ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

பெரியோருக்கு மரியாதை

மும்தாஜ், சென்னை

ஒரு நாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அபூபக்ரு (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மற்ற தோழர்களும் அமர்ந்திருந்தார்கள். நபிகள் நாயகம் அலைஹி வஸல்லம் அவர்கள் பெருமையில் முஸ்லிம்களுக்குச் சமமானதும், தவறாமல் ஆண்டுதோறும் பலன் அளிப்பதும், வணங்காத தலையும், வாடாக்குலையும் உடைய மரம் எது? என்று கேட்டார்கள்.அந்தப் புதிருக்கான விடை பெரியவர் இருவருக்கும் மற்ற தோழர்களுக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றவில்லை. உமர் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அங்கு இருந்தார்கள். அவர் இந்தப் புதிரை விளங்கிக் கொண்டார்.அது பேரிச்சை மரம் என்று சொல்ல நினைத்தார்.  பெரியோர் முன்னர் அடக்கமாக இருக்க வேண்டுமே! அபூபக்ரு (ரலி) அவர்களும், தம் தந்தையும் மற்ற ஸஹாபாக்களும் மெளனமாக இருக்கும் போது தாம் முந்திக் கொள்வது மரியாதையாகாதே என்று கருதினார்.அதன்படி ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டார். பிறகு இச்செய்தி உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிய வந்தது. மகனே! புதிருக்கான விடை உனக்குத் தெரிந்திருந்தும் ஏன் அதைத் தெரிவிக்கவில்லை? அப்போதே தெரிவித்திருந்தால் எவரும் விளங்கிக் கொள்ளாத புதிரை என் சின்னஞ்சிறு மகன் விளங்கிக் கொண்டான் என்று மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.அதற்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்,  தாங்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் சொல்லாமல் இருக்கும் போது நான் எப்படி முந்திக் கொண்டு சொல்வது? அப்படிச் செய்வது மரியாதையாகாது என்று நினைத்துச் சும்மா இருந்தேன் என்று கூறினார்கள்.உமர் (ரலி) அவர்கள் தம் பிள்ளையின் இந்தப் பதிலால் அதை விடப் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நாமும் நம் பிள்ளைகளுக்கு  உமர் (ரலி) அவர்களின் மகனாரைப் போல் மரியாதைகளைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.