ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

எமக்குப் பெருநாட்கள் இரண்டல்ல ...


ரஸூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு கொண்ட உண்மை முஉமீன்களே! முஸ்லிம்களே! முஸ்லிம்களாகிய எமக்கு இரண்டு பெருநாட்கள் மட்டுமல்ல; மேலதிகமாக இன்னொன்று முண்டு.


உலகம் உய்யப் பிறந்த, மருளையும் இருளையும் நீக்கப் பிறந்த, பாபத்தை அழிக்கப் பிறந்த, இறைவனைத் தெளிவாய் எடுத்துக்காட்டப் பிறந்த, அஞ்ஞானம், கபடம், சூது முதலாம் கொடியவைகளை ஒழிக்கப் பிறந்த, கல்மனதை உடைத் தெறியப் பிறந்த, அன்பு, பண்பு, மாண்பு, நீதி, நியாயம், ஆதியாம் ஜோதிகள் உள்ளத்துள்ளே பிரகாசிக்கப் பிறந்த, காரிருளகற்றும் பேரருள் ஜோதி, சேற்றேயலர்ந்த செந்தாமரை, மனிதகுல மாணிக்கம், அணையா அருள் ஜோதி, இணையற்ற இளவல், குறையற்ற குரிசில், வான்சுடர், விண்மதி எம் பெருமானார் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாள் ஒரு பெருநாள்.


நபிகளார் பிறந்த பின்புதானே ஈதுல் பிதுர், ஈதுல் அளுஹா என்பன பெருநாட்களாயின, எனவே இவ்விருபெருநாட்களையும் காட்டித்தந்த பெருமானார் பிறந்த நாள் அனைத்திலும் மேலான பெருநாளாகும். அல்ஹம்துலில்லாஹ், மேற்கூறிய இருபெரு நாட்களும் அன்று நாள் முடிவடைவதோடு முடிந்து விடுகிறது. ஆனால் எம்பெருமானார் பிறந்த பெருநாளின் சிறப்பும் மேன்மையும் அம்மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் உண்டு. எனவே அவ்வொரு மாதமுமே ஈமான் கொண்ட முஸ்லிம்களுக்குப் பெருநாளாகும். அல்ஹம்துலில்லாஹ். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அற்ப அளவேனும் அன்பு உள்ளவர்கள் கூட நாயகம் பிறந்தநாள் பெருநாளா? எனவெல்லாம் கேட்கத் துணிய மாட்டார்கள். அவ்வாறு துணிவதாயின் அவர்களின் உள்ளங்கள் இருளடைந்தனவாகும். ஈமானற்ற உள்ளங்களே அவ்வாறு கேட்கத் துணியும்.


பெருமை, தற்பெருமை, கறைபிடித்த ஈமான், வஞ்சகம், மக்களைக்கெடுக்கும் கொடூரத்தன்மை, உண்மைக்கு முரண், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பால் வெறுப்பைப் படிப்படியாய் உண்டுபண்ண முனையும் தன்மை முதலானவைகளையுடைய செய்த்தான் குடி கொள்ளும் உள்ள முடையவர்களே அத்தன்மையவர்கள். அத்தகையோரின் வஞ்சகக் குணங்கள் நீங்கி நபிகளாரின் பாதங்களின் கீழ் அவர்கள் தஞ்சமடைந்து புண்ணியர்களாய் வாழ அல்லாஹுதஆலா பேரருள் பாலிப்பானாக. ஆமீன்.

- மருள் நீக்கிய மாநபி நூலில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் -