ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai    »    2014    »    Apr2014    »    ஞான துளிகள்


ஞான துளிகள்
தொகுத்தவர் : -

திருமதி G.R.J . திவ்யா பிரபு I.F.S . , சென்னை
இறைவனுடைய நாமத்தில் சுவையை உண்டு பண்ணுவது எங்ஙனம் ?


அந்தச் சுவை உண்டாதல் பொருட்டு உள்ளன்போடும் ஆர்வத்தோடும் இறைவனிடம் பிரார்த்தனை பண்ணு .இப்படி பக்தன் ஒருவன் பண்ணுகிற நல்ல பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கிறான் .


இறைவனை நாடி யார் கண்ணீர் சிந்துகிறானோ அவன் இறைவனைக் காண்பான் .


இறக்கும் பொழுது அன்புடன் இறைவனுடைய நாமத்தை உச்சரிக்க வல்லவனுக்கு அபாயம் ஒன்றுமில்லை .இறைவனுடைய திருநாமத்தை உச்சரிக்கு மளவு ஒருவன் புனிதவான் ஆகிறான் ;வாழ்நாளெல்லாம் அவனுடைய நாமத்தை ஓதிப் பழகாதிருப்பவர்களுக்கு அந்நிய காலத்தில் அதை உச்சரிக்க ஒருபொழுதும் இயலாது .சாதகன் ஒருவன் இடையறாது இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும் .கைகொட்டி இறைவனுடைய திருநாமத்தை உரக்கச் சொல்லும் பொழுது பாபம் என்னும் பறவை பறந்தோடிப் போகிறது .இக்கலியுகத்தில் நாம ஜபத்துக்குநிகரான சாதகம் இல்லை .யோகம் முதலியன பயிலுதற்கு அன்னத்தைச் சார்ந்திருக்கிற உடல் தகுதியற்றது .


ஒருவன் இறைவனுடைய திருநாமத்தை உரக்க உச்சரித்தான் .மற்றொருவன் நீ இறைவனைக் கூவி யழைப்பது சரி .ஆனால் எதற்காக வீண்கூச்சல் போடுகின்றாய் ?ஓர் எறும்பின் காலில் உள்ள சிலம்பின் சப்தத்தையும் கேட்கவல்லவர் இறைவன் என்பது உனக்குத் தெரியாதா ?என்றான் .


இறைவனுடைய திருநாமத்தை உச்சரிக் கின்றவனது உடல் ,உள்ளம் ஆகிய அனைத்தும் புனித மடைகின்றன .


இறைவனுடைய திரு நாமத்தை ஓதச் செய்து இழி குலத்தவர்களையும் இறைவன் மேன் மக்களாக்குகிறார் .


இறைவனுடைய திரு நாமத்தை ஓதுவதால் பக்தன் ஒருவன் பெரு நன்மை யடைகின்றான் .பக்தி மார்க்கத்தில் அவன் இறையருள் அடைவது நிச்சயம் .இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்பதாலும் அவனுடைய பெருமையைப் புகழ்ந்து பாடுவதாலும் ஒருவனுக்குப் பக்தி படிப்படியாக வளர்கிறது .இறைவனுடைய திருநாமத்தை உச்சரிப்பதில் யாரும் சங்கோசப் படலாகாது .இறைநாம உச்சாரணை ஒருபொழுதும் ஒரு காலத்தில் அது பயனளித்தே தீரும் .வீட்டுச்சுவரின் மேலே வைத்துள்ள விதை ஒன்று முளைக்காது பல ஆண்டுகளாக இருக்கிறது .ஆனால் வீடு இடிந்து கீழே விழுந்த பிறகு அந்த விதை தரையில் புதைந்து முளைத்து வளர்ந்து பயன் தருகிறது .இறைநாம உச்சாரணையும் அத்தகையது .இறைவன் எல்லார் உள்ளத்திலும் இருக்கிறான் .பின்பு பக்தன் யார் ?


யார் சதா இறைவனை எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவனேபக்தன் .ஏனைய யாவையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு இறைவனுடைய திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிரு .அவன் ஒருவனே மெய்ப்பொருள் .ஏனைய யாவும் வெறும் தோற்றம் .இறையருள் பெறாவிட்டால் எல்லாம் அனர்த்தமாய்ப் போகிறது .ஒருவனுக்கு மைந்தர் சிலர் இருக்கின்றனர் .அவர்களுள் மூத்தவன் பிதா என்றோ ,அப்பா என்றோ தந்தையைச் சரியாக அழைக்கின்றான் .குழந்தையாகிய கடைசி மகன் அப்பா என்று அரைகுறையாகக் கூப்பிடுகிறான் .மழலைச் சொல்லை முன்னிட்டுக் கடைசி மைந்தனைத் தந்தை கோபித்துக் கொள்வானோ ?இறைவனை நீ எப்படி வேண்டுமானாலும் அழை .உனது பக்தியையே அவன் பொருள் படுத்துகிறான் .


விதையும் அதில் கிளம்பி வருகிற முளையும் மெல்லியவை .ஆனால் கடினமான பூமியைத் துளைத்துக் கொண்டு போகிற ஆற்றல் அந்த முளைக்கு உண்டு .அங்ஙனம் இறைவனது திருநாமம் என்னும் பீஜம் ஆற்றல் மிகப்படைத்தது .கல் நெஞ்சத்தையும் அது பண்படுத்துகிறது .


இறைவனுக்கும் அவனுடைய திருநாமத்துக்கும் வித்தியாசம் இல்லை .நாமம் நாமிக்கு நிகர் .தொட்டியில் வைத்துள்ள தண்ணீர் ஆவியாகி காற்றில் மிதந்து போகிறது .அதே விதத்தில் உடலைச் சார்ந்துள்ள பாபங்கள் இறைநாமத்தை உச்சரிப்பதால் அகன்று போகின்றன .அருள் தாகம் பிடித்து ,ஆத்ம சாதனங்களை ஒழுங்காகத் தினந்தோறும் செய்து வர வேண்டும் .