ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஞானத் துளிகள்

தொகுத்தவர்:- திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., I.A.S.,; சென்னை

யான், எனது என்னும் செருக்கு அக்ஞானத்தினின்று உதிப்பவைகள். உண்மையில் எல்லாம் இறைவனுக்கு உரியவைகள். காமத்தையும், குரோதத்தையும் அறவே அழித்துவிட முடியாது. அவைகளை இறைவன்பால் திருப்பிவிட்டால் தீங்கு செய்வதற்குப் பதிலாக அவைகள் நலம் புரிகின்றன.


சாதகன் ஒருவன் தன்னிடத்துள்ள தமோ குண இயல்புகளை எல்லாம் இறையிடத்துத் திருப்பிவிடுவானாகில் அவன் மிக எளிதில் அவரை அடைவான். இறைவன் எனக்கு வேற்றான் அல்ல; அருள்புரிய அவன் கடமைப்பட்டிருக்கிறான். அவனுடன் போராடி அவனுடைய அருளை நான் பெறுவேன். இப்படிக் கருதுவதும் நடந்து கொள்வதும் நன்மையை விளைவிக்கும்.


இறைவன் கையில் கருவியாயிருக்கத் தெரிந்து கொண்டவர்கள் தரையில் கிடக்கும் உலர்ந்த சருகுபோன்று இருக்கின்றனர். காற்றடித்த பக்கம் சருகு போகிறது. சில வேளைகளில் அது சுத்தமான இடத்தில் கிடக்கும். வேறு சில வேளைகளில் அசுத்தமான இடத்திலும் கிடக்கும். இறைவன் கையில் கருவியாயிருக்கிறவர்கள் தங்களுக்கென்று எதையும் சங்கல்பித்துக் கொள்ளாது இறைவன் ஆட்டி வைத்தபடி நடந்து கொள்கின்றனர்.


ஆத்ம சாதனங்கள் பயின்று அருள்தாகம் பிடித்திருக்கிறவனுக்கே இறைவனுடைய அருள் வருகிறது.


உள்ளத்திலுள்ள ஐயங்கள் அகலுவதற்கு இறைவனுடைய அருள் முற்றிலும் அவசியமானது. ஆத்ம ஞானம் வருவதற்கு முன்பு ஐயங்கள் அகன்று போவதில்லை.


புழுக்கமாயிருக்கும் பொழுது விசிறி வேண்டியிருக்கிறது. ஆனால் தென்றல் வீசும்பொழுது விசிறியை வைத்து விடலாம். இறை அருள் தென்றல் போன்றது. அதை அடையப் பெற்றவர்கள் ஆத்ம சாதனத்தை நிறுத்தி விடலாம்.ஞானிகள் என்னும் மேலாரிடத்தில் மக்களுக்கு இறைவனைப் பற்றி நல்லுபதேசம் செய்ய வேண்டும் என்னும் கருணை இருக்கின்றது. ஒருவன் ஏதோ சிறிதளவு ஆத்ம சாதனங்கள் செய்துவிட்டுத் தான் அத்துறையிலேயே வெற்றி மிகப் பெற்றிருப்பதாக எண்ணிக் கொள்கிறான். உண்மையில் அவன் ஒரு வெற்றியும் பெறவில்லை. வெற்றியும் தோல்வியும் இறைவன் கையிலிருக்கிறது; மக்களிடத்து அல்ல.


முற்றிலும் ஆத்ம போதம் எழப்பெற்ற மேலார் பாப புண்ணியத்துக் கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள். செயலனைத்தும் இறைவனுடையதே என்னும் எண்ணத்திலும் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.


தட்டான் ஒருவன் தங்கத்தை உருக்கும்பொழுது வாயால் ஊதுகிறான், விசிறியால் வீசுகிறான், துருத்தியையும் பயன்படுத்துகிறான். தங்கத்தை உருக்கிக் கருவில் வார்த்தான பிறகு அவன் ஓய்வெடுத்துக் கொண்டு அமைதியாயிருக்கிறான்.  அதே விதத்தில் இறைவனுடைய அருளைப் பெறுவதற்கு முன்பு எல்லா விதமான சாதனங்களையும் சாதகன் கையாள வேண்டும். அருளைப் பெற்றான பிறகு அவைகளெல்லாம் தாமாக முடிவடைகின்றன.ஜமீன்தார் ஒருவர் சாதாரண குடிமகன் ஒருவன் வீட்டுக்கு வருவதாயிருந்தால் அதன் அறிகுறிகள் முன்னதாகவே தென்படும் வீடு நன்றாகத் துப்புறவு செய்யப்படும்.  ஜமீன்தார் உட்காருகிற நாற்காலி முதலியன முற்கூட்டியே அங்கு வந்து சேரும்.  அந்த அறிகுறிகளைப் பார்த்தால் இனி ஜமீன்தார் அங்கு வரப்போகிறார் என்று யூகிக்கலாம். அதே விதத்தில் பக்தன் ஒருவனுடைய உள்ளத்தில் தெய்வீக இயல்புகள் தோன்ற ஆரம்பிக்கும்பொழுது அவன் உள்ளத்தில் இறைவன் விரைவில் எழுந்தருளுவான் என்று யூகிக்கலாம்.


பூமியினின்று வெளியே கிளம்புகிற ஊற்றானது சில வேளைகளில் அடைப்பட்டுக் கிடக்கிறது. அது இருக்குமிடம் தற்செயலாய் ஒருவன் காலில் படும்பொழுது மூடியிருக்கும் மண் விலகிப் போகிறது. பொங்கித் ததும்பிக் கொண்டு நீர் வெளியே வருகிறது. இவ்வளவு நீர் இவ்வளவு காலம் எங்கே மறைந்து கிடந்தது என்று மக்கள் வியப்படைகின்றனர். அதே விதத்தில் சிலர் பிறப்பெடுத்த கொஞ்ச காலத்தில் விவேகம், வைராக்கியம், பக்தி, விசுவாசம், அருள் தாகம் ஆகிய இறை இயல்புகளை ஏராளமாக உடைத்திருக்கிறார்கள். அவர்களிடத்து அப்படித் தோன்றுகிற பரமார்த்திகப் பேரியல்புகளைப் பார்த்து மக்கள் பெருவியப்படைகின்றனர்.


ரிஷி ஆசிரமம் ஒன்றில் வேதாந்த விசாரம் நடந்தது. உயிர்கள் அனைத்தும் இறை சொரூபம் என்று குரு உபதேசித்தார். அதன் பிறகு ஒருநாள் சிஷ்யர் சிலர் வனத்தில் விறகு சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்பால் ஓடுங்கள்; மதயானை வருகிறது என்னும் உரத்த எச்சரிக்கை ஒன்று வந்தது. எல்லோரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் ஒரு சிஷ்யன் மட்டும் அவ்விடத்தை விட்டு நகரவில்லை. இது மதம் பிடித்த யானை; வழியில் நில்லாதே என்று யானைப் பாகன் கத்தினான்.  ஆனால் சிஷ்யனோ அவ்விடத்தை விட்டு நகரவில்லை. அருகில் வந்த யானை துதிக்கையால் அவனைச் சுழற்றி எடுத்து ஒருபுறம் வீசியெறிந்துவிட்டுப் போனது. சிஷ்யன் காயப்பட்டு பிரக்ஞய் போய் கிடந்தான். இதை கேள்விப்பட்ட ஆசிரமவாசிகள் சிகிச்சை செய்து பிரக்ஞய் வரப் பண்ணினார்கள். ஏன் அப்பா உனக்கு இந்த கதி ? என்று குரு கேட்டார். எல்லாம் உங்கள் உபதேசத்தின் விளைவு என்றான் சிஷ்யன். அதை விளக்கி சொல் என்றார் குரு. உயிர்கள் அனைத்தும் இறை சொரூபம் என்று புகட்டினீர்கள். யானையை மட்டும் இறை என நான் சேவித்ததன் விளைவு இது என்றான் சிஷ்யன். பின்பு எச்சரிக்கை செய்த மானிடர் இறை சொரூபம் தானே ? அவர் எச்சரிக்கைக்கு நீ ஏன் செவி கொடுக்கவில்லை? என்றார் குரு. அரைகுறை ஞானத்தின் விளைவு இதுவேயாம்.