ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

திருமறை அறிவியல்

உயிருக்கு உயிராக...


அனைத்துப் பொருள்களையும் சூழ்ந்து அவற்றின் மீது பேராற்றலுடையவனாகத் திகழும் இறைவன் பூமியைப் படைத்து அதில் பல தனிமங்களையும் உருவாக்கி அவனுடைய அருளால் தண்ணீரையும் படைத்து அதன்பின் உயிரினங்களையும் படைத்ததைப் பற்றித் திருமறையின் சில வசனங்கள் வாயிலாக எடுத்தியம்புகிறான்.


உயிரினங்கள் நீரிலிருந்து படைக்கப்பட்டன என்ற கருத்தை வலியுறுத்தும் திருவசனங்களில் சிலவற்றை ஆராய்வோம்.

நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித் (தமைத்) தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் இறை நிராகரிப்போர் பார்க்கவில்லையா? - (அல் அன்பியா 21:30)”


மேலும் எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளோம். அவர்கள் நம்ப வேண்டாமா?. (அந்நூர் 24:45)”

          உயிரியல் அறிஞர்கள் உயிரினங்கள் தண்ணீரிலிருந்துதான் முதலில் தோன்றின என்பதை ஆராய்ந்து ஏற்றுக் கொண்டு அதனை அறிவியல் உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள். அறிவியல் அறிஞர்கள் தங்களது அரிய அறிவியல் ஆராய்ச்சியின் வாயிலாக உயிரினங்கள் தோன்றியது எப்படி என்பதைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்கள்.

அறிவியலார் கூற்றுப்படி பூமி தோன்றியபொழுது பூமியின் மேற்பரப்பில் நீர், மீத்தேன் மற்றும் அம்மோனியா போன்ற வேதி மூலக் கூறுகள் இருந்தன. இவ்வாறு உயிரினத் தோற்றத்திற்கு உயிர் வேதியியல் பொருள்களே மூல காரணம் என்பதைப் பரிசோதனைகளின் வாயிலாக அறிவியலார் நிரூபித்துள்ளனர். பூமி தோன்றிய காலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்ட நீராவி, அம்மோனியா மற்றும் மீத்தேன் கலவையைத் தங்கள் ஆராய்ச்சிக்கு யூரே மற்றும் முல்லர் (1953) எடுத்துக் கொண்டனர். இது போன்ற மீத்தேன் திரவ ஏரிகள் தற்பொழுது சனிக்கிரகத்தின் உபகிரகமான டைட்டனில் இருப்பதாக விண்கலம் ஜனவரி 2007ல் எடுத்துள்ள வீடியோ படங்கள் மூலம் அறிகிறோம்


இது போன்றுதான் பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்னர் உள்ள ஒரு காலக் கட்டத்தில் மீத்தேன், தண்ணீர் அம்மோனியா ஆகியவை பூமியில் இருந்தன. யூரே மற்றும் முல்லர் இருவரும், நீராவி, மீத்தேன் மற்றும் அம்மோனியா கலந்துள்ள ஒரு சோதனைக் குடுவையில் 75000 வோல்ட் அளவுள்ள மின்சார அதிர்வைப் பாய்ச்சினர். என்ன ஆச்சர்யம்! இரண்டு வாரங்களுக்குப் பிறகு குடுவையில் உள்ள நீரில் சர்க்கரை, புரதத்தை உருவாக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு ஆகியவற்றைக் கண்டனர். அதன் பிறகு அமினோ அமிலங்கள் மூலம் புரதத்தை உருவாக்குவதிலும் புரதத்தையும், நியூக்ளிக் அமிலத்தையும் இணைப்பதிலும் அறிவியலார் வெற்றிக் கண்டனர்


உயிரினத்தைத் தோற்றுவிக்கக் கூடிய கரிமவேதிக் கூட்டுப் பொருள்கள் செவ்வாய்க் கிரகத்தில் இருப்பதாக அறிவியலார் அறிவித்துள்ளனர். அவர்கள், உறை நிலையில் உள்ள பாறைகள் எரிமலை வெடிப்பின் வெப்பத்தின் பிடியில் இத்தகைய கரிம வேதிப்பொருள்களைத் தோற்றுவிக்கின்றன என்று கண்டு பிடித்துள்ளனர்.

ஆக உயிர் வேதியியலார் ஆரய்ச்சியின் முடிவுகளின்படி மண்ணிலுள்ள தனிமங்களிலிருந்து நீரும், உப்புக்களும், கரிமப் பொருள்களும் உருவாகி அவற்றின் கலவையிலிருந்து புரோட்டோ பிளாசமும் தோன்றிப் பின்னர் புரோட்டோ பிளாசத்திலிருந்து ஆரம்ப நிலை உயிர்கள் தோன்றின என்றும் அறிகிறோம். மேற்சொன்ன கூற்றுப்படி புரோட்டோ பிளாசம் எனப்படுவது முதலில் தோன்றிய ஓர் உயிர்ப் பொருள் ஆகும். இதுவே உயிரின் அடிப்படைத் தெரியியல் பொருள் எனத் தாமஸ் ஹக்ஸ்ஸி (1868) குறிப்பிட்டார். புரோட்டோ பிளாசத்தினால் தான் உயிரினங்களின் செல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டடம் எவ்வாறு பல செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதோ அவ்வாறே உடலும் பல பில்லியன் நுண்ணிய செல்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது, ஆக செல் உடலின் அடிப்படை அலகு,

புரோட்டோபிளாசத்தில் நீர், பலவித உப்புக்கள், கரிமப் பொருள்களான நியூக்ளிக் அமிலங்கள், புரதங்கள், சர்க்கரைப் பொருள்கள், கொழுப்புப் பொருள்கள், வைட்டமின்கள் மற்றும் மண்ணில் காணப்படும் 92 வகை தனிமங்களில் சுமார் 54 தனிமங்களும் உள்ளன. இவற்றில் 12 வகையான தனிமங்கள் மிகவும் முக்கியமானவை. இவை வெவ்வேறு அளவில் உள்ளன. அவற்றில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், இவை அதிக அளவில் உள்ளன


மொத்த எடையில் இவை 99% ஆகும். மீதமுள்ள 8 தனிமங்களாவன : கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், குளோரின், சல்பர், மெக்னீசியம் மற்றும் இரும்பு. இவை தவிர குறைந்த அளவில் உள்ள (0.755%) தனிமங்களான தாமிரம், கோபால்ட், துத்தநாகம், போரான், சிலிகான், அயோடின் போன்றவையும் காணப்படும். இந்தத் தனிமங்கள் வெவ்வேறு அளவில் இணைந்து மேலே சொல்லப்பட்ட கரிமப் பொருள் களையும், நீரையும் தோற்று விக்கின்றன. இதில் தண்ணீரின் அளவு 80% முதல் 85% வரையாகும். புரோட்டோபிளாசத்தில் உள்ள வேதிப் பொருள்கள் ஒன்று சேர்ந்து கூழ் நிலையில் உள்ளது. அதனால் புரோட்டோபிளாசம் பிசுபிசுப்பான பொருளாக உள்ளது


இது திரவ நிலையிலிருந்து திட நிலைக்கும் திட நிலையிலிருந்து திரவ நிலைக்கும் மாறிக் கொண்டு உயிர்வேதியியல் நிகழ்வுகளுடன் வாழும் திறனுடன் ஓர் உயிர்ப் பொருளாக உயிரினங்களின் படைப்பிற்கு ஆதாரமாக அமைந்துள்ளது. ஆக இந்த உயிர்ப் பொருளான புரோட்டோ பிளாசத்தின் உருவாக்கத்திற்கும், அதில் நிகழக் கூடிய உயிர் வேதியியல் கிரியைகளுக்கும் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


மேலே சொல்லப்பட்ட அறிவியல் கருத்துகள் அனைத்தும் கீழ்க்காணும் இறை வசனங்களில் நாம் சிந்தித்துணரும்படி சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

“நிச்சயமாக நாம் மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் (மூலத்திலிருந்து) படைத்தோம். 23:12”“

அவனே, தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான். இன்னும் அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான் (அஸ்ஸஜ்தா - 32:7)”

மேலே சொல்லப்பட்ட முதல் வசனத்தில் புரோட்டோபிளாசத்தில் உள்ள தனிமச் சத்துக்கள் களிமண்ணிலிருந்து பெறப்பட்டது எனவும், இரண்டாவது வசனத்தில் உள்ள பிசுபிசுப்பான களிமண் என்பது புரோட்டோ பிளாசத்தைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆதியில் உயிரினப் படைப்பைப் பிசுபிசுப்பான களிமண்ணாலான புரோட்டோ பிளாசத்திலிருந்து தொடங்கி இறுதியாக இந்திரியத் துளியால் மனிதனையும் அவன் சந்ததிகளையும் படைத்திருப்பதைச் சுட்டிக் காட்ட மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான் என்னும் சொற்றொடர் தெளிவாகவும் சுருக்கமாகவும் எடுத்தியம்புகிறது.

தகவல் : ஆஷிகுல் கலீல், திருச்சி