ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

கலீபா பெருந்தகைகள்

தமிழ் மாமணி, மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி

வலிய்யுல் கறீம்

இத் திருத்தொடரில் சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள், வலிய்யுல் கறீம் அவர்களுக்கு அருளிய பட்டோலை ஒன்றே பட்டொளி வீசி நம் உயரிய சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது!

ஹக்கின் பாத்தினியத்தை அறிந்தவர்களை அப்படியே அறியும் அறிவனைத்தும் பொதிந்த வாப்பா நாயகத்தையே கதியாய்க் கொண்ட வாப்பா நாயகத்தின் உயிருக்குயிரான காதிமுல் வலிய்யுல் கறீமே!

கடிதம் கண்டோம்; பரவசமானோம்! எனது 40ம் வயதில் திரும்ப வாப்பா நாயகத்தை என்னில் காண விரும்புகிறீர்கள். இவ்வார்த்தை மிக உண்மையானதே. எனது கியால் என்னும் உலகம் சில மாதங்களுக்கு முன் செய்த சஞ்சாரத்தின் பலன் உங்கள் கலத்தில் (எழுத்தில்) வந்தது. (அல்ஹம்து லில்லாஹ்)


உங்களது இக்கடிதம் வந்த அன்று வேறொரு விடயமாயும் அன்றைய தினத்திலே என் கல்பாகிய அர்ஷில்லாஹ்வில் பெரும் புயல் அடித்தது. அப்போது இரவு உறக்கம் கொண்டேன். என் உயிரும் என் கண்மணியுமான என் அருமை வாப்பா நாயகத்தை கனவிற் கண்டேன். என்றும் போல் என் கனவில் என் வாப்பா நாயகம் அவர்களுக்கு காதிமாய்க் காட்சியளித்தேன். அப்போது என் வாப்பா நாயகம் என்னோடு உடலோடு இருக்கும் போது உரையாடுவது போல் வாப்பா நான் தான் நீ என்றார்கள். அல்ஹம்து லில்லாஹி அலாகுல்லி ஹால். மகிழ்ச்சி கொண்டேன்.

எனவே என் நாவில் கீழ்க்கண்ட அபூர்வமான பைத்து நடந்தது. இதையும் வாரிதாதுல் இலாஹிய்யாவிற் சேர்த்துள்ளேன். அல்ஹம்து லில்லாஹ்.

- ஒன்றுபட்ட நிலையிலே நிச்சயமாக நானே தான் நீங்கள் -

ஒவ்வொரு நாளும் எனது தந்தை நாயகமவர்கள் ஆன்மாவைத் தரிசிக்கிறேன். சாஷ்டாங்கத்திற்குரிய எனது உடலும் எனது ரூஹும் அதனால் சுகம் பெறுகிறது. ஒருநாள் இரவு கனவிலே சங்கைக்குரிய என் தலைவராகிய எனது தந்தை நாயகமவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் சொன்னார்கள்.


நிச்சயமாக நானேதான் நீங்கள் என்பதாக,


நிச்சயமான அவர்களின் சொல்லிலே எதார்த்தத்தை உணர்ந்தேன்.  இறைவனிடத்தில் எங்களுக்கிடையில் சுட்டுப் பொருள் (ளமீறுகள்) இல்லை.  ஒன்றிப்பின் கருத்துகள் அதில் பிரகாசிக்கிறது.


ஒன்றித்தலின் எதார்த்தத்தை அவ்வாறு அவர்கள் குறிப்பிட்டார்கள்.  சங்கைக்குரிய அவர்களின் திருவாக்கு எப்போதும் உண்மையானதாகும்.


சகோதரனே! இந்த கருத்திலே எவ்வித மாற்றமும் கிடையாது எனது அம்சத்தைக் கவனிப்பீராக. அதுவே எனது காட்சியாகும்.


வாப்பா நாயகத்தின் ஜியாரத்திற்குப் போனால் அங்கு என் பெயர் சொல்ல மறக்காதீர்கள். நானும் அங்கே தான் இருக்கிறேன். ஒரே உடலும் ஒரே உயிரும் வேறு எங்கே இருக்கும். ஏராளமான நாஸூத்தின் உலகத்திலே இன்ஸான் எனும் உடலைக் கொண்டு அதற்கொரு பெயரையும் வைத்து ஒருவகை ஏமாற்றமான வித்தை காட்டுகிறேன். உலக வாழ்க்கை கனவேயன்றி வேறன்று. உலகமே உலகமே  வாழ்க்கையே என்று அநேகர் மயங்கி ஹக்கை மறந்து விட்டனர். ஆனால் உண்மையான மகான்கள் உலக வாழ்க்கையை மவுத்தாகவே கருதினார்கள். தாங்கள் மெய் மறந்தார்கள். (மெய் என்பது உடலை) இதனாலேயே எனது வாப்பா நாயகமவர்கள் கீழ்க்கண்டவாறு யவானியில் கூறுகிறார்கள்.

“ஃபீ வஜ்ஹி பாதிலிஹா அஃப்நவ் நுஃபூஸஹுமு மின்ஹும் கதீருன் பிலா ரவ்ஹின் வரைஹானி -

ஃபீ வஜ்ஹி ஹக்கின் லஹா அஃப்நவ் வுஜூதஹுமு கலீலுஹும் சாததுன் ஃபீ நூரி லம்ஆனி.”

அவளின் அசத்தியம் என்ற முகத்தில் அந்த மனு ஜின்களில் அநேகர் சந்தோஷமின்றியும் கருணையின்றியும் தங்களை அழித்துப் பாழ்படுத்தி விட்டனர்.


அந்த சுந்தரியின் எதார்த்த சத்திய முகத்திலே ஜொலிக்கும் பிரகாசத்திலே அந்த மனுஜின்களிலிருந்து கொஞ்சப் பேர்களான நாயகர்கள் தங்கள் உள்ளமையை அழித்து அவளின் ஜீவன் பெற்றார்கள்.அர்வாஹுடைய ஆலத்தில் நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கிறேன். அப்படி இருப்பதனால்தான் இங்கே நான் இறந்தவன் போலானேன்.


ஆனால் இதுவே ஹக்கான சீவியமாகும். (அல்ஹம்து லில்லாஹ்)ஹக்கின் ஹக்கியத்தை அறிபவர்கள் மிகக் குறைவு, அறிந்தவர்களே இன்ஸானுல் காமில் என்னும் பூரண மனிதர்கள்.


(ராஜபாட்டை தொடரும்) ....