ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்

வாழ்க்கை வரலாறு

மூலம் : திருநபி சரித்திரம். தொகுப்பு : முஹம்மதடிமை, திருச்சி.


மூத்தாச் சண்டை : ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு


எதிர்வரும் படையினி னெண்ண மேன்மையோ

டதிரமர் பொருதிடி லரிய பாரினின்

முதிர்புகழ் வென்றியு முத்தி மேனக

ரிதமதவ் விரண்டிலொன் றெளிதி னெய்துமால்

இருமையும் பேறுடை யினிய தோர்பொரு

ளருமையி னுளவெனி லகற்ற லியாவரே

பெருமையோ சிறுமையோ பகைவர்க் கண்டுநா

முரிமையி னாய்தலோ டுவனி ருத்தலே

மேலவ னருளிய பணியின் மேவிடி

வேலுநல் லுதவியு முண்டு மெண்ணமற்

றோலமிட் டெழுகென்ற வாகத் துத்தம

பாலகர் அப்துல்லா பகர்ந்திட்டாரரோ   (சீறா)

மூத்தா என்னும் நகரம், ஷாம் தேசத்திலுள்ளது. ஹிஜ்ரி 6ஆம் ஆண்டில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றிப் போதனை செய்து அழைப்புக் கடிதங்கள் அனுப்பியவைகளில் ஒன்று புஸ்ராவின் அதிபதியான ஷர்ஜீல் இப்னு அம்ரு என்பவனுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஷர்ஜீல் ரோம தேசச் சக்கரவர்த்தியாகிய ஹிர்க்கல் கெய்சருக்குக் கீழ்ப்பட்ட ஒரு சிற்றரசன்; கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தை முஸ்லிம் தூதரான ஹாரிஸ் இப்னு உமைர் (ரலி) ஷர்ஜீலிடம் கொடுத்த போது, அவன் அவரைக் கயிற்றினால் கட்டிவைத்துக் கொன்று விட்டான்


தூதரைக் கொல்வது கடுமையான குற்றமாதலால், அதற்குப் பரிகாரம் பெறுவதற்காக மூவாயிரம் பேரடங்கிய சேனையைச் சேகரித்துப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷாமின் பக்கமாக அனுப்பினார்கள். அடிமை யாயிருந்து சுவாதீனமடைந்த ஸைத் இப்னு ஹாரித் (ரலி) அவர்களை அச்சேனைக்குத் தலைவராக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நியமித்தார்கள். ஸைத் (ரலி) சண்டையில் உயிர் துறந்ததால் ஜஅபர் (ரலி) சேனாதிபதி யாகட்டும், ஜஅபர் (ரலி)க்குப் பின், அப்துல்லா இப்னு ரவாஹாவும் அவரும் உயிர் துறக்கும்படி நேரிட்டால் சேனையை தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியனுப்பி இருந்தார்கள்.


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய உறவினரும் அலி (ரலி) அவர்களின் சகோதரருமான ஜஅபர் (ரலி) அவர்களும், அன்சாரிகளில் முக்கியமானவரும் பெயர் பெற்ற கவிஞருமான அப்துல்லா இப்னு ரவாஹா (ரலி) ஆகிய இருவருக்கு முன் அடிமையாயிருந்த ஸைத் (ரலி) அவர்களைச் சேனைத் தலைவராய் நியமித்ததைப் பற்றிப் பேச்சு உலாவிற்று. ஆனால் இஸ்லாம் சமத்துவத்தை நிலைநாட்ட வந்திருப்பதால் அச்சமத்துவத்தை அனுபவத்தில் காட்டுவதற்காகப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படிச் செய்தார்கள்.


இச்சேனை பழி வாங்கும் நோக்கத்துடன் சென்றாலும் அதன் முக்கிய வேலை, இஸ்லாத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதாகவே இருந்தது. ஆகையால் அவ்வரசனை இஸ்லாத்திற்கு அழைக்கும்படியும், அவன் இஸ்லாத்தை ஒப்புக் கொள்வதாயிருந்தால் சண்டை செய்யாதிருக்கும்படியும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையிட்டு அனுப்பினார்கள். அத்துடன் ஷர்ஜீலுக்கு கடிதம் கொண்டு சென்ற ஹாரிஸ் இப்னு உமைர் (ரலி) என்னும் தூதர் தம்முடைய கடமையை நிறைவேற்றியதில் உயிர் துறந்த இடத்திற்கும் அவர் மீது அனுதாபத்தைக் காட்டுவதற்காகப் போய் வரும்படியும் பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சேனைக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அச்சேனையுடன் கொஞ்ச தூரம் வரை நடந்து சென்று வழியனுப்பினார்கள். மதீனாவை விட்டுப் புறப்பட்டதும், அச்சமாச்சாரத்தை ஷர்ஜீலுடைய உளவாளிகள் அறிவிக்க, அவன் ஒரு லட்சம் வீரர்களடங்கிய சேனையைச் சேகரித்து வைத்து முஸ்லிம்கள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந் தான். எதிரிகளின் சேனை எண்ணிக்கையில் பலமடங்கு அதிகமாயிருக்கும் விஷயம் முஸ்லிம்களுக்குத் தெரிந்ததும் மேல் நடக்க வேண்டியதைப் பற்றி அவர்கள் கூடி ஆலோசித்தார்கள்


புதிய நிலைமையைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அறிவித்து அதற்கு மேல் அவர்கள் இடும் கட்டளைப் பிரகாரம் நடந்து கொள்ள வேண்டும் என்று ஸைத் (ரலி) அவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். வேறு சிலர் முன்னேறிப் போக வேண்டுமென்று சொன்னார்கள். அப்போது வீரரும் கவிஞருமான அப்துல்லா இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அக்கூட்டத்தை நோக்கி முன்னேறுவதற்காகவன்றி நாம் எதற்காக இவ்வளவு தூரம் வர வேண்டும். நம்முடைய நம்பிக்கையை சேனையின் எண்ணிக்கையின் மீது வைத்திருக்கின்றோமா? அல்லது அல்லாஹ்வின் உதவியின் மீது வைத்திருக்கின்றோமா? நம்முடைய முக்கிய நோக்கம் வெற்றியடைய வேண்டும்


அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்பது தான். அதுவோ எப்போதும் கைகூடும். ஆனதால் எல்லோரும் முன்னேறுங்கள்! என்று உரத்துக் கூறினார். அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து ரவாஹாவின் குமாரர் உண்மையைச் சொல்லுகிறார். ஆனதால் நாம் முன்னேறுவோம் என்று சொல்லிக் கொண்டே மூவாயிரம் வீரர்களும் முன்னேறிச் சென்றார்கள்.


மூத்தா என்னுமிடத்தில் இரண்டு சேனைகளும் கைகலந்தன. போர் ஆரம்பமாயிற்று. எண்ணிக்கையில் எத்தனையோ மடங்கு அதிகமான பகைவர்களுடன் முஸ்லிம் வீரர்கள் அன்று மிகவும் வீரத்துடன் நின்று போர் புரிந்தார்கள். சேனையின் முன்னணியில் கொடியைக் கையிலேந்திக் கொண்டு சேனையை நடத்திச் சென்ற ஹளரத் ஸைத் (ரலி) அவர்கள் போர் செய்து கொண்டிருக்கும் போது எதிரிகளின் ஈட்டியால் குத்தப்பட்டு உயிர் துறந்தார்கள். அவர்களுடன் இஸ்லாமியக் கொடியும் கீழே விழுவதை ஹளரத் ஜஅபர் (ரலி) அவர்கள் கண்டதும் பெருமானாரின் உத்தரவுப்படி வேகமாகச் சென்று அக்கொடியைத் தாங்கள் கையிலெடுத்துக் கொண்டு எதிரிகளின் அணியினுள் பாய்ந்தார்கள்


சண்டை செய்து கொண்டிருக்கும்போது அவர்களுடைய வலக்கையானது வெட்டப்பட்டது. உடனே கொடியை இடக்கையில் பிடித்தார்கள். அதுவும் சிறிது நேரத்தில் வெட்டப்பட, அக்கொடியை மார்போடணைத்து இரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்குள்ளாக அவர்கள் சிரசில் பலமான வெட்டுப்பட்டு மண்டை ஓடு பிளக்க அவர்கள் கொடியுடன் கீழே விழுந்து மரணமடைந்தார்கள்.


ஹளரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: நான் அன்றைய தினம் ஜஅபர் (ரலி) அவர்களின் சரீரத்தைப் பார்த்தேன். ஈட்டியினாலும் வாளினாலும் உண்டான காயங்கள் தொண்ணூறு வரை காணப்பட்டன. அக்காயங்களெல்லம் முன் பக்கத்திலேயே இருந்தன. முதுகுப்பக்கத்தில் ஒரு சிறியகாயம் கூடஇல்லை. அல்லாஹூ அக்பர்! என்னே வீரத்தின் சிகரம்!


ஹளரத் ஜஅபர் (ரலி) அவர்கள் கீழே விழவும் ஹளரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் பெருமானார் உத்தரவிட்டபடி கொடியைக் கையிலேந்திப் போர் புரிந்தார்கள். அவர்களும் கொஞ்ச நேரத்தில் வெட்டப்பட்டார்கள். உடனே பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளைப்படி எல்லோரும் கூடி ஆலோசித்து ஹளரத் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைத் தளகர்த்தராகத் தேர்ந்தெடுத்தார்கள். வெற்றிகளே இறுதிக் கட்டங்களாக அமைந்தன!


இறைத்தூதரின் வெற்றிக் கனிகள் தொடரும்....