ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

இயற்கை நலக் கவிமொழிகள்


.பச்சைக் காய்கனி பயனுள்ள உணவாகும்;

நச்சுகள் நீங்கி நிச்சயம் நலம் தரும்.


2.தேங்காய் பழங்கள் சிறப்பான உணவாகும்;

பாங்குடன் தின்றே பயனுற வாழ்வோம்.


3.அதிகாலை பருகுவோம் அருகம்புல் சாறு;

புதிதான உணர்வே மலர்ந்திடும் பாரு.


4.அடிக்கடி தின்றால் பிடித்திடும் தொப்பை;

படிப்படியாய்ச் சேரும் உடம்பிலே குப்பை.


5.காய்ச்சல் என்பது உடல் நச்சுப் போதலே;

கவலை விடுக; ஓய்வே போதும்.


6.மெல்லத் திண்போம்; மென்று திண்போம்;

நன்றாய் அதுவே சென்றுடல் வளர்க்கும்.


7.நடப்பதால் உடம்பிலே விடுபடும் நோய்கள்;

திடமது சேர்ந்திடும்; தீமைகள் மாய்ந்திடும்.


8.இயற்கை உணவில் ஏற்றமாம் நமக்கே;

அயர்வுகள் நீங்கும்; ஆற்றல் ஓங்கும்.


9.பசித்தபின் புசித்தால் உசிதமாய் வாழலாம்;

ருசிக்காக பலமுறை புசித்தால் நசிவுதான்.


10.உப்பினைக் குறைத்தால் எப்போதும் நலமே;

அப்புறம் நோய்களில் தப்பிடும் நம் உடல்.


11.புகையும் குடியும் நகைப்பிற் கிடந்தரும்;

வகைவகை நோய்களும் தொகையுடன் இடம்பெறும்.


2.சுத்தமும் ஒழுக்கமும் நித்தமும் நலம்தரும்

மெத்தனம் மாறிடும்; அத்தனை சுகம்தரும்.


13.காப்பியும் டீயும் அடிக்கடி அருந்திடல்;

கூப்பிடும் நோய்களை; உடனிதை நிறுத்துவீர்.


14.கேரட்டுச் சாறினை பாராட்டப் பருகுவீர்;

சீராக்கும் உடலினை; நோயோட்டும் உணர்வீர்.


15.தானியங்களை ஊறவைத்துத் தகவுடன் முளைக்கவைத்து;

தூளாக்கிக் கூழாக்கி அருந்துதல் பொருந்துமே!


16.வல்லாரை, அருகு, வாழை, எலுமிச்சை

நல்லதாம் பூசணிச் சாறுகள் அருந்துவோம்.


17.மலச்சிக்கல் தீரவே குடல் சுத்தம் வேண்டும்;

நலம்பெற அகிம்சா இனிமா செய்ய வேண்டும்.


18.மண்ணும் நீரும் காற்றும் ஒளியும்

உன்னத மருந்துகள்; உணர்ந்திடும் தெளிவாம்.


19.நமக்கு நாமே நல்லதோர் மருத்துவர்

அமையும் இயற்கைவழி நல மருத்துவம்.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! வாழ்க நலமுடன்.

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.