ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai    »    2014    »    Apr2014    »    இறைத் தூதரின் தூதுவர்கள்

இறைத் தூதரின் தூதுவர்கள்
ANM. முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய் - கத்தார் -எங்கும் பரிபூரணமாய் நீக்கமற நிறைந்து ,பரவி ,விரிந்து எல்லாமாய் ,எங்குமாய் இருந்து இரட்சிக்கும் ஏகனின் பரிபூரண இறுதி இறைத்தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் பூவுலக வரவு என்பது உடல் ரீதியாக பிந்தினாலும் அவர்களே கூறுவது போல் முதல் மனிதர் ஆதம் ( அலை )உருவாகும் போது அவர்கள் மண்ணுக்கும் நீருக்கும் இடையில் இருக்கும் போதே நான் நபியாக இருந்தேன் என்பதைப் பார்க்கும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது .அனைத்தின் மூலமான அல்லாஹ்விலிருந்து அவனை அறிவதற்கு வெளியான மனித இனம் தனது மூல உண்மையை மறந்து ,மனம் போன போக்கில் வாழ்ந்து மிகவும் கஷ்டங்களுக்கு உள்ளான நிலையில் ,பேரருளாளனாகிய அல்லாஹ்வின்கருணையின் விளைவாக மனிதனின் படைப்பின் நோக்கதை விளக்கி அவனை நல்வாழ்வு வாழ வைக்க அகிலங்களுக்கு அருட் கொடையாக மனித கோலத்தில் பின்னால் வெளியானவர்கள் தாம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்பதை இஸ்லாமியர்கள் நன்கு அறிவார்கள் .அவர்களின் மனித உடல் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர்களின் ஒவ்வோர் அங்க அசைவும் அறிவின் அசைவும் என்றும் அழியாத புத்தகமாய் இப்பூவுலகில் பதிந்துவிட்டது என்பதுதான் குர்ஆன் ,ஹதீஸ்குத்ஸி ,ஹதீஸ் மற்றும் அவர்களின் புனித வாழ்க்கை சரித்திரம் மூலம் ம்அறிந்து கொள்கிறோம் .தங்களுடைய இம்மனித கோல வரவிற்கு காரணமான இறைவனை பூரணமாய் விளங்க ,வாழ்ந்துஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் முறையில் இவ்வுலகில் வாழ்ந்து மனிதகுல வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள்தாம் நம் தலைவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .இவர்களின் வாழ்வுதான் மனித இனத்திற்குப் பொருத்தமானது என்பதை இறைவனும் திருக்குர்ஆனில் சாட்சி பகர்ந்துள்ளான் .இந்த வாழ்வின் பூரணத்தை ஸஹாபாப் பெருமக்களையும் சாட்சி யாக்கி இறுதி ஹஜ்ஜின் உரையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என்னுடைய மார்க்கத்தை பூரணப்படுத்தி விட்டேனா ?”எனக் கேட்டு அனைவரும் சாட்சியாக அதை ஏற்றுக் கொண்டதை சரித்திரம் பதிவு செய்துள்ளது .இனி ஒரு மனிதன் இப்பூவுலகில் சிறப்புடன் வாழ இதைவிட சிறந்த வழிமுறை இல்லை என்பதை இன்று முழு உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது .இப்பூவுலகில் மனித இனம் தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறது .எனவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித பூவுடல் மறைவிற்குப் பிறகு புதிதாய் வருபவர்களுக்கு எவையெல்லாம் வழிகாட்டும் என்பதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவுறுத்தி யுள்ளதை நாம் பின்பற்ற வேண்டும் .1. எனது மறைவிற்குப் பிறகு இரண்டை விட்டுச் செல்கிறேன் . அதைப் பிடித்துக் கொள்ளுங்கள் .

1. அல்குர்ஆன் 2. எனது திருக்குடும்பத்தார்கள் .


என்னுடைய ஸஹாபாக்கள் அனைவரும் வானில் மின்னும் நட்சத்திரங்களுக்கு ஒப்பானவர்கள் . அவர்களிலே யாரைப் பின்பற்றினாலும் நீங்கள் வழி தவற மாட்டீர்கள் .

எனது மறைவிற்குப் பிறகு குர்ஆனையும் எனது ஸுன்னத்தான நடைமுறையையும் பற்றிக் கொள்ளுங்கள் .பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அன்னை ஆயிஷா நாயகி ( ரலி )அவர்கள் கூறும்போது ,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு குர்ஆனாகவே இருந்தது என்று கூறுவதில் இருந்து ,இறைவன் சொல்லின் இலக்கணமாக ,செயல் வடிவாகவே அருமை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்தார்கள் என்று அறிய முடிகின்றது .இறைவனை மட்டுமே பின்பற்றுவேன் எனக் கூறினாலும் அவன் பெருமானார் அவர்களைத் தான் பின்பற்றி வாழ வேண்டும் என்பதும் ,நாயகம் அவர்களை நேசித்தலே இறைவனை நேசிக்க அடிப்படையாக அமையும் என்பதும் புலனாகிறது .குர்ஆனிலே இறைவன் கூறுகிறான் .“ நபியே நீங்கள் இந்த மார்க்கத்தை தந்ததற்குப் பகரமாக எந்த ஒரு கூலியையும் எதிர்பார்க்கவில்லை .என்னுடைய குடும்பத்தை நேசம் கொள்வதைத் தவிர என்று கூறுங்கள்” என்கிறான் .ஏனெனில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பத்தார் மட்டுமே இறைவனின் உண்மையை உலகிற்குத் தருவதற்கு தான் தேர்ந்தெடுத்து உள்ளதை நன்கு அறிய முடிகிறது .எனவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடல் மறைவிற்குப் பிறகு குர்ஆனின் வாக்கியப்படியும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ் படியும் பெருமானார் அவர்களின் திருக் குடும்பம் மட்டுமே மார்க்கத்தை பின்பற்றிக் கொள்ள வழிகாட்டும் ஒளி விளக்காய் அமைந்துள்ளதை அறிய முடிகிறது .எனவே பெருமானாரின் மறைவிற்குப்பின் வந்துள்ள சமுதாயம் பெருமானாரின் திருக்குடும்பங்களை இனம் கண்டு மார்க்கத்தைப் பற்றிக் கொள்ள வழிகிடைக்கிறது .இது மிகவும் எளிதில் மனிதர்களுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தந்த வழி என்பதே உண்மை .இன்று நமக்குக் கிடைத்துள்ள பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் ,செயல் ,அசைவுகள் எல்லாமும் இறை உதிப்பான குர்ஆன் முழுமையும் நமக்கு இன்று புத்தக வடிவமாய் ,நாம் பின்பற்றிக் கொள்ள ஏதுவாய் இருப்பதற்கு முழுமுதல் காரணமாய் இருப்பவர்கள் அருமை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதத் தோழர்களான ஸஹாபாப் பெருமக்கள் .நல்ல ஈமான் கொண்ட இறைவனை நேசிக்கக்கூடிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுவோர் எந்தக் காலத்திலும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவர்கள் தான் அருமை ஸஹாபாக்கள் .இவர்களில் யாரைப் பின்பற்றினாலும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸின்படி மார்க்கத்தைப் பின்பற்றியவர்களாகவே ஆவோம் .ஏனெனில் அருமை ஸஹாபாப் பெருமக்களின் வாழ்வு முழுவதும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட நேசமும் மாறாத பாசமும் நிறைந்திருந்தது .இவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு முழுவதையும் நமக்குத் தந்து உடலளவில் மறைந்துவிட்டவர்கள் .இவர்களுடைய சரித்திரங்கள் எல்லாம் பெருமானார் மீது பரிபூரண நேசங்கொண்டு தியாகிகளாய் வாழ்ந்ததையே அடிப்படையாகக் கொண்டுள்ளது .


பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உடல் மறைவிற்குப் பிறகு அவர்களின் நடைமுறை வாழ்வு அனைத்தும் ஒரு விரல் அசைவுக் கூட விடாமல் இன்று நாம் பின்பற்றக் கிடைத்துள்ளது .எனவே அதற்கு முழு முதல் காரணம் தம் வாழ்க்கையையே மார்க்கத்திற்கு தியாகம் செய்து ஹதீதுகளைத் தேடி ஸஹாபாப் பெருமக்களைக் கண்டு பெற்று நான்கு மதுஹபுகள் மூலம் வழிகாட்டிக் கொண்டிருக்கும் நான்கு இமாம்களே .


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முழு அசைவுகளும் ,ஸஹாபா பெருமக்களிடமிருந்து பெறப்பட்டு அவற்றில் ஏதும் விடுபட்டாலும் ,அதிக குழப்பங்கள் ஏற்பட்டு மார்க்கத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டு விடாமலும் நான்கு மதுஹபுகளில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அனைத்து அம்சமும் அடக்கப்பட்டுள்ளது என்பதே மதஹபுகளின் சிறப்பாகும் .பெரும் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு அதே சமயம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்ற வேண்டிய மக்களுக்கு எல்லாக் காலத்திலும் வழி அமைத்துக் கொடுத்த தியாக சீலர்கள் தாம் ஹனபி ,ஷாபி ,ஹம்பலி ,மாலிக்கீ ஆகிய நான்கு மதுஹபுகளின் இமாம்கள் .இதன் மூலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸின்படி குர்ஆனும் ,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்தான வழிமுறையும் இவர்கள் மூலமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது .ஆனால் இன்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை ( ஸுன்னா )பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டு ,இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்று கூறிக் கொண்டு மதுஹபுகளைப் பின்பற்றாமல் ,மதுஹபுகளின் அடிப்படைக் காரணங்களை அறியாது ,இஸ்லாத்தில் பல புதிய பிரிவுகளை சிலர் மார்க்க அறிஞர்கள் என்பதாக சித்தரித்துக் கொண்டு இஸ்லாத்தை சீர்குலைக்கப் பார்க்கின்றனர் .பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பங்களாகட்டும் ,ஸஹாபாப் பெருமக்களாகட்டும் ,நான்கு பெரிய மதுஹபுகளின் இமாம்களாகட்டும் ,உண்மையாக இறைவன் மீது மிகுந்த காதல் கொண்டு அதன்படி செயலாற்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தமது உயிருக்கும் மேலாக நேசித்து ,மரியாதை கொண்டு எந்தத் தவறுகளும் அவர்களின் சுன்னத்தான நடைமுறையில் ஏற்பட்டு விடாமல் காத்து இன்று நாமும் பின்பற்ற ஏதுவாய் நம்பிக்கையில் மார்க்கத்தைத் தந்துள்ளனர் என்ற உண்மையை நாம் உணர வேண்டும் .அல் உலமாவு வரதத்துல் அன்பியாயி” என்பது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கு .இதன்படி உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என்பதால் நாம் உலமாக்களின் சொற்களையும் கேட்டு மார்க்கத்தை பின்பற்ற வழியும் உள்ளது .அவர்களும் மார்க்கத்தை வழிநடத்திச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது .ஆனால் எப்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது பெரும் காதலும் ,மரியாதையும் கொண்டவர்களாக ,நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பத்தார்கள் ,ஸஹாபாப் பெருமக்கள் ,நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் இருந்ததால்தான் அவர்களை நாம் பின்பற்றுகிறோமோ அதே போல் எந்தவொரு உலமாவும் பெருமானாரை தம் உயிருக்கும் மேலாக நேசித்து அதனால் பெருமானார் அவர்களின் திருக்குடும்பத்தார்கள் மீதும் நேசங்கொண்டு ,தியாக சீலர்களான ஸஹாபிகள் பெருமானார் மீது எப்படி நேசம் கொண்டார்களோ அப்படி நேசம் கொண்டு ,குத்பு நாயகம் முஹையுத்தீன் அப்துல் காதர் ஜீலானி ( ரஹ் )அவர்கள் எந்தவொரு சஹாபாப் பெருமக்களின் குதிரையின் கால் தூசிக்கு சமமாக மாட்டேன் என்று தன்னடக்கமாக மரியாதை கொடுத்தார்களோ அதே போல் ஸஹாபாக்களிடமும் பணிவு கொண்டு ,உத்தம தலைவர்களான நான்கு மதஹபுகளின் இமாம்கள் செய்த சேவையை ,தியாகத்தைப் போற்றி அவர்களில் ஒருவரை முறையாக பின்பற்றிக் கொள்கிறாரோ அப்படிப்பட்ட ஓர் ஆலிமை நாம் பின்பற்றினால் அதுதான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்படி சரியாகும் .


இறைவனின் தூதை நிலைநிறுத்திய நமது உயிரினும் மேலான தலைவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ளின் அந்த உண்மை வாழ்வை இந்த உலக மக்களுக்கு என்றும் எடுத்துக் கூறும் வாயிலாகவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித திருப்பரம்பரை யினர்களும் ,ஸஹாபா பெருமக்களும் ,நான்கு மதஹபுகளின் இமாம்களும் ,பெருமானாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முழு வாழ்வையும் பேணிக் கொண்டே உலமாக்களும் நம் மத்தியில் இருப்பதால் எந்தக் காலத்திலும் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித இஸ்லாமிய வழி எவராலும் பின்பற்றிக் கொள்ள ஏதுவாகவே அமைந்துள்ளது .இந்த அத்துணை பேருமே தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மை தூதுவர்களாகவே இந்த உலகத்தில் என்றும் பவனி வருகிறார்கள் .


வாழ்க இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புகழ் !

வளர்க தூதரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தூதுவர்கள்”