ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jul 2014      »    குடும்ப நலம்


குடும்ப நலம்


குழந்தை வளர்ப்பு!
எளிய வழிகள்.

அவசர வழிகாட்டி:


 • ஆர்வமுள்ள நல்ல விஷயங்களை ஊக்குவிக்க வேண்டும். தகுதி, வயதுக்கு மீறிய விஷயங்களைத் தடை செய்ய வேண்டும்.
 • குழந்தைகளின் தேவையைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
 • நமது விருப்பங்களைக் குழந்தைகளிடம் ஓர் அளவுக்கு மேல் திணிக்கக் கூடாது.
 • பெற்றோரின் மனநிலை, கோபம், மனஸ்தாபங்களைக் குழந்தைகளிடம் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 • மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிற விஷயங்களில் கண்டிப்பைத் தளர்த்தாமல் இருக்க வேண்டும். உதாரணமாக : ஒரு குழந்தை யாரைப் பார்த்தாலும் அடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பெற்றோர் அதைக் கண்டிப்பார்கள். சில நேரம் பேரன், பேத்தி அடிப்பது சுகமாக இருக்கிறது எனத் தாத்தா, பாட்டி அதை ஊக்குவிப்பதுண்டு. இதனால் குழந்தைகள் எது சரி என்று புரியாமல் குழப்பமடைவார்கள் .
 • குழந்தைகள் சில விஷயங்களில் அடம்பிடித்துத் தொந்தரவு செய்கின்றன என்ற ஒரே காரணத்துக்காக அதை நிறைவேற்றக் கூடாது . கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சில நாட்களில் தீவிரம் குறைந்துவிடும். குழந்தைகளின் மிரட்டலுக்குப் பெற்றோர் அடிபணியக் கூடாது.
 • அழுது அடம்பிடித்துக் கொண்டிருக்கும் விஷயத்தை மாற்றப் போராடுவதை விட, வேறு விஷயத்தில் குழந்தையின் கவனத்தைத் திசைதிருப்புவது எளிது.
 • ஒரு விஷயத்தைச் செய்யாதே எனத் திரும்பத் திரும்பச் சொல்வதை விட, வேறு ஒன்றைச் செய் என்று வழிகாட்டுவது   பலனளிக்கும்.
 • டிவி பார்க்கும் நேரத்தை வரைமுறைப்படுத்தி, உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது.
 • மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.


உற்சாகப்படுத்துங்கள்:


 • நல்ல பழக்கவழக்கங்களைச் செய்யும்போதோ அல்லது ஒரு விரும்பத்தக்க பழக்கத்துக்கு மாறும்போதோ உடனடியாக உற்சாகப்படுத்துங்கள். உங்கள் ஊக்குவிப்பு சாதாரணப் பாராட்டு, தட்டிக் கொடுத்தலில் இருந்து சிறிய பரிசுப் பொருட்கள், சாக்லேட்டாகக் கூட இருக்கலாம்.
 • நீங்கள் நினைத்த குறிக்கோளை குழந்தைகள் அடைந்தால் மட்டுமே வாக்குறுதி கொடுத்த பரிசையோ, பொருட்களையோ வாங்கிக் கொடுங்கள்.
 • பாராட்டும் போதோ, பரிசு கொடுக்கும்போதோ நீ இப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாய் அல்லது இந்தக் கெட்ட பழக்கத்தைக் கைவிட்டிருக்கிறாய், அதற்காகத்தான் இந்தப் பரிசு என நினைவுபடுத்திக் கொடுங்கள்.


தண்டனை தேவையா ?


 • குழந்தைகளுக்கு தண்டனைகள் தேவைதான். ஆனால் அதைக் கொடுக்கும் விதம் மிகவும் முக்கியம்.
 • தவறான செயல்களை அவற்றின் தீவிரத்திற்கு ஏற்ப உடனடியாகத் தண்டிக்க வேண்டும் . காலம் தாழ்த்துவது எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.
 • குழந்தைகளுக்கு தாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம் என்பது கண்டிப்பாகப் புரிந்திருக்க வேண்டும்.
 • அறியாமல் செய்த தவறுகளுக்கு தண்டிக்கக் கூடாது. உதாரணமாக : கையில் உள்ள டம்ளர் தவறி விழுவதால் நீரைக் கொட்டுவது 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இயல்பான ஒன்றுதான். இது மாதிரியான வி ­ ஷயங்களுக்கு அவசரப்பட்டு தண்டிக்கக் கூடாது.
 • ஒரு குழந்தை விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டால், அக்குழந்தைக்கு மிகவும் பிடித்தமானவற்றைக் கொடுக்காமல் நிறுத்தி வைக்கலாம். உதாரணமாக 5 - 10 நிமிடங்கள் சுவர்ப்புறமாக திருப்பி உட்கார வைப்பது, அன்றைக்கு விளையாடும் அல்லது டிவி பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, சிறிது நேரம் பேச மறுப்பது போன்றவை பலன் கொடுக்கும்.

(தகவல்   :   எஸ்.எச் .எம்)