ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

முதியோர் ஓய்வூதியத்  திட்டம்


ஆதரவற்றோர் முதியோர் ஓய்வூதியத்  திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற மனைவியர் ஓய்வூதியத் திட்டம். அந்த ஓய்வூதியத் திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் அந்த திட்டங்களுக்குத் தாங்கள் தகுதியானவர்களா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.



பின்னர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் அல்லது தனி வட்டாட்சியரிடம் (சமூக பாதுகாப்பு திட்டம்) உங்கள் கோரிக்கையை ஒரு வெள்ளைத்தாளில் மனுவாக எழுதிக் கொடுங்கள். அதைப் பெற்றுக் கொண்டு அவர்கள் ஒரு விண்ணப்பம் கொடுப்பார்கள்.



அது இலவச விண்ணப்பம் என்பதால் பணம் தரத் தேவையில்லை.  சரியான தகவல்களுடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.  எழுதப் படிக்கத் தெரியாது என்றால், தாலுகா அலுவலகங்களில் இதற்கென இருக்கும் தொண்டு அமைப்பினரிடம் பூர்த்தி செய்யக் கோரலாம்.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் உங்கள் பகுதிக்குரிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் சான்று பெற வேண்டும். விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வயது, முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரிதானா என்பதை உறுதி செய்த பிறகு அவர்கள் சான்றொப்பம் இடுவார். அதன் பிறகு, விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.



உங்கள் விண்ணப்பம் மீது தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத்  திட்டம்) நேரில் வந்து விசாரணை நடத்தி, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்களை மீண்டும் உறுதி செய்வார்.  பின்னர் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, வங்கிகள் மூலமாக மாதத்தின் முதல் வாரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும்.



மேற்கண்ட நடைமுறைகளுக்காக உங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  ஆனால்  இடைத் தரகர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் அல்லது வேறு யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள்.  லஞ்சம் கொடுப்பதும் குற்றமே.



வங்கிக்கு நேரில் சென்று பணம் எடுக்க இயலாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு உதவும் வண்ணம் தமிழக அரசு “ஸ்மார்ட் கார்டு” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள், பயனாளிகளின் வீட்டுக்கு நேரில் சென்று, அவர்களது ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி  ஓய்வூதியத் தொகையைக் கையிலேயே வழங்கிவிடுவர்.  இந்த ஸ்மார்ட் கார்டு திட்டம் மூலம் தற்போது  6 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.



ஓய்வூதியத் திட்டங்களுக்கான மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் ஆணை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பதாரர்கள் வருவாய் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.