ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Sep 2012   »  ​வஹாபிகள் சஹாபிய வேடங்களில்


தொடர்....                                                                                                                           தொடர் எண்-29


வஹாபிகள் சஹாபிய வேடங்களில்

 

குத்பின் வல்லமை

 

     பூலோக ஜனத் தொகையில் அளவுபார்க்க ஐந்திலொரு பாகத்தினரான, கோடானு கோடி முஸ்லிம்களில், ஆண்களும் பெண்களும்  இவ்விருபாலரும். தத்தமக்கு ஆபத்து, இடர்கள் சம்பவிக்கும் சந்தர்ப்பங்களிலும் ஆனந்த சமயங்களிலும்  அப்துல் காதிர் முஹிய்யுத்தீன் ஜீலானி (றலி) அவர்களது திருநாமத்தைத் தாராளமாக உச்சரிப்பதைப் பிரத்தியட்சமாகப் பார்க்கலாம். கடல் போல விரிவான இவர்களது அற்புத காரணங்கள், கறாமாத்துகள், மனாக்கிபு கெளதிய்யா, பஹ்ஜத்துல் அஸ்றார். தப்ரீஜுல்காத்திர் முதலிய கிரந்தங்களில் நிறைந்துள்ளன.  


      “கெளதுல் அஃளம் (றலி) அவர்களது அற்புத காரணங்கள் ஏராளம், ஏராளமான ஏடுகளையும் கிரந்தங்களையும் நிரப்பிப் பொங்கி வழிகின்றன” (மலஅத் முதவ்வனத்தன், குதுபன் முஅல்ல பதன்...)  என்று  மாதிஹுர் ரஸூல், ஸதக்கத்துல்லாஹ் அப்பா (றஹ்) அவர்கள், யாகுத்பா மாலையில் சிறப்பித்துப் பாடியுள்ளார்கள்.


      ஒரு பாடலிலேயே,  கெளது நாயகம் (றலி) அவர்களது அற்புதக் காரணச் சிறப்பை வெகுவாக அமைத்துத் தந்துவிட்டார்கள். மகான் குணங்குடி மஸ்தான் அப்பா (றஹ்) அவர்கள். இதோ....

 

கடலிற் கவிழ்ந்ததோர் கப்பலா லாத்துடன்

கடுகிவரவே யழைத்தீர்!


கம்பமுடனோடியே வந்ததோர் கப்பலை 

கடிபூனை யாக்கி வைத்தீர் !


குடிகொண்டு கர்ப்பவறை 

யுள்ளிருக்கையிலுமைக்  கொலைசெய்ய வந்த முனியைக்


குதிகொண்டு வெளி சென்றுமிருதுண்டு

கண்டுபின் கூர்கர்ப்ப வறை புகுந்தீர் !


பிடியிற் பிடித்துண்ட பிள்ளை

சன்னியாசி குடர்  பீறி வரவே யழைத்தீர்!


பிரியம் வைத்தெனையாள

 வென்னிடத்திந்தவிரு பேரையுந் தூதுவிட்டீர் !


நடனமிடு பாதார விந்தமென் 

சென்னியுற நாட்செல்லுமோ செல்லுமோ!


நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான

குரு நாதன் முஹிய் யுத்தீனே !

 

 இவ்வாறாக மகிமை மிகக் கொண்டு, மெய்ஞ்ஞான சொரூபியான, குணங்குடி மஸ்தான் ஸாஹிபு, ஆரிபு பில்லாஹ் (றஹ்) அவர்கள் தங்களது அருட்பாடலில் முழக்குகின்றார்கள்.

   

   இவ்வாறான அற்புதக் காரணங்கள், அன்பியாக்களைக் கொண்டு நிகழ்ந்தால் “முஃஜிஸாத்து” என்றும் அவுலியாக்களைக் கொண்டு நிகழ்ந்தால் “கராமாத்து” என்றும், வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விரு பதங்களும் இயற்கைக்கு மாற்றமான நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவனவாகும். ஆகவே தான் அன்னார்களுக்கு ‘கவாரிகுல்-ஆதாத்’ - “இயற்கையின் வழமைக்கு மாற்றமாக அற்புத நிகழ்ச்சிகளை நடத்தக் கூடியவர்கள்” என்று பெயர் உண்டு.

   

   இவ்விதமான கராமாத்துகள் இறுதித் தீர்ப்பு நாள் (கியாமத்து)வரை நடைபெற்றுக் கொண்டே இருக்கும்; அறுபட்டு நின்றுவிடாது. ஆகவே அத்தகைய ஆற்றல் பெற்ற மகானுபாவர்கள் பால் நேராக நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தரும்படி கேட்பது ‘ஜாயிஸும்’ ‘முஸ்தஹப்பு மாகும்’. இவ்வாறாக பத்வாக்களும் உள்ளன.


      “கராமாத்துகளை இன்கார் (நிராகரிப்பு) செய்தால், ஸுன்னத்- வல்-ஜமா அத்துக் கூட்டத்தை விட்டும் நீங்கி, வழி கெட்ட முஃதஸிலாக்களின் கூட்டத்திலாகி விடுவான்” என்று ‘பதாவா-கலீலீ,’ 2வது பாகம், 249-வது பக்கத்திலும், ‘தம்ஹீது,’ 81-ஆவது பக்கத்திலும், ­ரஹு-பிக்ஹுல் அக்பர்’ 69-ஆவது பக்கத்திலும், ‘அல்-யவாக்கீத்து-வல்-ஜவாஹிர்-பீ-பயானி-அகாயிதில்-அகாபிர்,’ 2வது பாகம், 90-ஆவது பக்கத்திலும் வந்துள்ளன.


      இன்னும் இவ்வாறாகவே ‘­ஷரஹு- தரீக்கத்துல்-முஹம்மதிய்யா,’ ‘நபஹாத்துல்-குர்பு-வல்-இத்திஸால்’ முதலிய பல கிரந்தங்களிலும் காணப்படுகின்றன.


      உண்மை இவ்வாறிருக்க, பிள்ளைப் பாக்கியம், அவுலாது உண்டாக அவுலியாக்களிடம் கேட்கக் கூடாதெனவும், அது பற்றி இழிவாகவும் பலர் கூறியும் எழுதியும் வருவதோடு, தகாத, அடாத சொற்பதங்களையும் பிரயோகிப்பது வருந்தத்தக்கதாகும். அத்தகையவர்கள் அறிவு, உணர்ச்சி பெறும் பொருட்டு மேலும் சில ஆதாரங்களைத் தருகிறோம்.


      “தனக்குக் குழந்தை உண்டாக வேண்டுமென்று விரும்புகிறவன். ஹள்ரத், உஸ்த்தாது, அபுல்அப்பாஸ், ஸப்தீ, வலிய்யுல்லாஹ் (றலி)அவர்களுடைய கபுரை ஜியாரத்துச் செய்வதைப் பற்றிப் பிடித்துக் கொள்வானாக. ஏனெனில்,அவன் நாடித் தேடுகின்ற நாட்டம் அவனுக்கு நிறைவேறி, அவனது மனைவியும் அல்லாஹ்வின் ஏற்பாட்டைக் கொண்டு துரிதமாய்க் கர்ப்பமாகி விடுவாள் என்பதற்கேயாம். இது அனுபவத்தில் சோதிக்கப் பெற்று நேரில் கண்டு அனுபவித்த,அதியாச்சரியமான இரகசியமாகும்” என்று அல்லாமா இமாம் அபூ அப்துல்லாஹ் ஷைகு ஸனூஸீ (ரஹ்) அவர்கள், ‘முஜர்ரபாத்’ திலும், அல்லாமா இமாம் தைரபீ (றஹ்) ஹாமிஷா’ 52-ஆவது பக்கத்திலும் அறிவித்துள்ளார்கள். உலகம்போற்றும் உத்தமப் பெரியார் ஒருவருடைய பிறப்பைப் பற்றியும் இங்கு உதாரணப் படுத்திக்கூறுவது மிகமிகப் பொருத்தமென நினைக்கின்றோம்.


      வாரி வழங்கிக் கொடை கொடுத்த வள்ளலும், பரோபகாரம் புரிவதே தனது தொழிலாகக் கொண்டிருந்தவருமான ‘ஹாத்திம் தாயீ’ குடும்பத்தைக் சேர்ந்தவரும், ஐரோப்பாவிலே ஸ்பெயின் தேசத்திலே ‘முர்ஸியா’என்ற ஊரிலே, ஹிஜ்ரி 560 ரமலான் 17, திங்கட்கிழமை இரவில் பிறந்து, இபுனு சுறூக்கா என்னும் பெயருடன் ஸ்பெயினில் 38 வருட காலம் வாழ்ந்து, ஹிஜிரி 598-ல், ஸ்பெயினை விட்டும் புறப்பட்டு ஆப்ரிக்கா, அரேபியா, இராக், ஆசியா மைனர் முதலிய பிரதேசங்களில் சுற்றுப் பிரயாணம் செய்து, பெரியார்களது கபுருகளை ஜியாரத்துச் செய்து பல ஹஜ்ஜுகளும் புரிந்து, சிறிதும் பெரிதுமாக 289 நூற்களுக்குக் குறைவின்றி இயற்றிப் புகழ்பெற்று, 78 வருடம், 7 மாதம், 9 நாள் குடும்பத்துடன் மாலிக்கீ மதுஹபில் வாழ்ந்து, ஒரே புத்திரனைப் பெற்று ஹிஜ்ரி 638, ரபீவுல் ஆகிர் 28, வெள்ளிக்கிழமை இரவில் வபாத்தாகி, ஸிரியாவிலே திமிஷ்க் நகரிலே, காஸீயூன் குன்றின் மீது அடக்கமாகி இருப்பவருமான அற்புத அவதாரப் புரு­ஷ்ரின் பிறப்புச் சிறப்பு விபரம் வருமாறு :-


      “பிரபல்ய வியாபாரியும்  செல்வந்தருமான ஸ்பெயின் வாசி ஒருவருக்கு எல்லாவிதமான ஐசுவரியச் சம்பத்துகளிருந்தும்  ஒருபெருங்குறை. அதுதான் புத்திர சம்பத்தில்லாத குறை. தான் கேள்வியுற்றிருந்த பெரியார்கள் யாவரிடத்திலும் தேடிச் சென்று தனது மனக்குறையை அவர் தெரிவித்தார்.யாவரும் அவருக்கு விதியிலேயே பிள்ளை பாக்கியம் பெறுவதற்கு இடமில்லை என்ற பதிலேயே கூறினர். அவரும் மிகவும் வியாகூலமடைந்து கவலையோடிருந்து வந்தார்.


      கடைசியாக, ஹள்ரத் கெளதுல் அஃளம், யஸய்யிதுனா, முஹ்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி(றலி) அவர்களது கீர்த்திப் பிரஸ்தாபத்தைக் கேள்வியுற்று, அவர் பகுதாதுமா நகருக்குச் சென்று தனது முறைப்பாட்டை அந்த மஹான் (றலி) அவர்களிடம் சென்று கூறினார்.


      கெளதுல் அஃளம் (றலி) அவர்கள் “லவ்ஹை நோக்கினேன். அதில் உமக்குப் பிள்ளைக்குட்டி பாக்கியம் இல்லை என்றே தெரிய வருகிறது” என்று சொன்னார்கள்.


      உடனே அம்மனிதர் கலங்கிப் பரிதவித்து, “நாயகமே !இந்தத் துர்ப்பாக்கியனுக்குப் பிள்ளை இல்லை என்று எல்லோருமே கூறிவிட்டார்கள். இரப்பார்க்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதை ஈந்து வழங்கும் வள்ளலாகிய தங்கள் வாயிலைத் தேடி தமியேன் இந்தக் கோரிக்கையுடன் வந்திருக்கிறேன். பாவியின் மீது தயைகூர்ந்து கிருபை செய்தருளி இவனது அபேட்சையைப் பூர்த்தி செய்தருள வேண்டுகிறேன்” என்று மன்றாடினார். அவரது மனோநிலையை அறிந்து மனமிரங்கி, ஹள்ரத் கெளதுல் அஃளம் (றலி) அவர்கள், “அலியே ! என்னில் நின்றும் உமக்கொரு பிள்ளையைத் தருகின்றேன். உமது முதுகை எமது முதுகுடன் சேரும். எமது முதுகுத் தண்டிலிருப்பது ஆண் குழந்தை. அது உமது இல்லத்தில் பிறக்கும். எமது எல்லாவித இல்முகளுக்கும் அந்தப் பிள்ளையே வாரிசாவார். அவர் எமது நாவாகவே இருப்பார். எவரும் வெளிப்படுத்தாத அகமிய இரகசியங்களை எல்லாம் அவர் பகிரங்கப்படுத்துவார். புகழோடும் கீர்த்தியோடும் விளங்குவார். அவருடைய பெயர் முஹம்மது. ஆனால், முஹிய்யுத்தீன் என்ற காரணப் பெயருடன் விளங்குவார்” என்று ஆசி கூறி அனுப்பினார்கள். அவரும் சந்தோ­ஷத்துடன் வீடு திரும்பினார், அன்று, அவர் மனைவி கர்ப்பவதியாகி அப்பால் ஜனனமானவர்கள் தான், ஹஜ்ரத் ஷைகுல் அக்பர், ஸையிதுனா முஹம்மது, முஹிய்யித்தீன்இப்னு-அரபீ (றலி) அவர்களாவர்,


      இவ்வரலாறு, மனாகிப்-கெளதிய்யா,’ 76-ஆவது பக்கத்திலும், ‘கலாயிதுல்-ஜவாஹிர்’ கிரத்தத்திலும் காணலாம்.        (தொடரும்)