ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai   »     2014    »    Mar2014     »     நூல்கள் ஜாக்கிரதை
தலையங்கம்

நூல்கள் ஜாக்கிரதை !


உண்மைதான்! நாய் வளர்க்கும் வீட்டில் வருவோரை எச்சரிப்பதற்காக வாசலில் நாய்கள் ஜாக்கிரதை! என அறிவிப்புப் பலகை வைத்திருப்பார்கள்! அதே போலத்தான் நாம் வாங்கிப் படிக்கும் தவறான நூல்களைப் பற்றி இப்படி எச்சரிக்க வேண்டியுள்ளது.


சமீபத்தில் அரபுலக முஸ்லிம் அறிவு ஜீவிகளைப் பற்றி வெளிவந்த ஒரு நூலைப் பார்க்க நேரிட்டது. பரவாயில்லையே! நல்ல தலைப்பு...நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய செய்தி என ஆர்வத்துடன்அந்நூலை வாசித்தேன்.


முன் பக்கங்களில் தேவையான விஷயங்களைப் பதித்து வந்த நூலாசிரியர்கள் சூஃபியாக்கள் என்ற தலைப்புக்கு வரும்போது தங்கள் சுயரூபத்தைக் காட்ட முனைந்தார்கள். முஸ்லிம் ஞான மேதைகள் பற்றி.... குறிப்பாக ஜுனைதுல் பக்தாதி(ரலி) , முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) , மன்சூர் ஹல்லாஹ் (ரலி) , இப்னு அரபி (ரலி) , இமாம் கஸ்ஸாலி (ரலி) , இமாம் பூஸ்ரி (ரலி) ஆகியோரைப் பற்றியயல்லாம் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைக்கே மாற்றமானவர்கள் என்பது போல பதிவு செய்திருந்தார்கள்.


ஆங்கில மூல நூல்களையும் தமிழ் நூல்களையும் வாசித்து அதிலிருந்து விஷயங்களைத் தொகுத்து , கூடவே சொந்த சரக்கையும் கலந்து தாங்கள் பெரிய நூலாசிரியர்களைப் போலக் காட்டிக் கொள்ளும் இவர்கள் , அந்த மெய்ஞ்ஞான மேதைகளின் அறிவுக்கு முன் அரைக் காசுக்குக் கூடப் பெற மாட்டார்கள . பெரியார்களின் அடிப்படையைப் பழிக்கும் இவர்கள் நாளை மறுமையில் அவர்களுக்கு முன் வெட்கப்பட்டு , வேதனைப்பட்டு நிற்பார்கள் என்பது உண்மை!     


இங்கே நாம் கூற வரும் விஷயம் என்னவென்றால்...

இஸ்லாத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இஸ்லாமிய நூல்கள் என எல்லா நூற்களையும் வாங்கிப் படித்து ஏமாற வேண்டாம்! அதை நம் பிள்ளைகள் கண்ணில் படும்படி வீட்டில் வைக்க வேண்டாம்.   ஒரு நூல் வாங்குமுன் அது யாரால் - எவரால் எழுதப்பட்டது ? எழுதியவர்கள் முழுமையான சுன்னத் ஜமாஅத் கொள்கையில் உள்ளவர்களா ? என்பதை அறிந்து வாங்க வேண்டும். தவறி வாங்கி விட்டால் நூலைப் படிக்கும் போதே கொள்கை மாறுபாடு தெரிந்தால் உடனே புறக்கணித்து விட வேண்டும்.


மேலும் பள்ளிவாசல்களில் வஹ்ஹாபிகள் கொடுக்கும் சிறு சிறு பிரசுரங்களை என்னதான் எழுதியிருக்கின்றார்கள் ? படித்துத்தான் பார்ப்போமே! எனத் தாமும் படித்து அதை வீடுவரை கொண்டு சென்று அங்கு வைத்தால் மனைவி , பெண்பிள்ளைகள் அவற்றைப் படித்து ஈமான் கெட்டுப் போனால் அந்தப்பாவத்திற்கு குடும்பத் தலைவர்களே பொறுப்பாக வேண்டியிருக்கும்.ஆபாச , அருவருப்பான புத்தகங்களை ஒதுக்குவது போல இவைகளையும் ஒதுக்கிவிட வேண்டும்!