ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

உமர் (ரலி) புராணம்


ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


அகழ்யுத்தம்

(கலிவிருத்தம்)


பொறுத்திடற் கியலாப் புன்கூர் துன்பம்

ஒறுத்தலி னஈமென் றொருவர் குறுகி

நறுமண நபியே நானென் செய்குவென்

மறுமொழி கூறுக வன்பகை யொழியகொண்டுகூட்டு:


பொறுத்திடற்கு இயலா புன் கூர் துன்பம் ஒறுத்தலின் நஈம் என்றொருவர் (நபிகள் நாயகம் அவர்களிடம்) குறுகி நறுமண நபியே “நான் என் செய்குவென், மறு மொழி கூறுக வன்பகை யொழிய.”


பொருள்:


நாயகம் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாத இழிவு மிக்க துன்பம் வருத்துதலினால் நஈம் என்ற பெயருடைய ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் அணுகி மிக்க மணத்தை யுடைய நபியே “நான் என் செய்குவென் வன்பகை யொழிய” கொடிய பகைவர்களை அழிக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று நஈம் நாயகம் அவர்களிடம் கேட்டார்கள்.


குறிப்பு:


புன் : புன்மை, இழிவு. கூர் : அதிகமாதல், மிக்க. ஒறுத்தல் : வருத்தல். நஈம் : ஒருவர். குறுகுதல் : அணுகல், அடைதல். நறு : நறுமை : நன்மை, வாசனை. செய்குவென் : செய்வேன். வன் : கொடிய. பகை : பகைவர். ஒழிய : அழிந்துபோக.