திரைப்படத்தில் எத்தனை கதாப் பாத்திரங்கள், சம்பவங்கள் வந்தாலும் அவை அனைத்தும் அந்த படத்தின் கதையாக உள்ளதோ அதே போல் உள்ளது என்பதை விளங்க முடியும்.


    எனவே இதை விளங்கிக் கொண்டவர்கள் இறைவனின் கோபமான சிர்க் நிலையில் இருந்து விலகிக் கொண்டனர். அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த தவ்ஹீது கொள்கையை அப்படியே ஏற்றுப் பின்பற்றி நடந்து கொண்டுள்ள நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயரிய புனிதத் திருக்குடும்பத்தினர்கள், கலீபாக்கள், சஹாபாப் பெருமக்கள், அவ்லியாக்கள், குத்புமார்களை பின்பற்றி நடப்பார்கள்.

இந்நிலையை, அறிவை ஏற்று பின்பற்றி நடக்காதவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி இவ்வுலகத்தில் பாவத்தில் சிக்குண்டு தவித்து மரணத்திற்குப் பிறகு நரகத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். எனவே மக்களைப் பாவத்தில் இருந்து மீட்க வந்த ஏக இறைத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, எங்களை பாவத்தில் இருந்து மீட்பவர்கள் என சுபுஹான மெளலிதில் புகழ்ந்திருப்பது சாலப் பொருத்தமான பொருத்தம் தானே!

பாவங்களின் தோன்றுதுறை என்பது சிர்க் என்னும் கொடிய பாவத்தை செய்வதே என்பது சிந்தித்தால் நன்கு விளங்கும். இறைவனே அனைத்துமாக இருக்கும் போது, இந்த உலகில் வாழும் எந்த உயிருக்கும் தீங்கு செய்வதோ அல்லது மனிதர்கள் தனக்குத்தானே தீங்குகள் செய்வதோ இறைவனின் உண்மையில் இருந்து தன்னை மட்டும் தனியாகப் பிரித்து அதன் மூலம் சக மனிதர்களையோ, அல்லது சக உயிரையோ தனியாகப் பிரித்து இந்த சிர்க் நிலையில் இருந்தே சகல பாவங்களைச் செய்கிறான். எனவே இந்த சிர்க் நிலை இல்லாத மனிதர்கள் சக உயிரினங்களை, மனிதர்களை தன்னைப் போல் பாவித்து அனைவரும் இறைவனின் ஓருயிர், ஓருடல் என்பதை அறிந்து ஒருவருக்கு ஒருவர் அன்புடன் உதவியுடன் வாழ்ந்து இறைவனின் திருத்தூதரின் வாழ்க்கை நெறி மூலம் இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.


எனவே இந்த நிலையில் தவ்ஹீது தன்மையுடன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய, இனி வாழ வரக்கூடிய அத்துணை மகான் களையும் பின்பற்றி நடக்கக் கூடிய மனிதர்கள் மட்டுமே சிர்க் நிலையில் இருந்து விலகி முற்றிலும் இறைவனோடு இறைவனுக்குப் பொருத்தமான வாழ்வை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இன்று மகான்களைப் பார்த்தும், அவர்களைப் பின்பற்றி வாழும் மனிதர்களைப் பார்த்து தனக்கு ஓர் இருப்பு நிலையையும் இறைவன் என்ன வென்று அறியாது அவனுக்கு ஓர் இருப்பு நிலையைக் கொண்டும் சிர்க் நிலையில் வாழும் மனிதர்கள், மகான்கள் சிர்க் செய்கிறார்கள் என்று கூறுவது கேலிக்கும் நகைப்புக்கும் உரியதாகிறது. மகான்களோ இறைவனின் இருப்பு நிலையில் தான் இப்பிரபஞ்சம் முழுவதும் உள்ளது என்று சிர்ருகளை அறிந்து அதில் வாழ்பவர்கள். எனவே அவர்களிடம் அவர்கள் சொல் கேட்டு நடப்பவர்கள் சிர்க் என்னும் கொடிய பாவம் தன்னைச் சேராமல் பாதுகாத்துக் கொண்டு இறைவனின் சாபத்தை விட்டும் விலகியவர்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


      கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய பாவங்கள் சிர்க் என்னும் கொடிய பாவத்தின் மூலமாக விளைந்ததே என்பது சிந்திப்பவர்களுக்கு நன்கு விளங்கும். மனு ஜின்களை என்னை வணங்குவதற்காக வேயன்றி படைக்கவில்லை என்று இறைவன் கூறுவதை எடுத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதே போல், வாழ்க்கை முழுவதையும் இபாதத் (வணக்கம்) ஆக்கிக் கொள்பவர்கள் என்ற நாயக வாக்கை நன்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.


இறைவன் தன்னை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்தான் என்றால் வாழ்நாள் முழுவதும் பள்ளிவாசலில் நாம் இருக்க வேண்டும். ஏனெனில் வணக்கம் என்பதை நாம் அறிந்து வைத்துள்ள இடம் தொழுகை மட்டுமே. எனவே மற்ற வேலைகளான சம்பாதித்தல், உண்ணல், குடித்தல், உறங்குதல், உறவு கொள்ளுதல் என்ற நிலைமையும் இறைவனுக்குப் பொருத்தமற்றவையாகத் தோன்றும். ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்ற சொற்களை எடுத்து நோக்க, யோசிக்க வாழ்வு முழுவதும் இபாதத்தாக்கிக் கொள்ளும் வழியும் உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே முதலில் இறைவனை அறிய வேண்டும், அப்படி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்தியுள்ளபடி இறைவனை அறிந்தால், நாம் அவனுக்கும் நமக்கும் இரு வேறு நிலைகளை கொள்ளாது ஒவ்வொரு மனிதரும் தனித் தனியானவர்கள் என்று எண்ணாமலும் ஒரே இறைவனின் இருப்பு நிலைதான் அனைத்தும் என அறிந்து கொண்டால் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களும் இபாதத் ஆகிறது (வணக்கமாகிறது).  எனவே இறைவனை அறிந்தவர்களுடன் இருந்து வாழ்வைப் பேணுபவர்களுக்கு வாழ்வு முழுவதும் வணக்கமாகவே ஆகும். 


இறைவனை அறியாமல் நேசர்கள் மேல் பொறாமை கொண்டு சிர்க் நிலையில் வாழும் மனிதர்களின் அனைத்துச் செயல்களுமே இறைவனால் நிராகரிக்கப்பட்டு மீளாத நரகத்தில் வாழும் நிலையும் ஏற்படும். எனவே ஒரே இருப்பு நிலை; அது இறைவனுக்கே உரியது என வாழும் மகான்களை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையில் இனம் கண்டு பின்பற்றி வாழ்வதுதான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அதன் மூலம் ஏக இறைவனுக்கும் பொருத்தமான சொர்க்க வாழ்வாகும் என்பதை அறிந்து இயங்க வேண்டும் என்பதே மனிதர்கள் அறிய வேண்டிய தலையாய விஷயமாகும்.


அழிக சிர்க்! ஒழிக பாவம்! வாழ்க மகான்கள்! வளர்க சுத்த தவ்ஹீத்!