ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai    »    2014    »    Aug2014    »    உலக மதங்கள்

ஒன்றே போதிக்கும் உலக மதங்கள்ஜட உலகத்தில் வாழும் போது நாம் எங்களுடைய ஜடத்தை தடிப்பின்றி இலகுவாக்கிக் கொள்ள வேண்டும் . அப்படி இலகுவாக்கிக் கொள்வதற்கு ஆத்மார்த்தத்தில் சிந்திக்க வேண்டும் . இப்படி ஈடுபட்டு வரும்போது எங்களுடைய எண்ணங்கள் குறுகி , அதாவது நாங்கள் நுகரக்கூடிய ஐம்புலன்களும் ஒடுங்கி , " ஒரேஇறை '' என்ற எண்ணத்தில் நிலை கொண்டால் வந்த இடத்துக்குப் போக வேண்டிய பாதையைக் கண்டு கொள்ளலாம் . ஆகவே , இப்படி இந்தப் பாதையைக் கண்டு விட்டோமேயானால் அதற்குரிய வழிகாட்டியைக் கொண்டு நாங்கள் உரிய இடத்தைப் போய்ச் சேருவதற்கு எங்களுக்கு இலகுவாகிவிடும் . இது தான் மனிதன் பிறந்ததன் நோக்கமென்பதன் கருத்து .  இதை எல்லா மதஞானிகளும் ஒரே முறையாகவே கூறுகிறார்கள் . இதனாலே தான் ஆதிவேதத்தில் எந்தப் பிரிவுமில்லை .
ஆதிவேதம் எல்லாமே ஒன்று . இஸ்லாமிய வேதமாயிருந்தால் என்ன ? இந்து வேதமாயிருந்தால் என்ன ? பௌத்த வேதமாயிருந்தால் என்ன ? கிறித்துவ வேதமாகவிருந்தால் என்ன ? எதுவாயிருந்தாலும்அது தாற்பரியத்தில் ஒன்றையே கூறிக் கொண்டிருக்கிறது . அந்தத் தாற்பரியத்தை நாங்கள் அடையமுடியாதிருப்பதற்குக் காரணம் எம்மகத்தே உள்ள திரைகளாகும் .

அப்படியான வேற்றுமைத் திரைகள் எங்களில் இல்லாது  " நாம் அனைவரும்  ஒன்று ; வேதப்பிரிவுகள் இருந்தாலும் நம் தாற்பரியம் ஒன்றே ,  ஒரே இடத்தையே போய் அடையப் போகிறோம்''  எனும் உண்மையான அந்த நிலையை நாம் அடைந்துவிட்டால் ," எல்லாமே ஒன்று , எல்லாம் தனிமயம் '', என்றஅந்த நிலைக்கு வந்து விடுவோம் . இதுதான் மனிதனாக வாழ்ந்து நாம் பெறக்கூடிய இன்பம் .  இந்த உலகத்திலேயே இந்த இன்பத்தைப் பெற்றிட வேண்டும் . இந்த உலகிலேயே நம்மால் பெறமுடியாவிட்டால் அந்த உலகிலேயும் எம்மால் பெற முடியாது . ஏனென்றால் சந்தேகத்திலேயே வாழ்பவர்களுக்குஅந்த உலகத்திலும் சந்தேகம்தான் இருக்கும் . இந்த உலகத்தில் திரையுடன் இருப்பவர்கள்அந்த உலகத்திலும் திரையுடன்தான் இருப்பார்கள்.

இந்த உலகத்திலுள்ள எம்மைச் சுற்றியிருக்கும் ஆயிரக்கணக்கான திரைகளையும் நாம் அறுத்தெறிந்து பரிபூரண இறையில் ஒன்று சேரவேண்டும்
. சங்கமமாக வேண்டும் . ஆகவே எல்லா நதிகளும் போய் ஒரே ஆழியில் அதாவது சமுத்திரத்தில் போய்ச் சேர்வதுபோல் எல்லா மதங்களும் சேர்ந்து ஒரே அந்தப் பரிசுத்தமான - பெருமைவாய்ந்த கடலாகிய இறையில் போய்ச் சேர வேண்டும் . இதுவே எமக்கு மிக முக்கியமான அம்சம் . இதனாலே தான் இப்படியான கூட்டங்களையும் , இப்படியான விளக்கத்திற்குரிய சில சபைகளையும் நாம் அமைத்து இந்த விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் . எனவே ஞான விளக்கத்தைத் தேடும் எங்களில் வித்தியாசம் இன்றிஎல்லோரும் ஒன்று , ஒரேநிலை , அந்தமதம் ஞானத்தில் எதைக் கூறுகிறது ? அதேபோல் இந்த மதம் ஞானத்தில் எதைக் கூறுகிறது ? என்பதை நல்லமுறையில் கற்று வாழமுன் வருதல் எமக்கு மிக முக்கியமாகும் .