ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

 கலீபா பெருந்தகைகள் 


தமிழ்மாமணி, மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சிசங்கைமிகு நாயகம் அவர்கள் சென்ற 11.11.1966 ஆம் ஆண்டு வலிய்யுல் கரீம் அவர்களுக்கு அருளிய பட்டோலை ஒன்றை இத்தருணத்தில் காண்போம்!மேலான முஷாஹதா (நிஷ்டை) பற்றி ஷைகு நாயகம் அவர்களின் அரிய விளக்கம்!


(1) ஐம்பூதங்களும் அவற்றுள் அடங்கியிருக்கும் அனைத்தும் அவனே. எல்லாவற்றையும் பூரணமான தன்மையில் எண்ணும்போது எல்லாமவனே.  நான், நீ என்றோ அவன் இவன் என்றோ, அவள் இவள் என்றோ இவைகளின் பன்மைகளிலோ, அது இது அவைகள் என்றோ எவ்வித்தியாசமும் எம்மிற் கொள்ளல் கூடாது. எல்லாமொன்று.  எல்லாம் ஹக்கு, எங்கும் நிறைந்தது என்று கொள்ளல் வேண்டும்.


(2)  இப்படிக் கொள்ளும் போது  ஆணும் நானே பெண்ணும் நானே, மிருகமும் நானே பட்சியும் நானே, ஆகாயமும் நானே, பூதலமும் நானே, பாதாளமும் நானே, சூரியனும் நானே சந்திரனும் நானே, அண்ட கோளங்கள் அனைத்தும் நானே. எல்லாம் நானே, எங்கும் நிறைந்தது நானே எனக் கொள்ளல் வேண்டும்.


(1) முதலாம் மர்தபாவில் எல்லாம் அவனே எனக் கொண்டு


(2) இரண்டாம் மர்தபாவில் அவன் என்றதைத் தன்னில் ஆக்கி எல்லாம் நானே என்று கொள்கிறோம்.


(3)  மூன்றாவதாக முடிவில் அவன் நான் என்ற தன்மைகளை நீக்கி எல்லாம் பூரணம், நிறைவு என்று என்று கொள்கிறோம்.  அப்போது ஜுஸ்உ என்னும் தன்மையே எம்மில் இல்லாதாகி குல்லு என்னும் தன்மை உண்டாகிறது.அப்போது எமக்கு ஆயிரம் சந்திரர்களும் ஒப்பாக மாட்டார்கள். ஆயிரம் சூரியர்களும் ஒப்பாக மாட்டார்கள்.  இதுவே பேரொளியாகும். தன்னை எல்லாவற்றிலுமாக்கிப் பூரணப்படுத்திக் கொள்ளல் வேண்டும். தன்னையோ தம் பெயரையோ எமக்குள்ள எதுகைகளையோ நினையாது இஸ்தம்பமான எம்மை மறந்த மறதி நிலையில் நாமாகி விட வேண்டும்.நிஷ்டையும் இதுவே. முஷாஹாதாவும் இதுவே. அப்போதே தன்னை அனள்ளாஹ் என்றும் அறிந்தவன் கூறுவான். ஹக். எனவே இதைக் கவனியுங்கள். இதில் சிந்தனை செலுத்துங்கள். திக்ரையும் பிக்ரையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அதிகப் பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளுங்கள். தனியே இருந்து சில நேரங்களாவது திக்ரும், பிக்ரும் செய்யுங்கள்.அல்லாஹ்வின் நாமங்களை அனேகம் உள்ளாலும் வெளியாலும் செய்து வாருங்கள். இவைகள் எல்லாம் உடலையோ, மனநிலைகளையோ பாதிக்கக் கூடாத முறையில் இருத்தல் வேண்டும். ஆகாயத்தில் பரந்த வெளியில் பார்வையைச் செலுத்துதல் வேண்டும்.ஆகாயத்தின் காட்சிகளை அனேகம் கவனிப்பது மேன்மையாகும்.  முடியுமானால் தஹஜ்ஜுத் தொழுது வாருங்கள்.  குர்ஆனில் சிறிதளவாவது நாள்தோறும் ஓதி வாருங்கள். ஹக்கு உங்களுக்கு நல்ல மனாம்களையும், நல்ல காட்சிகளையும் சீக்கிரம் என் வாப்பா நாயகம் அவர்களின் பொருட்டால் தந்தருளும். நிலைமைகளை அறிவித்து வாருங்கள். ஹக்கில் ஹக்காய் வாழ்வீர்கள். அஞ்சாதீர்கள். ஹக்கின் அஸ்மா ஸிபாத்துக்கள் உங்களில் தஜல்லியாகுமாக. (கண்ணியம் தொடரும்)