ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

சாந்தி

பு.ஹி.னி. முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய் - கத்தார்மனிதர்கள் யாவரும் விரும்புவது சாந்தியான வாழ்வு என்றால் மிகையில்லை. எந்த இனத்தவராக இருந்தாலும், எந்த மொழி, எந்த நாட்டினராக இருந்தாலும் இதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இது எப்போதும் சாத்தியமானதாக இருக்கிறதா? அது சாத்தியமா? என்று ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். எப்படி அது சாத்தியமாகும் என்பதையும் ஆராயப் புகுவோம்.மனிதன் ஒருவன்  காலைத் தூக்கத்தில் இருந்து விழித்து மீண்டும் இரவு தூங்கச் செல்லும் வரை எப்படி வாழ்ந்தால் இது சாத்தியம் என்று நோக்குவோம். முதலில் மனிதன் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் ஆராய்ந்து ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.பிறந்து சில காலம் கழித்து இறப்பு என்பதால் எங்கிருந்து பிறந்தோம்? எங்கு சென்று மறையப் போகிறோம்? என்று தெளிவான சிந்தனையுடன் ஆராய்தல் மிக அவசியம். தாய் தந்தையிலிருந்து பிறந்தோம் என்றாலும் அவர்களுடைய பிறப்பு என்று பின்னோக்கிச்  செல்லச் செல்ல  முடிவில் ஒரே மனிதரிலிருந்துதான் அனைவரும் வந்தனர் என்பதை அறிய முடிகிறது.  முதலில் இறைவனால் வெளியாக்கப்பட்ட மனிதரும் தோன்றக் கூடிய நிலையில் இருந்ததும் தோன்றக் கூடிய நிலைக்கு முன்பு அனைத்தும் தன்னுள் அடக்கிய  மகா சக்தியாம் அதனுள் மறைந்திருந்ததையும்  அறிய முடிகிறது.இனி நாம் உணர வேண்டியது என்னவெனில் அந்த மகா சக்தியே தன்னிடம் உள்ள அனைத்தையும் வெளியாக்கி இன்று தோற்றம் பெற்ற நிலையில் முழு பிரபஞ்சமாய்க் காட்சி அளிக்கிறது. எனவே இங்கு ஒவ்வொரு மனிதனும் தோற்றத்தில் பிரிவுகளாகக் காட்சி தந்தாலும் உண்மையில் அனைவருமே ஒன்றுக்கு ஒன்று பிரிக்க முடியாத இம்முழுப் பிரபஞ்சத்தில் கலந்து முழுமையாய் இருப்பதையும் அறிய முடியும்.அந்த மகா சக்தியே கடவுள் என்னும் பெயரில் நாம் அழைக்கிறோம் என்பதும் உண்மையே.  எனவே எப்படிப் பார்த்தாலும் அந்த மகா சக்தியைத் தவிர வேறு ஒன்றும் எப்போதும் இல்லை என்பதும் செயல்கள் தனித்தனியாய்த் தெரிந்தாலும் அந்த ஒரே சக்தியின் செயலே என்பதையும் அறிய முடியும்.அந்த சக்தியை முழுமையாக உணர்ந்தவரே அந்த சக்தியின் தூதாக இவ்வுலகத்தில் மனிதர்களைச் சாந்தியால் வாழ வைக்கும் வழிகளைக் கற்றுத்  தருபவராய் இருக்கிறார். அப்படி உணர்ந்தவர்கள் என்றும் அழிவதில்லை. ஏனெனில் அவர்களும் அழியாத,  என்றும் நிலைத்து நிற்கும்  மகா சக்தியிலிருந்து வந்து  அதிலே வாழ்ந்து அதிலே மறைந்து நிலைத்து நிற்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்கிறார்.அவர்கள் உடலளவில் மறைந்தாலும் உண்மையில் அவர்களின் வழியை நிலைப்படுத்தி வைத்து மனிதர்களை அவ்வழியில் வாழ வைத்து சாந்தி வாழ்வைத் தருகிறார்கள். இனி நாம் கதை மனதில் நிறுத்திக் கொண்டு நம் வாழ்க்கையில் தொடர்வோம்.அதிகாலையில் எழுந்தவுடன் கை கால்களைச் சுத்தப்படுத்தி, காலைக் கடன்களை முடித்துவிட்டு இம்முழு மகா சக்தியான கடவுளை நினைத்து வணங்கு. அவனிடம் நமது வாழ்வின் ஆரம்பத்தை சாந்தி மயமாய் வேண்டிக் கொண்டு வேலையைத் தொடங்கும் பொழுது அப்பொழுதே ஓர் இனிமையான பிரயாணமாய் ஆரம்பமாகிறது.வணக்கம் என்பதைச் சற்று முறைப்படுத்திச் செய்யும் போது அது எப்படி உடலுக்கும் மனதுக்கும் பெரும் வலிமையைத் தருகிறது என்பதைப் பற்றி ஆராய்வோம்.அடுத்து, கடவுள் நமக்கென்று சொந்தமாக்கித் தந்த நம் உறவுகளை இன் முகத்துடன் கண்டு அவர்களுக்குள் ஒவ்வொருவரும் வாழ்த்திக் கொண்டால் அது மிகவும் மனதிற்கு உற்சாகம் தரும். உடலிலுள்ள அழுக்குகளை நீக்கிக் குளிக்கும்போது அவனுக்கு நன்றி செலுத்தி இன்பமடையும் போது மனதில் உற்சாகம் பிறக்கிறது.முடிந்தவுடன் மனிதருக்கு இறைதந்த அறுசுவை உணவுகளை நன்றியுடன் அவன் நினைவாகத் தொடங்கும்போது அது நம் உடலுக்கு மட்டுமல்லாமல் நமது உயிருக்கும் வலுவூட்டுவதாகவே அமையும்.  உணவை நாம் நம் உறவினர்களுடன் பகிர்ந்து  உண்ணும்போது அது மிகவும் நிலை பெறுகிறது.அவன் தந்த உணவை மனிதன் உண்ணும் போது எப்படி கடவுள்  மனநிறைவு கொள்கிறானோ அதே போல் தனது உறவுகள் உண்ணும் போது அந்த உறவுகளுக்காய் உழைத்த உத்தமனின் மனமும் நிறைவு பெறுவதை நாம் உணரலாம்.இனி வீட்டிலிருந்து தொடங்கி தன் அன்றாட உழைப்பிற்கு  வெளியில் செல்லும் போது இறைவனுடைய பாதுகாப்பை வேண்டியும் தன்னுடைய உழைப்புகளில் அபிவிருத்தியை வேண்டியும் செல்லும் போது நம்முடைய இந்த ஆண்டே இறைவனுடைய நினைவுகளால்  முழு சக்தியாக இருக்கும்.  கடவுளிடமிருந்து மிகுந்த  உதவியும் பாதுகாப்பும் கிடைக்கிறது.அடுத்து யாருக்கும் வேலை செய்வதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். எங்கு வேலை செய்தாலும், எவரிடம் வேலை  செய்தாலும், தன்னுடைய சுய தொழிலைச் செய்தாலும் அதை அந்த மகா சக்தி பார்த்துக்  கொண்டுதான் இருக்கிறது என்ற  எண்ணத்துடன் செய்யும் போது அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் நடந்து கொள்ள முடிகிறது.யாருக்கும் ஏமாற்றுத்தனம் இல்லாமல் நடக்கும் போது மன உறுதியுடன் யாருக்கும் அஞ்சாமல் நடந்து கொள்ள முடிகிறது.  அந்தத் தொழிலும் தவறுதலாக இல்லாமல் அமைத்துக் கொண்டால் எவ்வளவு நேரம் யாருடைய கம்பெனியில் வேலை செய்தாலும் அது நமக்கு பளுவானதாக அமையாது.யாருக்கோ ஏன் வேலை செய்து சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி ஏமாற்றுத்தனம் செய்தாலோ அல்லது மிகவும் கஷ்டப்பட்டு தனக்காக உழைக்கும் ஒருவரை ஏமாற்றும் முதலாளியாக இருந்தாலோ அதிலே மனம் ஒரு பாவப் பளுவைத் தூக்கி தனது சாந்தி நிலையை இழந்து விடும்.அது மட்டுமில்லாமல் உலகத்திலே கடவுள்தான் அனைத்தமாய் இருக்கிறான் என்பதால் இந்த உலகம் சரியாக இயங்க நமக்கு ஓர் இடத்தைத் தந்துள்ளான் என்பதை நினைவிற் கொண்டு, மற்றவர்களிடமுள்ள ஏற்றங்களை மனதிற் கொள்ளாமல் வாழும் போது என்றும் சாந்தி வாழ்வு நிலைத்துவிடும்.தன்னுடன் உள்ளவர்களை, தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை, தன்னைக் காண வருபவர்களை நாம் கடவுளின் வெளிப்பாடுகளிலே கருதி செயல்பட்டால் அவர்களிடம் இன் முகத்துடன், அன்பால் பேசி மகிழ்ந்து  சாந்தி  நிலையைப் பெறலாம்.காலை முதல் தொடங்கி ஒரே வேலையிலும் அது தொடர்பான நிகழ்வுகளிலும் மனம் தங்கிவிடும் போது அதிலிருந்து கிடைக்கும் இடைவெளியில் முழுவதும் அந்த நிகழ்வுகளிலிருந்து விடுபட்டு மீண்டும் மகா சக்தியை நினைத்து அதன் தூய உண்மை நம்மிலும் பதிந்துள்ளதை நினைத்தால் சோர்வுள்ள மனம் மீண்டும் புத்துயிர் பெற்று விடும்.உணவுகளை அளவு கடந்து  உண்பதால் நோய்கள் ஏற்பட்டு மனம் சாந்தி நிலையிலிருந்து தவறி விடாமல் அளவான உணவைச் சமமான நேரத்தில் சந்தோ­மாய் உண்ணும் போது அது சாந்தியாகவே மாறிவிடும். அடுத்து அண்டை அயலார்கள், நம்முடைய வழியில்  வாழ்பவர்களை இன்முகத்துடன் வாழ்த்திச் செல்லும் போது அந்த வாழ்வு சுவர்க்கமாகவே மாறிவிடும்.மீண்டும் மாலையில் வீட்டில் தாய் தந்தைமார்கள், சகோதர சகோதரிகள், மனைவி மக்களுடன் அக மகிழ்வுடன் கூடிப் பேசி மகிழ்ந்து மகா சக்தியான இறைவனை நினைத்து மீண்டும் உணவு உண்டு உறவு கொண்டு  நிம்மதியுடன்  நித்திரை கொண்டால் இது சாந்தியான வாழ்வல்லவா?இதைத்தான் அந்த மகா சக்தியான இறைவனில் கலந்துள்ளதை உணர்ந்து அந்த இன்ப வாழ்வை இகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்கும் வழங்க வந்த மாமேதை நாயகம் அவர்கள் காட்டித் தந்த இஸ்லாம் என்ற அறபி மொழியின்  தமிழாக்கம் தானே சாந்தி வழி என்பது.  இனி இவ்வழி எப்படி நமக்கு சாந்தியான வாழ்வைத் தருகிறது என்பது பற்றி ஆராய்வோம்.“லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” - “கடவுளைத் தவிர வேறு ஏதும் இல்லைகடவுளின் தூதராக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கிறார்கள்” என்பதுதான் சாந்தி வழியின் அடிப்படைஇதைத்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் விவரித்தோம்.எனவே மொழியால் இக்கலிமா அறபியாக இருந்தாலும் அதன் தமிழாக்கம் சாந்திவழிக்கு வித்திடும் தொடக்கமே என்பதை உணர வேண்டும்இனித்  தொழுகை அதாவது, அந்த  மகா சக்தியை வணங்கி நமது  தேவையைக் கேட்டுப்  பெறுவதுஇதற்கு 5 வேளைகள் நியமமாய் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.அதிகாலை வணக்கம்: 


இந்த வணக்கத்திற்காக அதிகாலை எழும் போது உடலில் சோர்வு நீங்கி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி அந்நேரத்தில் ஓசோன் நிறைந்துள்ள காற்றை சுவாசித்து சுகத்துடன் வாழ முடியும்.அந்த தொழுகையால் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் வலிவடையும்குறிப்பாக இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீரான முறையில் நடந்து, உயிர் மூச்சுக் காற்று சரியான முறையில் உலாவிட, எல்லா வகையான யோக ஆசனங்களும் அமையப் பெற்றுள்ளது என்பதைக் கற்றுத் தெரிந்த அறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.இதைச் சரிவரச் செய்து வந்தால் உடலில் எந்த வகையான நோய்களும் இல்லா வாழ்வும் மகா சக்தியான இறைவனை நினைத்து மிகுந்த வலிமையைப் பெற்றுக் கொள்கிறதுமனத்தையும் உடலையும் வலிமைப்படுத்தி நம் வாழ்வைத் தொடங்கும் போது எந்தவொரு சலிப்பும் இல்லவே இல்லை.அது மட்டுமல்ல இந்தத் தொழுகையை முடித்து இறைவனிடம் நாம் கேட்கக் கூடியவைகளைத் தொடர்ந்து கேட்டு விடுவதால் ஒன்றயே திரும்பத்  திரும்ப வேண்டி நிற்பதால் அது நம் வசப்பட்டு விடும்என்பதும், இரு கைகளை ஏந்திக் கேட்பதால்  கேட்பவருக்கும் இந்தப்பிரபஞ்சத்தின் தொடர்புகள் உண்டாகி அது இந்தப் பிரபஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அதைக் கேட்பவருக்கு பெற்றுத் தருகிறது என்பதால் அகமகிழ்வு, உடல் வலிமை உலக தேவைகள் எல்லாம்  ஒரு சேர கிடைக்கப் பெறும்இவ்வழி சாந்தி வழிக்கான திறவுகோலாகவே மாறிவிடுகிறது.பகல் நேரத் தொழுகை:


காலை முதல் நண்பகல் வரை தொழில் சிந்தனையில் தன்னை மறந்து செயல்படுபவரை மீண்டும் புத்துணர்ச்சியூட்டுவதற்குத் தண்ணீரால் முகம் கை, கால்கள், தலை, கழுத்து, காது, வாய், பல், நாக்கு நாசிகளைத் தூய்மைப்படுத்தி இதுவரை சேர்ந்த அசுத்தங்களை நீக்கிக் கொண்டு வணக்கத்தில் ஈடுபடும் போது இதுவரை இருந்த தொழிலிலிருந்து மீண்டு, இழந்த  சக்தியை தொழுகை மூலம் ஈடு செய்து மீண்டும் பொலிவுடன் தன் வேலையைத் தொடங்க முடிகிறது.மாலைநேரத் தொழுகை:


முன்பு கூறியது போல் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்வதுடன் உடலையும் உள்ளத்தையும் வலுவாக்கி வைக்கிறது.சூரியன் மறையும் நேரத் தொழுகை: 


இந்த நேரம் இறைவனை நினைவு கூர்ந்து அவனிடம் தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ளும் உயர்ந்த நேரிய வழிபாடு.இரவு நேரத் தொழுகை:


இரவுக்கு அந்த நாள் முழுவதும் சிறப்புடன் அமைத்துத் தந்ததற்கு நன்றி செலுத்தி அமைவது. இது தவிர இன்னும் பல சிறப்புத் தொழுகை நேரங்களான  லுஹா, தஹஜ்ஜத் போன்ற தொழுகைகள் உள்ளனஇப்படி தினமும் தவறாமல் ஒழுச் செய்து தொழுபவன் தன்னுடைய உடலை வலுப்படுத்திக் கொள்ளுதல், தன் மனதை வலுப்படுத்திக் கொள்ளுதல் மேலும் தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ளுதல்.அது மட்டுமல்ல இந்தத் தொழுகையை தொழுவதற்கு வரக்கூடிய இடமான பள்ளிவாசலில் நல்ல மனிதர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தன்னுடைய தொழில் வளம், தன் குடும்பத்திலுள்ள நபர்கள் மூலம் உறவு மற்றும் நண்பர்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்அது மட்டுமல்ல ஒருவன் அறிந்த வி­யங்களை மற்றவர்கள் பகிர்ந்து கொண்டு உலக அறிவையும் பெற்றுக் கொள்கின்றனர்.நோன்பு:


ஒரு வருடத்தில் 11 மாதம் உண்ணும் நேரத்தை மாற்றி பகல் முழுவதும் உண்ணாது, உறவு கொள்ளாது அந்த மகா சக்தியின் நிலையிலே இருந்து சூரியன் மறைவிற்குப் பிறகு உண்டு, வணங்கி வாழ்வின் நிலைகளை  வித்தியாசப்படுத்தி உண்ணாத  இறை குணத்தில் இவனும் இருந்து, அவனது நிலையில் அவனுடனே  நிலை பெறுவது.மேலும் நோன்பாகிறது ஆன்மீக சக்தியை அதிகப்படுத்தி உடலையும் வசப்படுத்தி  வணக்கத்தை  வலுப்படுத்தி  ஜீரண சக்தியைத் தரும். உறுப்புகளின் வலுவையும் அதிகப்படுத்தும். இதுவரை சேர்த்து வைத்துள்ள கொழுப்பின் அளவுகளைக் குறைத்து உலகில் வாழும் காலத்தை நோயின்றி நீண்ட காலமாக வாழ வழி வகுக்கும்.ஜகாத்:


இது உலகப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையாகும்.  இக்காலத்தில் வருமான வரி என்பது அரசாங்கம் வசூல் செய்வது.  இதன் ஆணிவேர்  இஸ்லாம் தான். அதனைத் தந்த நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தாம்.பணக்காரர்கள் தங்களுக்குத் தேவையானவைகளுக்கு மேலுள்ள பணத்தில்; அதாவது  ஒருவர் வீடு, வசதிகளுடன் இருந்து அதற்கு மேலும் பணம் ஒரு வருட காலம் வைத்து இருந்தால் அவர் அதிலிருந்து 2 1/2 சதவீதம் ஏழைகளுக்காகக் கொடுக்க வேண்டும்.இதன் மூலம், தான் மட்டும் உண்டு வாழாமல் பிறரையும் உண்டு வாழ வைக்கிறார். அதனால்  திருட்டு, குற்றப் பாவங்கள் நீங்கி  இவ்வுலகில் வாழ முடியும்.  அது மட்டுமல்லாமல் மற்றவர்களைப் பசிக்க வைத்துவிட்டு தான் மட்டும் உண்ணுவது என்பது இறைவனைப் பொறுத்தமட்டில் கேடாய் அமைந்துவிடும்.அது மட்டுமல்ல;  தன்னிடம் சேர்ந்துள்ள ஜகாத் நிதியை ஒரு நபருக்கு முழுவதும் கொடுத்து அதைக் கொண்டு அதனைப் பெற்றவர் தொழில் தொடங்கி நாளடைவில் அவரும் ஒரு முதலாளியாய் மாறி அவரும் பிறருக்கு தன் பணத்திலிருந்து  ஜகாத்  நிதி கொடுக்கும் அளவுக்கு மாறி விடுகிறார்.இப்படியே இது வளர்ந்தால் எல்லோரும் ஜகாத் நிதியைத்  தரும் அளவிற்கு பணக்காரர்களாய்  வாழ்ந்து  உலகத்தின் எல்லா மனிதர்களின் தேவைகளும் நீங்கி, ஜகாத்  பெறக்கூடியவரே  இல்லாத  நிலை தோன்றி விடும். இப்படிப்பட்ட நிலை வந்தால் உலகத்தில்  மனிதன் இன்பமாய் வாழ விரும்பி குற்றம், கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்றவை நீங்கி உலகம் அமைதி மயமாகி விடும்.ஹஜ்: 


இது பள்ளிவாசலில் அவரவர் ஊர்களில் மக்கள் கூடி எப்படி  இறைவனை வணங்கி ஒருவருக்கொருவர் அன்புடன் பேசி கலந்து உறவாடுவார்களோ அதே போல் இறைக் கொள்கையின் மூல இடமான மக்கா நகரில் உலகத்தார் அனைவரும் கூடி அதே இன்பத்தைப் பெறுவதற்கும், அமைதி வழி மூலம் தனி நபருடைய உரிமையில் கலந்து, உடலைப் பேணி, உயிரை வளர்த்து அதன் மூலம்  தனி மனிதனைப் போல  உலகத்தவர்கள் அனைவரும் அமைதியுடன் வாழ வழி செய்து கொடுத்தது.மேலும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் என்று இறைவனால் போற்றப்பட்ட வள்ளல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் திருவுடலை ஏந்திய  மதீனா மாநகரில் அவர்களைக் கண்டு நாம் நன்றி செலுத்துவதற்கு ஏதுவாக  ஹஜ் அமைந்துள்ளது.இதன் மூலம் உலகம் முழுவதும் பிரிவற்ற, பேதமற்ற, ஒற்றுமையான அமைதி வாழ்வை உலக மக்கள் பெற முடிகிறது. உலகத்தில் எத்துணை வழியில் மக்கள் இறைவனை நினைத்து வழிபட்டாலும் அவர்களுக்கு உரிய வழி அவர்களுக்கு என்று அவர்களின் உரிமையைக் காத்து, நாம் நல்வழி தொடர்ந்து வாழ்ந்து அவர்களுடன் நாம் அனைவரும் ஒரே மகா சக்தியின் வெளிப்பாடுகளே என்பதை  உணர்ந்து சகோதரத் தன்மையுடன் வாழ வழி செய்து கொடுத்தல்.நம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வழியே சாந்தியாகி என்றும் அமைதியின் அடிச்சுவடாய் அமைந்துள்ளது.உலகத்தில் எந்த எந்தப் பிரச்சினைகள் உள்ளன? உடலில் எந்த எந்த பிரச்சினைகள் எப்படி எப்படி உண்டாகின்றன? மனதில் ஏற்படும் கஷ்டங்கள் எதனால் ஏற்படுகின்றன? அதைத் தீர்க்கும் வழிகள் என்ன? என்பதை எல்லாம் ஆராய்ந்து உலகத்திலுள்ள பிரச்சினைகள் என்று  ஆராயும் போது, அனைத்திற்கும் தீர்வாக அமைதி நிலையாக இஸ்லாத்தை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அமைத்துள்ளார்கள் என்பதை அறிவுக் கண் கொண்டு ஆராயும் போது புலப்படும்.வெள்ளை கருப்பு என்ற இன வேறுபாடு, மொழி வேறுபாடு, பழக்க வழக்க வேறுபாடுகள், பணக்கார், ஏழை வேறுபாடு, படித்தவன் படிக்காதவன் வேறுபாடுகள் இருந்தாலும் எல்லோரும் ஒரே சக்தியின் வெளிப்பாடுகளாய் இருப்பதால் மனிதர்களுக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை உணர்த்தி கருப்பு இனத்தாரை வெள்ளை இனத்தாருக்குத் திருமணம் செய்து கொடுத்து, பணக்காரர்களை ஏழைகளுக்குத் திருமணம் செய்து, தொழுகையில் அனைவரும் அடுத்தடுத்து எந்த இடைவெளியும் இல்லாமல் முன்பு வருபவர் வரிசையாக நிற்கும்படியும் அமைத்து, மனிதர்களுக்கு மத்தியில் வேறுபாடு இல்லை என்பதை மனதளவில் நிறுத்தி வைத்த மகா மேதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே.நின்று கொண்டு நீர் அருந்தினால் அதன் மூலம் காது நோய்கள், குடல் நோய் போன்றவைகள் வருவதால் அமைதியாக நீரை உட்கார்ந்து அருந்த வேண்டும் என்று கூறி, மேலும் அரை வயிறு உணவு,  கால் வயிறு  தண்ணீர், மீதம் கால் வயிறு காலியாக வைக்க வேண்டும் என்ற நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் சொற்களை எல்லாம் நவீன மருத்துவ உலகம்  இன்று ஆராய்ச்சி செய்து  அண்ணலாரை 1500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த  ஓர் அற்புத விஞ்ஞானி என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை வியக்கும்படி ஆகிறது.ஓர் ஆணுக்கு நல்ல உடல் வலிமையும் நல்ல பண வசதியும் இருந்து எல்லா மனைவிகளையும் சமமாக நடத்தும் வலிமை இருந்தால் 4 மனைவிகள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும், விதவைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற உரிமையைக் கொடுத்ததும், இந்த உலகத்தில் ஒரு நாள் ஒரு பெண்ணுடன் வாழ்வதன் மூலம் ஏற்படும் விபச்சார வாழ்வை முறைக்குக் கொண்டு வரவும், விபச்சாரத்தின் மூலம் பரவும் கொடிய நோய்களைஅழிக்கவும், விபச்சாரத்தின் மூலம் பிறக்கும் அனாதைக் குழந்தைகளை அடியோடு நிறுத்தவும், உலகத்தில் உள்ள பெண்களின் தொகை ஆண்களின் தொகையை விட அதிகமாக இருப்பதால் அதைச் சமப்படுத்தவும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்ட அற்புத வழியன்றோ!உடன்பாடுகளை மீறாமலும், வாக்குறுதிகளைக் காப்பாற்றியும், அமானிதங்களை உரியவருக்கு உரிய காலத்தில் திருப்பிக் கொடுத்து வாழ்த்தும் மனிதர்கள்  ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் வாழ்ந்து உலகம் முழுவதும் தொழில் மயமாகி உலக மக்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு வேலை பெற்று மன நிம்மதியுடன் வாழ அல்லவா!அதிகாரத்திலுள்ளவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திறத்துடனும், அவர்களுடைய கலீபாப் பெருமக்களைப் போல் மக்களும் தொண்டாற்றும் திறன் கொண்டவர்களாகவும் அமைந்தது போல் இவ்வுலகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் அமைந்துவிட்டால் மக்களுக்கு ஏது கஷ்டம்? சீனம்சென்றேனும் சீர் கல்வி பெறுக! என்ற நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வாக்கு, அறிவைத்  தேடிக் கண்டு அறம் பெற்று அதை இந்த உலகத்திற்குப் பயன்படுத்தி வாழ்வதால் இந்த உலகமே கல்வி மயமாகி அமைதிப் பூங்காவாக மாறிவிடும் அல்லவா?இப்படி எத்தனையோ அமைதி வழிகளைத்தாம் நமது நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அமைத்துத் தந்துள்ளார்கள்.  எனவே நல்ல நோக்கத்துடன், அமைதியான வாழ்வைத் தேடிப் பெற நினைத்தால் அவர் ஓர் இஸ்லாமியராக மட்டுமே ஆக முடியும். தனிப்பட்ட முறையில் அமைதியை விரும்புபவர்கள் யாவரும் அதை தன் வாழ்வின் வழியாக்கி வைத்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதில்தான் பெறமுடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆரம்பமும் சாந்தி! முடிவும் சாந்தி ! இடையில் ஏன் விரக்தி?