ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

அனுபவம் புதிது

இரண்டுநாள் இந்தியப் பிரயாணம் !


- அஹ்மத் தஷ்ரீப் ஹக்கிய்யுல் காதிரிய் – இலங்கை
நான் அஹ்மத் தஷ்ரீப்; இலங்கையில் எழில்மிகு கண்டி மாநகரின் மடவளை எனும் ஊரைச் சேர்ந்தவன். 17 வருடங்கள் இலங்கையில் வங்கித் தொழில் செய்துவிட்டு 2007 முதல் துபையில் ஒரு நிதி நிறுவனத்தில் பணி செய்து வருகிறேன்.


முற்றத்து மல்லிகை மணக்காது என்று சொல்லுவார்கள். ஷெய்கு நாயகம் அவர்கள் இலங்கையில் இருந்தாலும், இலங்கையில் கரம் பற்றும் பாக்கியம் துபையில்தான் எனக்குக் கிடைத்தது. இதற்காக ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அதன் மூலமாகத்தான் நான் ஷெய்கு நாயகம் அவர்களைப் பற்றி அறிந்தேன். ஷெய்கு நாயகம் அவர்களின் கரம் பற்றிய அன்று முதல் இன்று வரை என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், முன்னேற்றங்கள் இவர்களைப் பற்றிக் கூறுவதனால் விரிந்து கொண்டே போகும். இக்கட்டுரையின் நோக்கம் எனது இனிய இரண்டு நாள் இந்தியப் பயணம் குறித்த அனுபவப் பகிர்வை நம்மிடையே பகிர்ந்து கொள்வதற்காகத்தான்.


இலங்கை வாழ் முரீதுப் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கிணங்கவும், என்னுடைய பேரவாவின் காரணமாகவும், எழில்மிகு திருமுல்லைவாசலில் குடிகொண்டிருக்கும் மேன்மைக்குரிய மகான் நமது ஷெய்கு நாயகம் அவர்களின் தந்தை யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின் 50 ஆவது வருட கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக எனது இந்த இந்தியப் பயணம் தொடர்ந்தது.


இரண்டு நாள் இந்தியப் பயணம், எண்ணற்ற நிகழ்வுகள், சந்திப்புக்கள், மனம் மலர்ந்தது, அகம் நெகிழ்ந்தது.


துபையில் இருந்து கொழும்பு வழி விமானத்தில் திருச்சி புறப்பட்டேன். திருச்சி சென்றடைந்ததும் நமது ஆத்ம சகோதரர்கள் மன்னார்குடி மாலிக் அவர்களும், ஷேக் தாவூது அவர்களும் என்னோடு இணைந்து கொண்டார்கள். மூவருமாக ஏர்போர்டிலிருந்து நமது ஷெய்கு நாயகம் அவர்களின் அருமைப் பாட்டனார் ஜமாலிய்யா மெளலானா (ரலி) அவர்கள் குடி கொண்டிருக்கும் எழில்மிகு சம்பைப்பட்டினம் நோக்கி பயணமானோம். நாங்கள் சம்பையை அடைந்தோம்.


அப்பா நாயகம் அவர்களின் தர்ஹா ஷரீப்; என்ன ஒரு ரம்மியம், அமைதி. மனதைச் சாந்தியடையச் செய்யும் அமைதிச் சூழல். சம்பையிலேயே குளித்து முடித்து ரீ-ஃப்ரஷ் செய்து கொண்டு நமது அப்பா நாயகம் அவர்களைத் தரிசித்து, பாக்கியம் பெற்றோம். பிறகு அருகில் உள்ள ஊரான அதிராம்பட்டிணம் நோக்கிச் சென்றோம். அங்கே ஆத்ம சகோதரர் அதிரை அப்துல் ரஹ்மான் இல்லத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்பான உபசரிப்பு; அருமையான உணவு.


அறிமுகம் இல்லாத எங்களை அன்பால் இணைத்து வைத்தது ஷெய்கு நாயகம் அவர்கள் அன்றோ? நன்றியுணர்வு முகிழ்ந்தது.


மதிய உணவை முடித்துக் கொண்டு மதுக்கூர் வழியாக மன்னார்குடி சென்று, நண்பர் மாலிக் அவர்களை இறக்கி விட்டு, எனது பயணம் நாகூரை நோக்கித் தொடர்ந்தது. நாகூர் மேன்மைமிகு மகான் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) அவர்களின் தர்ஹா ஷரீபை அடைந்து ஜியாரத் அமைதியாகச் செய்து முடித்தேன். நாகூரில் எனக்கு செய்யது அலி மெளலானா அவர்களின் மச்சான் அவர்கள் உதவியாக இருந்தார்கள். அன்றிரவு நாகூரில் ஒரு ஹோட்டலில் தங்கினேன். மறுநாள் காலை நாகூரில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கிப் புறப்பட்டேன். என்னோடு செய்யது அலி மெளலானா அவர்களின் மச்சான் அவர்களும் குடும்பத்தோடு இணைந்து கொண்டார்கள்.

திருமுல்லையைச் சென்றடைந்ததும் எனக்கு முதலில் வந்த ஞாபகம் நம்மூரின் ஞாபகம் தான். அதே பசுமையான சூழல். அந்த அமைதியான சூழலில் தந்தை நாயகம் அவர்களின் தரிசனம், முழமையாக கந்தூரி நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொண்டேன். அன்று மதிய உணவு செய்யது அலி மெளலானா அவர்களுடைய இல்லத்தில் அன்பான உபசரிப்போடு நடந்தது. விழாவிற்கு சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த ஷேக் அப்துல்லா ஜமாலி அவர்களோடு ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்தோம்.


கந்தூரி விழா மிகவும் சீருடனும் சிறப்புடனும் நடைபெற்றது. அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு சந்தோஷமாகவும், நிறைவாகவும் இருந்தது. கந்தூரி நிகழ்வுகளின்போது தந்தை நாயகம் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழா நிகழ்வும் நடைபெற்றது. அப்போது என் முழுப் பெயரையும் அழைத்து எனக்கும் ஒரு பிரதியைத் தந்து கெளரவித்தார்கள்.


மாபெரும் மகான் அவர்களின் 50 ஆம் கந்தூரி வைபவத்திற்கு இலங்கை சார்பாகக் கலந்து கொண்ட ஒரே முரீதுப் பிள்ளையும் அங்கு நான்தான். வாப்பா நாயகம் அவர்கள் தந்த பாக்கியமாகத் தான் இதைக் கருதுகிறேன். பெருமைப் படுகிறேன். பல ஊர்களிலுமிருந்து திரளாக வந்திருந்த முரீதுப் பிள்ளைகளோடு பேசவும், பழகவும் சந்தர்ப்பம் கிடைத்தது; அளவளாவி மகிழ்ந்தேன். கந்தூரி விழாவையும் தந்தை நாயகம் அவர்களின் தரிசனத்தையும் இனிதே முடித்துக் கொண்டு இரவு நான் மன்னை மாலிக்கோடு இணைந்து கொண்டு மன்னார்குடி புறப்பட்டேன். மன்னையில் மாலிக் குடும்பத்தை டிராப் செய்துவிட்டு எங்கள் பயணம் திருச்சி நோக்கித் தொடர்ந்தது. அன்றிரவு திருச்சி பெமினா ஹோட்டலில் தங்கினோம்.


மறுநாள் காலை, தயாராகிக் கொண்டிருக்கும் ஷெய்கு நாயகம் அவர்களுடைய புதிய இல்லத்தைக் காண்பதற்காக ஆவலுடன் சென்று தரிசித்தோம். பின்பு ஷெய்கு நாயகம் அவர்கள் நிறுவிய மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் மதுரஸாவிற்குச் சென்று மதுரஸா மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்தேன். அவர்களுக்காக கொண்டு சென்ற பரிசுகளை அவர்களுக்கு அளித்து விட்டு அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினோம். மாணவர் முன்பாக சிறிது நேரம் பேச முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஷெய்கு நாயகம் அவர்களைப் பற்றி ஒரு சிறிய உரை நிகழ்த்தினேன். அளவில்லா சந்தோஷம், மனநிறைவோடு ஆசிரியர், மாணவர்களோடு விடைபெற்றுக்கொண்டு திருச்சி ஏர்போர்ட் பயணமானேன். என் துபை இந்தியப் பயணம் இனிதே நிறைவடைந்தது.


என்னுடைய இந்தப் பயணம் முழுவதும் சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்களுடைய உதவியும், கராமத்துக்களும் தொடர்ந்து கொண்டே வந்தன. அவைகளில் சிலவற்றைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.


நான் எடுத்த விமான டிக்கெட்டின் படி துபையில் இருந்து கொழும்பு சென்று மீண்டும் வேறு விமானத்தில் கொழும்பில் இருந்து திருச்சி செல்ல வேண்டும். கொழும்பு ஏர்போர்ட்டில் இறுதி நேரம் விமானத்தில் ஏற அழைப்பு வருகிறது. அந்நேரத்தில்தான் எனது லக்கேஜை நான் பார்க்கிறேன். அது அங்கு இல்லை. நான் கடந்து வந்த பகுதி ஒவ்வொன்றாகத் தேடிப் போகிறேன். இறுதியில் அது நான் தேனீர் அருந்திய இடத்தில் (அப்படியே) ஒரு சேதமுமின்றி இருந்தது. நான் தவறவிட்டதிலிருந்து 45 நிமிடம் கழித்து அது எனக்கு மீண்டும் கிடைத்தது. அதை செக்யூரிட்டி ஆபிஸில் எடுத்து வைத்திருந்தால் கூட அதைத்தேடி அவரிடம் பெற்றுக் கொள்ளவோ எனக்கு அவகாச மிருந்திருக்காது. இது அந்த நேரத்தில் கிடைத்த மாபெரும் உதவி.


இரவு நேரம் நான் திருமுல்லைவாசலில் இருந்துமன்னை சென்று கொண்டிருந்தேன். வழியில் சாலை மறியல் போராட்டத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் பேனரை யாரோ கிழித்து விட்டனர் என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு அவ்வழியே வரும் வாகனங்களை மறித்துப் போக விடாது தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் செல்லும் வாகனமும் நிறுத்தப்பட்டது. இது எப்போது முடியுமோ? போலீஸ் எப்போது வந்து சாலை சரி செய்யப்படுமோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் ஒருவர் நேரே எமது வாகனத்தை நோக்கி வந்தார். எங்களைப் பார்த்துக் கூறினார். நீங்கள் சிறிது ரிவர்ஸ் எடுத்து வலது பக்கம் திரும்பும் சாலை வழியே சென்று, இன்னும் சில திரும்பும் வழிகளைக் கூறி இவ்வழியே சென்றால் மெயின் ரோட்டைப் பிடித்து விடலாம் என்று சொன்னார். அதன்படியே சென்று சிரமமின்றி மன்னார்குடியை அடைந்தோம். இவ்வுதவியை என்னவென்பது. இரவு நேரம்.


பயணம் தடைப்படுகிறது, ஒருவர் எம்மை நோக்கி வருகிறார், மாற்று வழியைக் காண்பித்து உதவுகிறார். மறியல் நடந்த இடத்திலேயே மாற்று வழி ஒன்றும் இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். எங்களுக்கான ஷெய்கு நாயகம் அவர்களுடைய உதவியும் எம்மைத் தொடர்கிறது. மதுரஸா பிள்ளைகளுக்காக சாக்லெட் கொண்டு சென்றேன். ஒரு பாக்கெட் ஒரு மாணவருக்கு என்று இங்கேயே பிரித்து ரெடி செய்து கொண்டு சென்றேன். அதில் மெல்ட் (உருக்கக் கூடிய) ஆகக்கூடிய சாக்லெட்டும் இருந்தது. முன்பாகவே அது ரெடி செய்யப்பட்டு பாக்கெட்டில் போடப் பட்டதால் பிள்ளைகளுக்குக் கிடைக்க ஐந்து நாளாகிவிட்டது.


பாக்கெட் செய்த 3 ஆவது நாள் அதை எடுத்துப் பார்த்த போது அது மெல்ட் ஆகி இருந்தது. நான் நினைத்தேன் ஆஹா இப்போதே மெல்ட் ஆகிவிட்டதே. பிள்ளைகளுக்குக் கிடைக்கும்போது என்னாகுமோ என்று நினைத்தேன். போதாதற்கு என்னுடைய பயணம் முழுவதும் நல்ல வெயில் நேரத்தில். மதுரஸா பிள்ளைகளைச் சந்திக்கும் நாள் வந்தது. அனைவருக்கும் சாக்லெட் வழங்கப் பட்டது. எனக்கு மட்டுமல்ல; இது உங்களுக்கும் ஆச்சர்யமாகவே இருக்கும்


சாக்லெட் சிறிதும் மெல்ட் ஆகாமல் நல்ல நிலையிலேயே இருந்தது. கொண்டு சென்ற எனக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்று ஷெய்கு நாயகம் அவர்கள் செய்த உதவியை எண்ணி மகிழ்ந்தேன். துபையில் இருந்து இரண்டு நாள் இந்தியப் பயணம் செல்கிறேன் என்பதைக் கேட்டதும் துபை நண்பர்கள் கேட்டார்கள். எப்படி இரண்டு நாளில் இவ்வளவு வேலைகளையும் செய்யப் போகிறீர்கள்? ஆனால் அந்தக் கடினமான ஒன்றை கராமத்துக்களை நடத்தி இலகுவாக்கிக் கொடுத்தார்கள் எங்கள் ஷெய்கு நாயகமவர்கள்.

இந்தியப் பயணம் முடித்துக் கொண்டு துபை திரும்பிய ஒரு வாரம் கழித்து, எனது வழமையான விடுமுறைப் பயணத்திற்காக இலங்கை சென்றேன். எனது இல்லத்திற்குச் சென்று, இரண்டு நாட்களுக்குப் பிறகு ஷெய்கு நாயகம் அவர்களை வெலிகாமா சென்று சந்திக்கவும், அவர்கள் இல்லத்தில் நடைபெறும் ராத்திப் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் எனது வாகனத்தில் தனியாகப் பயணத்தைத் தொடங்கினேன். எனது ஊரில் இருந்து 300கி.மீ தூரம், போய்வர 600 கி.மீ ஆகும். கண்டியிலிருந்து கொழும்பு தனியாகப் பயணம் செய்தேன்.


ஷெய்கு நாயகம் அவர்களுடைய கராமத் பாருங்கள். கொழும்புவிலிருந்து வெலிகாமா பயணத்தில் ஷெய்கு நாயகம் அவர்களுடைய முரீதுப் பிள்ளை என்னோடு துணையாக பயணத்தில் இணைகிறார். அது மட்டுமல்ல. நான் திரும்பும் போதும் வெலிகாமாவிலிருந்து கொழும்புவிற்கு வேறு ஒரு முரீதுப் பிள்ளையும், பிறகு கொழும்புவிலிருந்து கண்டி பயணத்தில் எனது நண்பரும் என்னோடு துணையாகச் சேர்ந்து இணைந்து கொள்கிறார்கள். இங்கேயும் ஷெய்கு நாயகம் அவர்களுடைய உதவியை நான் பார்க்கிறேன்.


அல்ஹம்துலில்லாஹ். மஃரிபிற்கு முன்பாக ஷெய்கு நாயகம் அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புன்முறுவலோடும் அன்பாகவும் வரவேற்றார்கள். அதே அன்பான, அருளான புன்முறுவலான ஷெய்கு நாயகம் அவர்களைக் கண்டதும் நான் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது. அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது என் இந்தியப் பயணம் பற்றிக் கூறினேன்.


சந்தோஷப்பட்டார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மஃரிப் தொழுகைக்காக விடை பெற்றோம். தொழுகை முடிந்ததும் ஷெய்கு நாயகம் அவர்களின் இல்லம் மீண்டும் சென்றேன். அங்கு அவர்கள் மாதந்தோறும் 14 ஆம் பிறைகளில் நடத்தி வரும் பாக்கியம் நிறைந்த ராத்திப் மஜ்லிஸில் ஷெய்கு நாயகம் அவர்களோடு, நானும் மற்றும் இலங்கை முரீதுப் பிள்ளைகளும் கலந்து கொண்டோம்


மாதந்தோறும் நாங்கள் துபையில் ராத்திப் ஓதி வந்தாலும் ஷெய்கு நாயகம் அவர்களோடு, அவர்களுடைய இல்லத்தில் சேர்ந்து ஓதுவது என்பதுமிகுந்த பாக்கியமான ஒன்று அல்லவா? அழகு, ஒருவித வித்தியாசமான உணர்வு; இலங்கை முரீதுப் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் அதிசயமான பாக்கியம் அது. பாக்கியம் பெற்ற நான் ஷெய்கு நாயகம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இரவு உணவை அவர்களோடு சேர்ந்து அருந்தும் பேறையும் பெற்றேன்.


இரவு உணவிற்குப் பிறகு ஷெய்கு நாயகம் அவர்கள் ஹாலிற்கு வந்து அமர்ந்தார்கள். நான் மற்றும் முரீதுப் பிள்ளைகள் யாவரும் அவர்களோடு அமர்ந்தோம். அரை மணி நேரம் பல விஷயங்களையும் அருமையாக பேசிக் கொண்டிருந்தோம். நாட்டு விஷயங்கள், தமாசா விஷயஙக்ள், ஞான விஷயங்கள் என பலவாறாகப் பேசிக் கொண்டிருந்தோம். மிகவும் எளிமையாக இருந்தார்கள். பிறகு ஷெய்கு நாயகம் அவர்களோடு விடை பெற்றேன். அன்போடு விடை கொடுத்த அவர்கள், சென்றடைந்ததும் போனில் தெரியப்படுத்தக் கேட்டுக் கொண்டார்கள். நமது வீட்டிற்கும் எத்தனையோ பேர் வருகிறார்கள். நாமும் எத்தனையோ பேர் வீட்டுக்குச் செல்கிறோம்.


சென்றடைந்ததும் தெரியப்படுத்தக் கேட்டிருக்கிறோமா? சிந்தித்துப் பார்த்தேன் ஷெய்கு நாயகம் அவர்களுக்கு ஒவ்வொரு முரீதுப் பிள்ளைகள் மீதும் எவ்வளவு அக்கறை (ஒவ்வொரு விஷயங்களிலும் நமது ஷெய்கு நாயகம் அவர்களின் படிப்பினை இருக்கிறது) கண்மணியான ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயரிய குணங்களைக் காண வேண்டும் என்று சொன்னால் எங்கள் ஷெய்கு நாயகம் அவர்களிடம் பார்த்துக் கொள்ளலாம். வேறெங்கும் போக வேண்டிய அவசியமில்லை. எங்கள் ஷெய்கு நாயகம் அவர்கள் அவர்களுடைய திருப்பேரர் என்பது மாத்திரமல்ல. அவர்களது தாற்பரியமும் கூட. நான் எனது ஊரைச் சென்றடைந்ததும் நலமாக வந்தடைந்த விஷயத்தை ஷெய்கு நாயகம் அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.


இலங்கை முரீதுப் பிள்ளைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், வாப்பா நாயகம் அவர்களோடு அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர்களாகவும், ஞான விளக்கம் நிறைந்த பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள் என்பதையறிந்து மகிழ்ந்தேன். நமது ஷெய்கு நாயகம் அவர்களிடம் நம்மை ஒப்படைத்து, ஒரு விஷயத்தைச் செய்யும் போது அவர்களை அதை இலேசாக்கி எந்தக் கஷ்டமும் இல்லாமல் நிகழ்த்திக் காட்டுகிறார்கள் என்பதற்கு என்னுடைய இந்தப் பயணங்கள் சான்றாக இருக்கிறது என்பதை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.


மகான்களைக் கண்டு கொள்ள முடியாத இந்தக் கஷ்டமான காலக் கட்டத்தில், இப்படிப்பட்ட மாபெரும் மகான் நமக்குக் கிடைத்திருப்பது நமது மூதாதையர் செய்த பெரும் பாக்கியம்தான். அப்பாக்கியத்தைப் பெற்ற நாம் அவர்களோடு உண்மையான அன்பு வைத்த மக்களாகவும், அர்களின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்த முரீதுப் பிள்கைளாகவும் அவர்களின் அகமியங்களை ஓரளவேனும் விளங்கிய முரீதுப் பிள்கைளாகவும் திகழ வேண்டி ஏக இறை துணைபுரிய பிரார்த்தித்து விடைபெறுகிறேன்.