ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

அமுத மொழிகள்


அஸ்ஸையித்  கலீல் அவ்ன்  மௌவ்லானா அல்ஹஸனிய்யுல்      ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் விளக்கம்ஷைகுனா அவர்கள் துபை வந்தபோது தங்கள் முரீதுகளுக்கிடையே ஆற்றிய உரையில் கூறியதாவது:


ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும் இறையைப் பற்றியும் அறிவது  முக்கியம். அதனையே தவ்ஹீத் (ஏகத்துவ மெய்ஞ்ஞானம்) என்கிறோம்.  ஆன்மீக ஞானம் உடையவர்கள் மட்டுமே பரிபூரணமாக இணைவைப்பு எனும் பெரும் பாவத்திலிருந்து நீங்க முடியும். ´ர்க் தான் மன்னிப்பே இல்லாத பெரும் பாவம். ஆக அந்த பாவத்திலிருந்து மக்களை நீக்கும் பணியைத்தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களும், கெளதுல் அஃலம் (ரலி) அவர்களும் செய்து வந்தனர். அதனையே நாமும் செய்து வருகிறோம்.  இவ்வுலக வாழ்வும் மறுவுலக வாழ்வும் நற்பயன் உடையதாக வேண்டுமானால் ஞானத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஞானத்தால் மட்டுமே உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் மனிதகுல மேம்பாடு அடைய முடியும். நாம் அனைவரும் ஒன்றிலிருந்தே வந்தோம் எனும் ஞான அறிவால் மட்டுமே சாதி, இன, மொழி வேறுபாடுகளைக் களைய முடியும்.


சிலர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் திருக்குர்ஆனைத் தாங்களே எழுதிக் கொண்டார்கள் எனத் தவறாகப் பேசியும்  எழுதியும் வருகின்றனர். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ படிக்கவோ, எழுதவோ தெரியாதவர்கள். உம்மிநபி இலக்கண இலக்கியத்தோடு பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ தெரியாதவர்கள்.  எப்படி இம்மாபெரும் திருக்குர்ஆனை எழுதியிருக்க முடியும்?  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் சொல், நடைஉடை, பாவனை, விளக்கம் யாவும் ஹதீஸ்களாகும். 


எனவே ஹதீஸ்களையும் படிக்க வேண்டும்; ஆராய வேண்டும்.  குர்ஆன் ஹதீஸில் அறிவியல் பொதிந்துள்ளது.  ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகளிலே அறிவியல் உள்ளது.  எனவே அக, புற வாழ்க்கைக்கு குர்ஆன், ஹதீஸ் மிக அவசியமானவையே.  தெளஹீத் எனும் ஞானத்திலிருந்தே இருளடைந்த உள்ளங்கள் தெளிவு பெறும்.  ஆன்மீகத்தின் மூலமே உலக மக்கள் மத்தியில் மண்டியுள்ள மெளட்டீகம், போட்டி, பொறாமை, சூது, குழப்பம் ஆகியன நீக்க முடியும்.  உலக மக்கள் அனைவரும் ஒரே அந்தஸ்தில் உள்ளவர்கள் என உணரச் செய்வதே ஆன்மீகமாகும்.


மக்களிடையே என்ன பேதமிருக்கிறது? எல்லாருக்கும் ஒரே விதமான உடலமைப்பே எல்லோரது உடலிலும் ஓடக் கூடியது ஒரே சிவப்பு நிற இரத்தமே. அனைவரும் ஒரே மாதிரியாகத்தானே சுவாசிக்கின்றோம். இப்படியிருக்க மனிதர்களிலேயே என்ன பேதம் இருக்கிறது? எனவே மக்களிடையே ஒற்றுமையும் மனிதநேயத்தையும் ஞானத்தால் மட்டுமே உண்டுபண்ண முடியும்.  இன்னும் சிலர் இஸ்லாத்தில் ஞானம் இல்லை எனப் பிதற்றுகிறார்கள்.  உண்மை என்னவென்றால் இஸ்லாத்தில் இருக்கும் எந்தவொரு தத்துவார்த்தங்களும் வேறு எங்கும் இல்லை.  எந்தக் குறைபாடும் இல்லாத மார்க்கம் இஸ்லாம். பரிபூரண ஞானம் நிறைந்த மர்க்கம் இஸ்லாம்.  பரிபூரண ஒழுங்கு முறைகள் கொண்ட மார்க்கம் இஸ்லாம். 


மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும், ­ரீஅத்தையும், நீதத்தையும், ஒற்றுமையையும் உண்டுபண்ணிய மார்க்கம் இஸ்லாம்.  இஸ்லாம் என்பது ஒன்றுதான்.  இஸ்லாத்தில் புதிதாக ஒருவர் சேர்ந்தால் அவரும் முஸ்லிம்தான்.  அவரோடு சேர்ந்து அமர்கிறோம், சாப்பிடுகிறோம், அவரும் நம் சகோதரர் தான்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கறுப்பு இனத்தவரான ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களைத் தங்களுக்கு அருகிலேயே வைத்திருந்தார்கள். இதுவே இஸ்லாம்.


இஸ்லாம் எம்பெருமானார் அவர்களின் அருங்குணாதிசயங்களைக் கொண்டே உதயமானது. வளர்ந்தது. வளர்ந்து வருகிறது.