ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

எண்ணும் ஏகத்துவமும்ஒரு சமயம் பாகப் பிரிவினை சம்பந்தமான வினா ஒன்றைக் கொடுத்து சரியான விடை தரும்படி ஷைகு ஆதம் ஹலரத் அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கணக்கைப் போட்டுக் கொடுத்ததும் விடைத் தாள்களை வாங்கிப் பார்த்தார்கள்.எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, எண் என்பதற்கு இலக்கணம் என்ன? என்று கேட்டார்கள். நாங்கள் யாரும் பதில் சொல்லவில்லை. பின்பு ஷைகுனா அவர்களே பதில் கூறினார்கள். அது ஒரு சொற்பொழிவாக இருந்தது.இதோ படியுங்கள் அதை: அல் அதது நிஸ்பு ஹாவியைஹி - எண் என்பது அதன் இரு பக்கங்களின் சரிபாதியாகும் - அதாவது, ஐந்து என்ற எண்ணை எடுத்துக் கொண்டால் அதன் முன் பக்கம் நான்கும் பின் பக்கம் ஆறும் இருக்கிறது. ஐந்தின் இரு பக்க எண்களான நான்கையும் ஆறையும் கூட்டினால் 10 என்று கூட்டுப் புள்ளி வரும்.  பத்தைச் சரிபாதியாகப் பிரித்தால் ஐந்து வந்துவிடும்.இதே போல எந்த எண்ணை எடுத்தாலும் அதன் இரு பக்கத்திலுள்ள எண்களைக் கூட்டி, இரண்டாகப் பிரித்தால் அந்த எண் வந்துவிடும். ஆனால் ஒன்றைத் தவிர. ஒன்றுக்குப் பின்னால் எண் இருப்பது போல் முன்னால் எண்ணில்லாததால் அதன் பக்கங்களையும் கூட்டி வகுப்பதற்கு வழியில்லை. அதனால் ஒன்று என்பது எண்ணின் இலக்கணத்தில் சேராமல் நழுவி நிற்கிறது.ஒன்று என்பது எண்ணின் இலக்கணத்தில் அகப்படாதது போன்றே, ஒருவனான இறைவனும் எண்ணில் அகப்படாதவனாக இருக்கிறான்! ஒன்று இறைவனுக்கு சொந்தமானது போல், இறைவன் ஒன்றுக்குச் சொந்தமானவனாக இருக்கிறான்.ஒன்றுக்கு மேல் இறைவனுமில்லை, ஒன்றுக்கு மேற்பட்டது இறைவனாகவும் இல்லை. அதாவது ஒன்று என்பது இறைவனைக் குறிக்கும் இலக்கமாக இருக்கும். அதனால்தான் மக்கள் அளவை, நிலுவை போன்றவற்றை எண்ணும்போது ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணாமல் இலாபம், இரண்டு, மூன்று என்று எண்ணுகிறார்கள்.ஒன்றை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக இலாபம் என்றோ அல்லது பழக்கத்துக்குத் தகுந்தவாறு எதையோ சொல்கிறார்கள். இதே போல் நூலாசிரியர்கள் யாவரும் தம் நூலுக்குப் பக்கங்களிடும்போது முதல் பக்கத்தை ஒன்று என்று குறிப்பிடாமல் ஏதாவது ஒரு குறியை இட்டோ அல்லது சும்மா விட்டோ விடுகிறார்கள்.ஒன்றுக்குப் பின்னால் இடப்படும் சைபருக்கு மதிப்பு இருப்பது போல் முன்னால் இடப்படும் சைபர்கள் எத்தனையானாலும் அதற்கு மதிப்பிருப்பதில்லை. இத்தன்மை போன்றே இறைவனுக்கு முன்னாலோ, இறைவன் இல்லாமலோ எந்தப் படைப்பும் உண்டாக முடியாது.எண்கள் அனைத்திலும் ஒன்று ஊடுருவி நிற்பதுபோல் படைப்புகள் அனைத்திலும் இறைவனின் சக்தி ஊடுருவி நிற்கிறது. உலக மொழியான ஆங்கிலத்திலும், அரபியிலும் ஒன்று என்ற இலக்கம் ஒரே மாதிரியாக இருப்பது போல் உலக மக்கள் அனைவரிடத்திலும் இறைவன் ஒருவனாகவே இருக்கிறான். இந்த இரகசியம் புரியாமல் மக்கள் மனம் போனபடி கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஷைகுனா அவர்கள் எண்ணிலே துவங்கி ஏகத்துவத்தில் தன் உரையை முடித்தார்கள்.

நன்றி : அல்பாக்கியாத்து நூற்றாண்டு மலர்.