ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

பெரம்பலூர் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபைக் கூட்டத்தில் 


மலர்ந்த மொட்டுகள் !


கலீபா. பு. முஹம்மது காசீம், பெரம்பலூர்.

15.11.2014 சனிக்கிழமை மஃரிபுக்குப் பின் பெரம்பலூர் ஏகத்துவ மெய்ஞான சபைக் கூட்டம் கலீபா முஹம்மது காசீம் அவர்களின் கலீல் இல்லத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கலீபா முஹம்மது காசிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருச்சி பேராசிரியர் மெளலவி முஹம்மது ரபீஉத்தீன் ஆலிம் நூரி அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு நிகழ்த்திய உரையில்...


ஹள்ரத் அலி (ரலி) அவர்களின் தாயார் நிறை கர்ப்பத்துடன் புனித கஃபத்துல்லாவை தவாபு செய்யும்போது அலி (ரலி) அவர்களை ஈன்றெடுத்தார்கள். அவர்கள் கண் திறக்காமலிருந்ததால் அவர்களின் தந்தை அபூதாலிப் அவர்கள் அச்சிறிய குழந்தையை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எடுத்துச் சென்று விஷயத்தைத் தெரிவித்தார்கள். அப்பொழுது அலி (ரலி) அவர்கள் கண்விழித்து முதன் முதலாக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான முகத்தைப் பார்த்தார்கள். அப்பொழுது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டினார்கள். அச்சமயத்தில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இக்குழந்தை என் புனிதமான பூத உடலைக் குளிப்பாட்டுவார் என்று பஷாரத் செய்தார்கள்.


ஒரு சமயம் எட்டு நாட்களாக நடந்தும் கைபர் யுத்தத்தில் முஸ்லிம் படைகளுக்கு வெற்றி கிட்டவில்லை. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி (ரலி) அவர்கள் எங்கே? என ஸஹாபாக்களிடம் வினவினார்கள். அவர்கள் கண் நோயினால் பீடிக்கப்பட்டு வீட்டிலிருப்பதாக அறிவிக்க, அவர்களை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள். அவர்கள் வந்தவுடன் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் முபாரக்கான இரு கட்டை பெருவிரல்களால் அலி (ரலி) அவர்களின் கண்களைத் தடவிவிட்டு யுத்தத்திற்குச் சென்று வெற்றியுடன் வரும்படி பஷாரத் செய்தார்கள்


கடுமையான யுத்தம் நடக்கும்போது, அலி (ரலி) அவர்களின் வாள் உடைந்த நிலையில் கைபர் கோட்டை வாசலுக்குப் பின்னோக்கிச் சென்று கோட்டையின் கதவைப் பிடுங்கித் தூக்கி, அதையே ஆயுதமாகப் பயன்படுத்தி யுத்தத்தில் வெற்றி வாகை சூடினார்கள். சில ஸஹாபாக்கள் அலி (ரலி) அவர்களிடம் 40 பேர் சேர்ந்து தூக்க முடியாத கதவை எப்படித் தூக்கினீர்கள்? என்று வினவியதற்கு, அதற்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யுத்தம் செய்து வெற்றியுடன் வாருங்கள் என்று பஷாரத் செய்த காரணத்தால் அதைத் தூக்கினேன் என்றார்கள். இதுதான் குரு முரீது உடைய தொடர்பாகும் கலீபா முஹம்மது காசீம் அவர்கள் தமது தலைமை உரையில் அஹ்லுல் பைத்களின் சிறப்பைப் பற்றி தெளிவாக ஆதாரத்துடன் எடுத்துக் கூறினார்கள்.

அன்னை உம்மு ஸல்மா(ரலி) அவர்களிடம் சிலர் வந்து தங்களுக்கும் வாந்தி பேதி இருப்பதாகக் கூறியபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான ஜுப்பாவை எடுத்து தண்ணீருக்குள் போட்டு, முக்கி எடுத்து அந்த தண்ணீரைக் குடிக்கச் சொன்னார்கள். உடனே அவர்களின் நோய் நீங்கியதை ஹதீதுகளில் பார்க்கிறோம். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடைக்கிருந்த இந்த மகத்துவம் அவர்களின் ரத்தத்தின் ரத்தமாக உள்ள அவர்களின் அஹ்லுல் பைத் என்னும் திருக்குடும்பத்தார்களுக்கும் இந்த மாண்புகளை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்பதை நாம் உணர வேண்டும்


அஹ்லுல் பைத்களைப் பரிசுத்தப் படுத்திவிட்டதாக இறைவன் கூறுவதால், நம்முடைய சங்கைமிகு வாப்பா நாயகம் குடும்பத்தாரையும் சுத்தப்படுத்திவிட்டது என்பதும் உண்மையிலும் உண்மையே. இன்னும் என்னுடைய குடும்பத்தார் நூஹு நபியின் கப்பலைப் போன்றவர்கள். யார் அவர்களை நம்பி அதில் ஏறிக்கொண்டார்களோ அவர்கள் ஈடேற்றம் பெற்றார்கள் என பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுறுத்தியிருப்பதால் அதில் ஏறிக்கொள்வதுதான் நமது கடமை.


சங்கைமிகு நமது வாப்பா நாயகம் அவர்களும் அஹ்லுல் பைத் திருக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களாதலால் அவர்களை அண்டி பைஅத் பெற்று சீரும் சிறப்புடன் வாழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் மகத்தான அறிவுடைய மாமேதை என்பது நாம் அறிந்ததே. அவர்களுக்கு தீர்க்க முடியாத மார்க்க விஷயங்களில் ஏதேனும் சந்தேகம் தோன்றினால் அஹ்லுல் பைத்களில் குலக் கொழுந்தாகிய நபீஸத்துல் மிஸ்ரிய்யா (ரலி) அவர்களின் வீட்டின் வாசற்படியில் சென்று அமர்ந்து கொள்வார்கள். அவர்களிடம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் எதையும் கேட்காமலேயே அல்லாஹூ அவருக்கு அதற்கான தீர்க்கமான அறிவை வழங்கி சந்தேகத்தைத் தீர்த்து விடுவான் என்று ஷாபியீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்


நாமும் நம்முடைய தீர்க்க முடியாத பிரச்சினைகளோ தீர்க்க முடியாத சந்தேகங்களோ ஏற்பட்டால், நமது சங்கைமிகு வாப்பா நாயகம் நடத்தும் மீலாதுவிழாவில் கலந்து கொள்வதால் தீர்வு கிடைக்கும். அல்லது அவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து ஷர்புதீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் தமது உரையில்...

ஒரு நேரத்தில் அன்னை பாத்திமா நாயகி (ரலி) அவர்கள் சிறு குழந்தையாக விளையாடிக் கொண்டிருக்கும்போது அபூஜஹ்ல், அவர்களின் முபாரக்கான கன்னத்தில் ஒரு அறை அறைந்து விட்டான்.


பாத்திமா நாயகி அவர்கள் தங்கள் தந்தை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இந்நிகழ்ச்சியை அழுது கொண்டே தெரிவித்தார்கள். உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஸுப்யானிடம் போய் நடந்ததைத் தெரிவியுங்கள் என்று கூறினார்கள். அபூஸுப்யான் அன்னை பாத்திமா நாயகியுடன் அபூஜஹ்லிடம் சென்று எப்படி உன் கன்னத்தில் அறைந்தானோ, அதே போல் நீங்கள் அவன் கன்னத்தில் அறையுங்கள் என்று சொன்னார்கள்


அவர்கள் அபூஜஹ்லின் கன்னத்தில் அதே மாதிரி அறைந்ததில் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று சரித்திரத்தில் பார்க்கின்றோம். பிற்காலத்தில் இதன் பரக்கத்தால் அபூஸுப்யான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என்பதை நாம் அறிவோம். நாமும் அஹ்லுல் பைத்தைச் சேர்ந்த சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்களின் கைப்பிடித்து பைத் பெற்று ஈருலக நல்வாழ்வு வாழும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆமீன், யாரப்பல் ஆலமீன்.