ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

அறிஞர்கள் போற்றும் அண்ணல் நபிகளார்

கடந்த 12 நூற்றாண்டுகளாக - இந்த மாமனிதரின் வாக்கு 180 மில்லியன் (18 கோடி) மக்களுடைய வாழ்க்கையின் வழிகாட்டியாக விளங்கி வருகிறது. (1840-ல் 18 கோடி என்பது, 2013ல் 150 கோடியைத் தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது) மற்ற எந்த மாமனிதரின் வாழ்க்கையும் விட முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கை, இறைவனுடைய படைப்பில் திகழும் பெரும்பாலான மக்கள் இப்பொழுது நம்புகின்றனர். ஒரு மாமனிதர் (நாயகம்) உண்மையாய் இருப்பதைத்தவிர - வேறு விதமாக இருக்க முடியும் என்பது நம்ப முடியாதது என்று நான் துணிவாக - உறுதியாகக் கூறுகிறேன். அந்த மாமனிதரிடத்தில் காணப்படும் அனைத்துப் பண்புகளுக்கும் - செயல்களுக்கும் - துவக்கமாக - அடிப்படையாக இருப்பது இந்த உண்மைத் தன்மைதான். அன்னாரின் பேச்சு, தீப்பிழம்பைப் போல் - தன்னுடைய ஒளியினால் - அன்னாரைச் சுற்றியுள்ள மக்களை உணர்ச்சியாலும் ஆர்வத்தாலும் நிரப்பக் கூடியதாகும். இருளிலே மூழ்கியிருந்த உலகத்தை ஒளிபெறச் செய்ய - ஆன்மீக வாழ்வளிக்க - இறைவன் செய்த ஏற்பாடு இதுவாகும்.


(நபியாகிய) அவர் சிற்றின்ப விருப்பம் மிகுந்தவர் என்றோ, சாதாரண அற்ப சுகங்களில் நாட்டம் கொண்டவர் என்றோ அவரைப் பற்றிக் கருதினால் நாம் பெருந்தவறு செய்தவர்கள் ஆவோம். அவருடைய குடும்ப வாழ்க்கை மிகவும் சிக்கனமானது. சாதாரணமாகப் பார்லி ரொட்டியும் தண்ணீரும்தான் அண்ணாரின் உணவாகும். சில நேரங்களில் அவர் மாதக் கணக்கில் அடுப்பு எரிவதே இல்லை. அவரின் காலணிகளைத் தாமே பழுது பார்த்துக் கொள்வார். கிழிந்து போன தம்முடைய ஆடையைத் தாமே தைத்து உடுத்திக் கொள்வார்.


சிறந்த உயர்ந்த பண்புகள் அவரிடம் இருந்தன. இல்லையென்றால் அவருடனேயே 23 ஆண்டுகள் வாழ்ந்து வந்த அரபுமக்கள் - சண்டையிட்டுக் கொண்டும், முட்டிமோதிக் கொண்டும் இருந்த முரட்டு அரபுமக்கள் - அவருக்கு இந்த அளவுக்கு மதிப்பளித்திருக்க மாட்டார்கள். இத்தகைய மக்களைத் தகுதியும் ஆண்மையும் இல்லாத ஒரு மனிதரால் - தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, தன் ஆணைக்கு உட்படுத்திவிட முடிந்திருக்காது. ஒட்டுப்போட்ட உடையணிந்த இந்த மாமனிதரின் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டதைப் போல மணி முடி தரித்த எந்த மன்னனின் ஆணைகளும் நிறைவேற்றப்பட்டதில்லை.
உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து, வெளியுலகத்தால் அறியப்படாமல் அரபகத்துப் பாலைவனங்களில் அலைந்து கொண்டிருந்த ஓர் எளிய இடையர் கூட்டத்துக்கு ஒரு வேகத்துடன் - ஒரு நாயகர் - ஓர் இறைத்தூதர் - அனுப்பி வைக்கப்பட்டார். (இதன் விளைவாக) உலகிற்கு அறியப்படாதிருந்தவர்கள் உலகப்புகழ் பெற்றார்கள். முக்கியத்துவம் இல்லாதவர்களாக இருந்தவர்கள் உலகில் உயர்ந்தோராக வளர்ந்தார்கள். இதற்குப் பின் ஒரு நூற்றாண்டு காலத்தில் அரபுநாடு மேற்கே கிரானடாவில் இருந்து கிழக்கே டில்லி வரை புகழின் ஒளி வீசத் திகழ்கிறது.  


- அறிஞர்-தாமஸ் கார்லைல்
நபிகள் (நாயகமாகிய) அவரைப் போன்ற ஒரு மனிதர் இன்றைய நவீன உலகத்தின் சர்வாதிகாரத்தை ஏற்பதாகக் கருதுவோமேயானால், அந்த மனிதர் உலகிற்கு மிகத் தேவையான அமைதியையும் மகிழ்வையும் கொண்டுவரும் வழிமுறையில் - இன்றைய உலகின் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன்


- ஜார்ஜ் பெர்னாட்ஷா
உலகிலுள்ள வீரர்கள் மற்றும் சட்டம் வழங்கியவர்களுக்கு மத்தியில் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருப்பது போன்று விரிவாகவும், ஆதாரப் பூர்வமாகவும், மிகச் சரியாகவும் வாழ்க்கைச் சம்பவங்கள் பதிவு செய்ப்பட்டிருக்கிறவராக ஒரேயொரு நபரைக் கூட உதாரணமாகக் காட்டப்பட இயலவில்லை.


- ஜான் டேவன் போர்ட்
அவர் (முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்) ஒரே நேரத்தில் சீசரும், போப்பும் ஆவார். ஆனால் அவர் போப்பின் பகட்டுக்கள், ஆடம்பரங்கள் எதுவுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுகாப்புப் படைகள் ஏதுவும் இல்லாத சீசர் ஆவார். தயார் நிலையிலுள்ள இராணுவமோ, நிலையான நிர்ணயமான வருமானமோ இல்லாமல் இறைவனின் ஆணையையும், அனுமதியையும் மட்டுமே துணையாகக் கொண்டு ஆட்சி செய்ததாகக் கூறிக் கொள்ளும் உரிமை - மனித வரலாற்றில் யாராவது ஒருவருக்கு இருக்குமானால், அவர் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே ஆவார். ஏனென்றால் ஆட்சியதிகாரம் செலுத்திடத் தேவையான கருவிகள் மற்றும் துணைச் சாதனங்கள் எதுவும் இல்லாமலேயே அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்.


- ரெவரெண்ட் பார்ஸ்வொர்த் ஸமித்
எங்கே என்ன நடந்து கொண்டிருந்தது? என்பது தெரியும் நிலையிலிருந்து வெளிப்படையாகவே தொடர்பற்று - நெடுங்காலமாகவே தூக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த அரேபியர் இனம், திடீரென விழித்தெழுந்து, உலகையே வியப்பிலாழ்த்தும் அளவுக்கு பிரம்மாண்டமான ஆற்றலை வெளிக்காட்டியிருப்பது புதுமையான விஷயமாகும். அரபியர்களின் கதையும், ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் அவர்கள் எப்படி திடீரெனப் பரவினார்கள் என்பதும், அவர்கள் முன்னேறச் செய்த உயர்ந்த கலாச்சாரமும் நாகரிகமும் வரலாற்றின் அற்புதங்களாகும்.


- ஜவஹர்லால் நேரு
அரபகப் பாலைவனத்தில் இஸ்லாம் உதயமானது. மூர்க்கத்தனமான அரபிகள், ஒரு மாபெரும் ஞானிகள் (நபிகள் நாயகம்) போதனைகளால் உள்ளுணர்வூட்டப்பட்டார்கள். இந்து மதத்திலும் கிறித்தவ மதத்திலும் இல்லாத - சகோதரத்துவமும் சமத்துவமும் இஸ்லாமிய மார்க்கத்தில் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் மெய்ப்பித்துக் காட்டப்பட்டுள்ளது.


- சுவாமி விவேகானந்தர்
உலகின் மிகப் பெரிய செல்வாக்கு பெற்ற நபர்களின் பட்டியலுக்குத் தலைமையேற்க முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை நான் தேர்வு செய்தது, சில வாசகர்களை வியப்பிலாழ்த்தலாம். வேறு சில வாசகர்களால் கேள்வியும் எழுப்பப்படலாம். ஆனால் மதவியல், உலகியல் ஆகிய இரு துறைகளிலும் உச்சக்கட்ட வெற்றி பெற்றவர் வரலாற்றிலேயே அவர் ஒரேயொரு மனிதர்தான்


- மைக்கேல் ஹார்ட்
ஐன்ஸ்டீன் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அரேபியாவிலுள்ள மக்காவில் ஒரு மாமனிதர் பிறந்தார். அவர் எல்லா மனிதர்களை விட, மானிட இனத்தின் மீது மிகப்பெரிய செல்வாக்குச் செலுத்தியிருக்கிறார். அவர்தான் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள்


- ஜான் வில்லியம் டிராப்பர்
முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்ரவதைகளையும், கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களது தோழர்களின் உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும், அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் அவர்களின் அடிப்படையான நேர்மையை - நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறு எவருமில்லை


- டபுல்யூ, மோன்ட் கோமெரி