ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

நூரே முஹம்மதிய்யா
முன்பும் – பின்பும்

M. அப்துற் ரஜாக், அதிராமபட்டினம்

அருமை நாயகம் கண்மணி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கன்ஜுல் மஃபியாக இருந்த வல்ல இறைவனின் இஷ்கினால் நூரே முஹம்மதிய்யாவாக வெளிப்பட்டு அனைத்து வெளிப்பட்ட மறைந்த வஸ்த்துகளின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து அனைத்து பிரபஞ்சத்திற்கும் அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


நான் அய்ன் இல்லாத அரபி; மீம் இல்லாத அஹ்மது என்றார்கள்.


அரபியில் அய்னை எடுத்தால் ரப் என்று வரும் அஹமதில் மீமை எடுத்தால் அஹது என்று வரும். இதன் சூட்சுமத்தை அறிந்தால் அவர்களின் உண்மை நிலை புரியும்.


அன மின்நூரில்லாஹி வகுல்லு ஷைஇன் மின்நூரீ நான் அல்லாஹ்வின் ஒளிவிலிருந்து படைக்கப்பட்டேன். எல்லா வஸ்துக்களும் என்னிடமிருந்தே வெளியாயின என்றார்கள் நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள். இதிலிருந்து நாம் அறிவது ஒளி வந்து விட்டால் அனைத்து இருளும் மறைந்து விடும். ஆகவே படைக்கப்பட்ட அனைத்துமே ஒளிதான். இருள் இருக்கவே முடியாது. இதனால் தான் நாம் யாவருமே அந்த ஒளியாகவே இருப்பதால் அதைப் பேணிப் பாதுகாத்து ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த ஒளியை கண்ணியப்படுத்தி இருள் சூழாமல் பேணிப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாக இருக்கிறது.


அனைத்திலுமே ஹக்கு நீக்கமற நிறைந்திருப்பதால் அவனுடைய ஹாதி என்ற இஸ்மைக் கொண்டு வெளியான இஹ்தியத்தைக் கொண்டு முதில்லியத்தை அழித்து விட வேண்டும். அதனாலே நபிமார்கள் ஒலிமார்கள் ஹாதி என்ற இஸ்மில் மேம்பட்டு இருந்ததால் நபிமார்கள் மஃசூமாகவும் ஒலிமார்கள் மஹ்பூபாகவும் இருந்தார்கள். இவ்வாறிருந்து ஆதில் என்ற இஸ்மைக் கொண்டு உலகத்தில் நீதியை நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.


ஒருநாள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றுமுள்ள தங்களின் திண்ணைத் தோழர்களுடன் வீற்றிருந்து இல்முல் இர்பானுடைய விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது உமர் (ரலி) அவர்கள் அங்கு வந்து நானும் கலந்து கொள்ளலாமா என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸலல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பால் குடிக்கும் பிள்ளைக்கு மாமிசம் கொடுக்கலாமா? என்றார்கள். அதுசமயம் உமர் (ரலி) அவர்கள் பக்குவமடையாத நிலையில் இருந்ததால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு சொன்னார்கள். பிற்காலத்தில் பக்குவம் வந்த பிறகு இர்பானுடைய விஷயங்களை அறிந்து கொண்டார்கள்.


நான் என்பது இல்லை; ஹக்கைத்தவிர. என்ற சித்தாந்தத்திலேயே என்றும் தரிபடவேண்டும். நம் உடலை அவன் உடல், உயிர் நம் பொருள்கள் அவன் உஜூதிலேயே உள்ளதென்றே வாழ வேண்டும்.


நாம் உடல் பெற்று வந்ததால் ளாகிர் தொழுகையையும் அந்த உடலில் ரூஹு இருப்பதால் கல்பின் தொழுகையான நடுத்தொழுகையையும் விடாமல் கடைசி வரை தொழுது வரவேண்டும். எழுத்துகள் அனைத்துமே மை(இங்க்)யால் ஆனது. மை யை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் அதில் உள்ள எழுத்துகள் தெரியாது இவ்வாறு ஹக்கையே எல்லாவற்றிலும் தரிபடுத்தி படைப்புக்களை மறந்து விடவேண்டும்.


சூரியனைப் பார்க்க சூரியனே தேவைப்படுகிறது. அதாவது சூரியனிட மிருந்து வரும் வெளிச்சத்தைக் கொண்டே சூரியனைப் பார்க்கமுடியும். அதேபோல ஹக்கை அறிய பிரத்தியட்ஷமாக அவனுடைய அருள் தேவை. அருளை அடைய பரிபூரண குருமார்களின் நெருக்கமும் அவர்கள் மீது அன்பு கொள்வதும் அவர்கள் சொல்படி கேட்பதும் அவசியமாகும்.


நான் தனித்திருந்தேன் என்னை அறியப்பட்ட நாடினேன். அதனால் படைப்புகளைப் படைத்தேன் (ஹதீத் குத்ஸீ)


தனித்த, ஒற்றையான, இருண்ட எங்கும் பரந்து விரிந்து அகண்டு ஆதி நிலையிலிருந்த அவன் அவனை அறியப்பட நாடியபோது அவனிடம் இருந்த ஹயாத்து, இல்மு, கதரு, ஷம்உ, பஷரு, கலமு, இராதா ஆகிய ஏழுவிதமான சிபத்துகளைக் கொண்டுதான் அவன் படைப்புகளைப் படைக்க ஆசைப்பட்ட போது ஸிர்ராக (கஞ்சுல் மஃபி) யாக இருந்த அவன் அவனுடைய இஷ்க்கின் உச்சத்தால் நூராகி, நாராகி, ஹவாவாஹி, துராபாகி இந்த ஆறுநிலைகளைக் கடந்து அவன் இந்த ஆறு நிலைகளைக் கொண்டு அதாவது ஆறே நாட்களில் உலகத்தைப் படைத்தான் அதாவது ஆறு நிலைகளில் வெளியானான்.

இந்த ஆறுநிலைகளும் ஒன்று மற்றொண்டோடு கலந்து கிரகங்களும் மற்ற அனைத்து படைப்புகளும் வெளியாயின


ஸிர்ராக இருந்த அவனே நூராகி (நூரே முஹம்மதியாவாகி) அது இலங்கி இலங்கி நாராகி அது எரிந்து எரிந்து ஹவாவாகி அது அசைவினால் தரம் ஒன்று நீராகி அது கடலாக நுரையாக உறைந்து மண்ணாகி வெளிவந்த அனைத்துமே நூரே முஹம்மதியா தான். இந்த 4 அனாசிர்களும் பலவிதமாகக் கலந்து கலந்து இந்தப் பிரபஞ்சத்தில் பல்லாயிரம் கோடி படைப்புகளாக வெளிவந்தது. இவ்வாறு தோன்றிய அனைத்துமே நூரே முஹம்மதியா தான். அது பரிசுத்தமான தாத்திலிருந்து வந்த ஹக்கின் இஷ்க்கினால் தோன்றிய தாகும். எப்படி பரிசுத்தத்திலிருந்து தோன்றிய பரிசுத்தமோ அதிலிருந்து தோன்றியது அனைத்துமே பரிசுத்தம் தான். நான் முஹம்மதைப் படைக்கா விட்டால் இந்த உலகத்தையே படைத்திருக்க மாட்டேன். (ஹதீத் குத்ஸீ) என்று ஹக்கு சொன்னது. எதிலும் எதுவும் என்றும் நிறைந்த இந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தான்.


கடலுக்குச் செல்லுமுன் அதன் பெயர் சாக்கடை. கடலில் கலந்த பின் இதன் பெயர் கடல்தான். இதயத்தை நோக்கிச் செல்லும் இரத்தம் அசுத்தம் தான். பிறகு இதயத்தை விட்டு உடல் முழுவதும் வெளியாகிச் செல்லும் போது அது சுத்த ரத்தம் தான். ஆனால் மொத்தத்தில் அது இரத்தம் தான் அந்த ஒரே இரத்தம் தான் சுத்தமாகவும் அசுத்தமாகவும் மாறி மாறி வருகிறது.


நூரே முஹம்மதிய்யா முன்னால் எப்படி பரிசுத்தமாக இருந்ததோ அப்படியேதான் ஹக்கின் நாட்டப்படி படைப்பினங்களாக வெளிவந்த பிறகும் அது பரிசுத்தமாகவே இருக்கிறது.


பரிசுத்த நிலையை உலகம் உள்ளளவும் பரிசுத்தமாக வைத்துக் கொள்வது நமது கையில்தான் உள்ளது. அது இறைவன் நாட்டத்தில் இருந்தாலும் நாம் நமது உலக விஷயங்களை குருமார்களிடம் அன்பு கொண்டு அவர்கள் இட்ட கட்டளைகளை ஒழுங்காகச் செய்து தக்வா தவக்கலுடன் வாழ்ந்து வந்தால் நாமும் ஜெயம் பெற்று மற்றவர்களையும் ஜெயம் பெற வைத்து இம்மை, மறுமையினை அறிந்து அதில் வெற்றி பெறலாம்.