ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      May   2014      »     ஞானப்பால்

ஞானப்பால்

மெளலவி K . சையது அபூதாஹிர்நூரி , சித்தரேவு .


எல்லாம் வல்ல அல்லாஹ் தனது படைப்புகளுக்கு வழங்கியுள்ள பெரும் பேறு இஸ்லாம் எனும் உயரிய நெறியாகும். இஸ்லாம் என்னும் அறபுச் சொல்லுக்கு சரணடைதல், அடிபணிதல், சாந்தி அல்லது அமைதியுறல் எனப் பொருள்கொள்வர். இஸ்லாம் மனிதனின் ஆன்மிக ஆற்றலை மிக உன்னதநிலையில் எடுத்துக்காட்டும் எழிலார்ந்த நெறி. மனிதனை படைப்பினங்களில் சிறந்த படைப்பு என்றும், இவ்வுலகில் இறைவனின் பிரதிநிதி என்றும் கூறுவது சிந்தனைக்குரியது. தெய்வீகமான தன் அமரத்துவ ஆத்மாவை எவன் தன் ஊடுருவிப் பார்க்கும் மெய்யறிவால் ஊடுருவிப் பார்த்து தனக்குள் தானே தன் தலைவனைக் கண்டுகொள்கிறானோ அவனே சம்பூரண இலட்சிய மனிதனாவான் என்ற அல்லாமா இக்பாலின் கருத்து அருள்நெறி இஸ்லாத்தின் அழகிய நோக்கத்தைப் புலப்படுத்துகிறது . சம்பூரணமான மனிதனை சமைத்துக் காட்டும் பெரும் நெறியே இஸ்லாம் ஆகும்.


மார்க்க விஷயத்தில் முதன்மையானது அல்லாஹ்வை அறிவதாகும்.என்பது செம்மல்  நபி ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம் அவர்களின் சீருரையாகும். அல்லாஹ்வை அறிந்து கொள்ளும் அறிவுக்கே ஞானம் என்று கூறுவர் ஆன்றோர். அருள்மறை குர்ஆன் அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே ஞானத்தைக்கொடுக்கிறான். ஆதலால் எவர் ( கல்வி ) ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாகஅநேக நன்மைகளைப் பெற்று விடுவார்.   ஆயினும் இந்த ஞானக்கல்வியைக் கொண்டு அறிவாளிகளைத்தவிர மற்ற எவரும் உணர்ச்சி பெற மாட்டார்கள் என அல்குர்ஆன் (2:269) தெளிவுபடுத்துகிறது. ஞானம் எளிதாகக்  கிடைக்கும் கடைச் சரக்கல்ல. அசைவுறா  உள்ளமும், அயர்விலா முயற்சியும் , தளர்விலாப் பயிற்சியும் ஞானம் பெற இன்றியமையாதன. ஞான மாமேதை, தக்கலை தந்த தவசீலர் ஞானம் பற்றி கவிதைகளில் நயமுடன் நவின்றுள்ளார்கள். அது ஞானம் பெற விழைவோர்க்கு விருந்தாக அமைகின்றது.


அப்பா அவர்களின் ஞானக் கோவையில் பிஸ்மில் குறம் பகுதிக்கு அடுத்தாற்     போன்று ஞானப்பால் எனும் பகுதி இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் 33 பாடல்கள் உள்ளன. இவை பல அரிய கருத்துகளை ஆழமான சிந்தனைக்கு வழி வகுக்கும் கருத்துகள் கொண்டதாக உள்ளன. இஞ்ஞானப் பாலின் சுவையைத் தெரிந்து கொள்ள சில அடிப்படையான உண்மைகளை அறிவது அவசியம்.


மனிதன்வெறும் மாமிசப் பிண்டமல்ல. மனிதனிடத்தில் இறைவனின் அகமியம் இடம் பெற்றுள்ளது . இந்த அகமியத்தை மனிதன் புரிந்து கொண்டால் தன்னை அறிந்து கொண்டவன் ஆகிறான் . யார் தன்னை அறிந்து கொள்கிறானோ அவன் அல்லாஹ்வை அறிந்து கொள்கிறான். யார் அல்லாஹ்வை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.   இறைவனை அண்மிப்பவர்கள் இருநிலை நீங்கி இன்ப நிலை அடைகிறார்கள்இப்பேரின்ப நிலை பெறுவதே பெறற்கரிய பேறாகும்.


நான் அல்லாஹ்வின் நூரில் ( ஒளியில் ) நின்றும் உள்ளவன்; அகிலத்தின் அனைத்துப் பொருட்களும் என் ஒளியில் நின்றும் உள்ளன என்பது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளுரை. இறைவனின் அந்தரங்க அகமியத்தை அஹ்மது முஸ்தபா    ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் கொண்டு வந்தார்கள் . சிறப்புடைய சான்றோர் அதை நெஞ்சுக்கு நெஞ்சாகப்பெற்றுள்ளார்கள் என்பது பாரசீகக் கவிதை தரும் உண்மையாகும். மனிதன் நான்கு போர்வைகளால் போர்த்தப் பட்டிருக்கிறான் .ஜிஸ்மு எனும் உடல், கல்பு எனும் உள்ளம் , ரூஹ் எனும் ஆன்மா , ஸிர்ரு எனும் அந்தரங்கம் ஆகிய நான்கு போர்வைகள். உடல் எனும் போர்வைக்குரிய நிலை அவரது அலங்காரமாக அமைவது ஷரீஅத்தாகும். உள்ளமெனும் போர்வைக்குரிய அலங்காரம் தரீகத் ஆகும். ஆன்மாவிற்குரிய அலங்காரம் ஹகீகத் ஆகும். அந்தரங்கத்திற் குரிய நிலை மஉரிபத் ஆகும்.  இவற்றையே தமிழில் சரியை , கிரியை , யோகம் , ஞானம்  என்றும் , இதற்கு ஆதாரமாக அமையும் இடங்களை ஸ்தூலம் , சூட்சுமம் , ஆன்மம் , பிரம்மம் என்றும் வகைப்படுத்திக் காட்டுவர். மனித உடலும் உள்ளமும் எவ்வாறு பல அளப்பரிய சாதனைகளைப் புரியும் தன்மைகளைப் பெற்றுள்ளதோ அதே போன்று ஆன்மாவும் விழுமிய நிலைகளைப்பெற்றுக் கொள்வதற்கான சக்திகளைப் பெற்றுள்ளது .   ஆன்மிக நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள் அகமியத்தை உணர்ந்து கொள்கிறார்கள் . அகமியத்தை உணர்ந்தவர்கள் அழியாப் பேரின்பம் கொள்கிறார்கள். இந்நிலையில் ரிழா என்னும் பரிபூரண திருப்தி ஏற்படுகிறது.ஹக்கனாகிய அல்லாஹ்வுடன் ஹக்கனாகிய அல்லாஹ்வுக்காகஹக்கனாகிய அல்லாஹ்வைக் கொண்டு பரிபூரண திருப்தி அடைவதே ரிழா என்னும் மேன்மை மிக்க பேரின்ப நிலையாகும். இந்நிலை பெறுவதையே பெரும் நோக்கமாகக் கொண்டவர்கள்    ஞானிகள் என்னும் மெய்யறிவாளர்கள். இறை நேசச் செல்வர்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் அருள் நோக்கில் ஞானப்பெருந்தகை பீரப்பா அவர்களும் ஞானப்பால் ஊற்றுகிறார்கள். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் ஊட்டச்சத்துக்கள் இப்பாலில் இருப்பதைப் பருகிடும் உள்ளம் நிச்சயம் அறியும் .


மனிதன் மண், தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களால் உருவாக்கப்பெற்றுள்ளான்.  இவற்றினூடே குரு உறைவிடம் கொண்டுள்ளது . இந்த குருதான் ரூஹ். இதன் ரகசியம் தான் ஸிர்ரு. இவற்றை உரைப்பதும் உணர்வதும் எளிதல்ல.காரணபூதந்தானுங் களைந்து வேறாகா வண்ணம் 

பூரணகுருமெய் ஞானப் புதுமையை யறிய வேண்டும் .

( பாடல் 23) 


சிந்தையைச் சிதற விடாமல் திக்ரு ஜலி. திக்ரு கல்பி , திக்ரு ரூஹி . திக்ரு சிர்ரி . திக்ரு கபீ என்னும் ஐந்து நிலை களிலும் மனதைப் பயன்படுத்தி வந்தால்,


ஆரண ­ றகினாலு மடங்கிலா வாதி தன்னை 
நேரெனப்பணிவோர்க் கெல்லாம் நித்தங்கண் காணலாமே


என்பது தக்கலை வேந்தரின் வழி காட்டுதலாகும் .


ஏக இறைவனை எஞ்ஞான்றும் நினைவில் நிறுத்துகின்ற அருளாளன் அல்லாஹ்வின் அன்பில் ஒன்றிக் கலந்திடும் இப்பேரின்பக் கலை பற்றிய ஞானமே மஉரிபத்தாகும். இதுவே காமிலான இர்பானாகும்.ஆலமுல் அக்பர்; மிகப் பெரும் உலகம் எனக் கூறப்பெறுகின்ற இம்மானிட உடலில் ஒளிந்து நிற்கும் ஒப்பிலாப் பரம் பொருளைப் புரிந்து அதை நன்கு பயன்படுத்திப்பேரின்ப நிலை பெற ஷய்கு அல்லது முர்ஷித் அல்லது வழிகாட்டி அவசியம். காமிலான  செய்கு அவர்கள் தான் ஆலமுல் அக்பரான மனிதப் பேருலகிற்குரியதிறவு கோலாகும். இக்கருத்தை தவசீலர் அப்பா அவர்கள் ,


பிறப்புடனிறப்புமில்லை பிசகது தானுமில்லை
நிறப்புகழனைத்து மொன்றாய் நின்றது நிறைந்த சோதி 
சிறப்புளவமுதமூட்டித் திருப்பதஞ் சேர்க்கும் ஞானத் 
திறப்புகளறிந்த பேர்க்குத் திறவுகோல் குருவதாமே !இப்பாடல் மூலம் எளிமையான விளக்கம் தந்துள்ளார்கள் . குருநாதர் அல்லது   ஷய்கு ஒருவரின் வழிகாட்டுதல் அவசியமென்பதையும் ஆன்மிக ஐயங்களை அவர்களிடமே சென்று நீக்கிக்கொள்ள வேண்டுமென்பதை அப்பா அவர்கள் தங்களின் ஞான மணிமாலையில் ,


அழுக்கறுத்துமெய்யை யறிந்தோர் முன் சென்று 
சுளுக்கறுத்துநீகேளு சொல்லுவா ருட்கருத்தில் 
வஞ்சகத்தைநீக்கி வான்பொருளை யென்றுமவர் 
தஞ்சமெனக்காட்டுவார்தாம் !எனக்கோடிட்டுக் காட்டுகிறார்கள். சுளுக்கறுத்து நீகேளு என்று அப்பா கூறுவதன் கருத்து ; குற்றம் நீக்கி அகப்பெருமையகற்றி எனப்பொருள் கொள்ளலாம் . வஞ்சகம் என அப்பா கூறுவதன் கருத்து: அல்லாஹ்வின் கண்ணியத்தை உணராத தன்மையைக்குறிப்பதாகும் . அருள்மறையில் அல்லாஹ் -  வமாகதருல்லாஹ ஹக்க கத்ரிஹி - அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் அளவுக்கு ( அவர்கள் ) கண்ணியப் படுத்தவில்லை என்று குறிப்பிடுகிறான். ஞானமேதை அப்பா அவர்கள் பிஸ்மில்குறம் 86- வது பாடலில் இறைவனுக்கு மிகவும் விரோதமான செயல் நான் என்ற அகங்காரமும்அனா நிய்யத்தான நீ என்ற வேறுபடுத்தலும் ஆகும். நான் நீ வேறுபாடில்லாத நிலையில் உறுதியாக இருப்பதே ஈமானாகும். இதை நிலைபாடாக்கிக்கொள்வதே  இஸ்லாமாகும் எனவும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

 

இறை வணக்கத்தில் ஒன்றி இன்பம் துய்த்திட இறைஞானம் மிக அவசியமாகும் . இறை ஞானம் அறிந்து கொள்ள சூஃபியாக்கள் அல்லது ஆரிபீன்கள் என்னும்அருள் மாந்தர்களின் அரிய தொடர்பு இன்றியமையாததுசூஃபியாக்களுடன் கலந்து உறவாடாமல் இருக்கும் மார்க்கப் பண்டிதர்கள் தொடுசுவை ஆனம் இல்லாத ரொட்டியைப்போன்று இருக்கிறார்கள் என ஞானவான்கள் கூறுகிறார்கள். வழியான குருவில்லா வணக்க முழுதெல்லாம் வையகத்தில் புருடனில்லாள் வாழ்ந்த சுகமொக்கும் என ஒப்பிடுகிறார்கள் அப்பா அவர்கள்.அகிலத்தின் அருட்கொடை முத்திரை நபியாம்முஹம்மது நபி இத்தரை மீதினில் ஞானம் நல்கிய மாபெரும் தூதர் இவ்வுலகில் இறைவனைக் கண்டவர்

 

சிறந்தஉயர்ந்த நோக்கத்தில் இறைப் பணிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஒருவர் உண்டு எனில்நிச்சயமாக அவர் அறபகத்தில் தோன்றிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம்என்ற கருத்தை ஆங்கிலேய அறிஞர்கள் கூறுகிறார்கள் . நாயகக் கோமான் அவர்களின் சொல் ­ ஷரீஅத் . அவர்களின் செயல் தரீகத் . அவர்களின் உண்மை நிலை ஹகீகத். அவர்கள் கண்ட மெய்ஞ்ஞானம் மஃரிபத் . நம்முடைய வணக்க வழிபாடுகளில் சிந்தனையில் செயலில் பிரதிபலிக்க ஞானம் மிகமிகத் தேவை . உயிரோட்டமான வாழ்விற்கு பெருவிருந்தாக - அருமருந்தாக அமைவதுதான் அப்பா அவர்களின்ஞானப் பாடல்கள்அருள்நெறி கண்ட அப்பா அவர்களின் ஞானப்பால் அருந்துவோம் ! என்றும் அகமதில் சிறந்து விளங்குவோம் !


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைவனின் உள்ளமையை உணர்ந்து அவனில் ஒன்றிக் கலந்திருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக ! ஆமீன் .


( தக்கலை பீர் முஹம்மது அப்பா அவர்களின்நூலிலிருந்து தொகுக்கப்பட்டது .)