ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Sep 2012   »  நம்பிக்கை கல்வியை விட மேலானது


நம்பிக்கை கல்வியை விட மேலானது

கலீபா A. முஹம்மது காசீம் B.Sc., M.Ed.,பெரம்பலூர்.

 

     ரு நாள் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களின் இல்லத்திற்கு வந்த பொழுது அவர்களின் முன் ஒரு ரொட்டியையும் சிறிது உப்பையும் கொண்டு வந்து வைத்து அதனை உண்ணுமாறு வேண்டிக் கொண்டார்கள்.  அப்பொழுது வாயிலில்  ஓர் ஏழை வந்து உணவு கேட்க, உடனே ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்கள், ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களின் முன் தாம் கொண்டு வந்து வைத்த ரொட்டியையும் உப்பையும் எடுத்து அந்த ஏழைக்குக் கொடுத்து விட்டார்கள். இது கண்டு பெரிதும் ஏமாற்றமுற்ற ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களை நோக்கி, “நீர் நல்லவர்தாம். எனினும் உம்மிடம் சிறிது கல்வியறிவு இருந்திருப்பின் மிகவும் மேலாக இருந்திருக்கும். விருந்தினர் முன் வைக்கப்பட்ட உணவு முழுவதையும் எடுத்து வேறொருவருக்குக் கொடுப்பது பண்பல்ல என்பதை நீர் அறியவில்லை. அதில் சிறிதளவு பிய்த்து அவ்வேழைக்குக் கொடுத்திருப்பின் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்”.  என்று கூறினர். அது கேட்டு ஹபீப் அஜமீ (ரஹ்)அவர்கள் யாதொன்றும் கூறவில்லை.  சற்றுநேரம் கழிந்தது. ஒருவன் ரொட்டி, கறி, ஹல்வாஐந்நூறு திர்ஹம் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களின் திருமுன் வைத்து, இவற்றைத் தன் எசமான் அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்ததாகக் கூறினான். உடனே ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்கள்அப்பணத்தை எடுத்து ஏழை எளியவர்களுக்கு அறம் செய்து விட்டு உணவுப் பொருள்களை எடுத்து ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களின் திருமுன் வைத்து அவர்களுடன் சேர்ந்து தாங்களும் உண்டனர். உண்டு முடித்ததும் அவர்கள் தங்களின் ஞானாசிரியரை நோக்கி “ஆசிரியர் அவர்களே ! தாங்கள் மிகவும் நல்லவர்கள் தாம். எனினும் இறைவனின் பேரருளில் அசைக்க முடியாத நம்பிக்கை, இறைவழியில் செலவிடப்பட்ட பொருள் பலமடங்கு அதிகமாகப் பெருகித் தங்களை வந்தெய்தும்  என்னும் ஆழிய நம்பிக்கை தங்களின் உள்ளத்தில் இருந்திருப்பின் மிகவும் மேலாக இருந்திருக்கும்” என்று கூறினர். அதுகேட்டு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் மெளனமாயினர்.


      சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் தம் ஞானாசிரியரை நோக்கி, ஆசிரியர் அவர்களே! கல்வி நல்லது தான். ஆனால் அதைவிட நல்லது நம்பிக்கை. நான் ரொட்டியையும் உப்பையும் தங்களின் முன் கொண்டு வந்து வைத்து, உண்ணீர், உண்ணீர் என்று வேண்டிய

 பொழுது தங்களின் தகுதிக்குத் தக்க வண்ணம் தங்களை கெளரவிக்க  இயலவில்லையே என்று என் மனம் வருந்தியது. அப்பொழுது தான் ஓர் ஏழை வாயிலில் வந்து நின்று உண்ண உணவு வேண்டினார். தங்களின் முன் வைக்கப்பட்டிருந்ததைத் தவிர்த்து வீட்டில் யாதோர் உணவுப்பொருளும் இல்லாததால் அதனையே அவரிடம் கொடுத்து விட்டேன். அது பண்பாட்டுக் குறைவேயாயினும் அதற்குப் பகரமாக இறைவன் நல்ல உணவைத் திருப்பி அனுப்பிவைப்பான்; அதனை தங்களுக்கு உண்ண அளிப்பின் நன்றாக இருக்கும் என்று எண்ணியே அவ்வாறு செய்தேன். என் எண்ணம் வீண் போகவில்லை. என் நம்பிக்கை பலன் அளித்தது”. என்று கூறினர். அது கேட்ட ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் “ஹபீபே ! நிச்சயமாக நீர் பெருமகராவீர். உண்மையில் நம்பிக்கை கல்வியை விட மேலானதுதான்” என்று மொழிந்தார்கள்.


      பிறிதொருநாள் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்கள் வணக்கம் நிகழ்த்தி வந்த சிறுகுடிலுக்கு வந்த பொழுது அங்கு அவர்கள் தொழுது கொண்டிருந்ததையும் தொழுகையில் சூரா  ஃபாத்திஹாவை சரியாக  உச்சரிக்காததையும் கண்டு அவர்களின் பின்னே நின்று தொழாது தனியாகத் தொழுதனர்.


      அன்றிரவு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் படுத்துறங்குங்கால் இறைவனைக் கனவில் தரிசித்தார்கள்.  ஓதும்பொழுது ‘அல்ஹம்து’ என்று சொல்ல, அப்பொழுது இறைவன்

அவர்களை நோக்கி“நீர் நேற்று ஹபீப் அஜமீயைப் பின் தொடர்ந்து தொழுதிருப்பின் அத்தொழுகை உம்முடைய வாணாளில் நீர் தொழுத எல்லாத் தொழுகைகளையும் விட அதிக பலன் தந்திருக்கும். ஆனால் நீர் அவரின் உச்சரிப்பைக் கவனித்தீரே யொழிய உள்ளத்தைக் கவனித்தீரில்லையே” என்று கூறினான். அது கேட்ட ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் அதிர்ந்து போனார்கள். தம் மாணவரின் மகாத்மியம் அவர்களுக்கு இப்பொழுது தான் நன்கு தெரியவந்தது.


      இதன்பின் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களை நோக்கி “ஹபீபே ! இத்தகு உன்னதமான ஆன்மிகப் படித்தரத்தை உம்மால் எவ்வாறு எய்தப் பெற இயன்றது ”? என்று வினவிய பொழுது, ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்கள் தம் ஞானாசிரியரை நோக்கி, “எழுதி எழுதித் தாளை கருப்பாக்காது வணங்கி வணங்கி என் இதயத்தை வெளுப்பாக்கியதால்” என்றுபதிலளித்தனர். அதுகேட்டு ஹஸன் பஸரீ (ரஹ்) “என் கல்வி பிறருக்கு பயன்அளித்ததேயொழிய எனக்கு பயனளிக்கவில்லையே” என்று வருத்தத்துடன் நவின்றனர்.


      ஒருநாள் ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்கள் தம் சிறு குடிலில் அமர்ந்து வணக்கம் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் ஓடோடி வந்து அக்குடிலுக்குள்  நுழைந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப்பின்  போர் வீரர்கள் அவர்களை பிடிப்பதற்காக விரட்டிக் கொண்டு வந்தார்கள். உள்ளே நுழைந்த அவர்கள், “எங்கே ஹஸன் பஸரீ ”  என ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களிடம் வினவிய பொழுது, “உள்ளே தான் சென்றார்கள். சென்று தேடிப்பாருங்கள்”. என்று மறுமொழி பகர்ந்தனர். உள்ளே சென்று எங்கு தேடியும் காணாது திரும்பி வந்த போர் வீரர்கள் ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களை நோக்கி “உம்மைப் பார்த்தால் பெரும் வணக்கவாளர் போன்று தோன்றுகிறது. எனினும் பொய்யுரைக்கின்றீரே” என்று கூறினர். அதற்கு ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்கள் “நான் பொய்யுரைக்கவில்லை, மெய்தான் உரைத்தேன். அவர் உள்ளேதான் சென்றார் அங்கு தான் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். அது உங்கள் கண்களுக்கு தென்படவில்லையாயின் அதற்கு நான் என் செய்வது” என்று கூறினர்.


      அது கேட்ட அப்போர்வீரர்கள், “தங்களின் கண்கள் தாம் தங்களை ஏமாற்றி விட்டனவோ அல்லது தாங்கள் தாம் சரியாகத் தேடிப் பார்க்கவில்லையோ”? என்று எண்ணி உள்ளே சென்று அங்குமிங்கும் தூண்டித்துருவிப் பார்த்தார்கள். ஆனால் எங்கும் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.  சற்றும் நேரம் கழிந்தது. ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் உள்ளே இருந்து வெளியே வந்தார்கள். “ஹபீபே ! நீர் இவ்வாறு செய்யலாமா ? அடைக்கலம் புகுந்தோரை அவரின் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கலாமா” ? என்று ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களிடம் வினவினர். அது கேட்ட அவர்கள், நான் எங்கே தங்களைக் காட்டிக் கொடுத்தேன்; உண்மையை உரைத்தேன். அதன் காரணமாகத் தாங்கள் தப்பினீர்கள். பொய்யுரைத்திருப்பின் தாங்களும் நானும் சிறைப்பட்டிருப்போம். உண்மையுரைப்பதில் மீட்சியுள்ளது. பொய்யுரைப்பதில் அழிவுள்ளது என்று அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றது பொய்யா மொழியன்றோ”? என்று பகர்ந்தனர்.


      இதன் பின் சற்று நேரம் அமைதி நிலவியது. அமைதியைக் கிழித்துக் கொண்டு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்கள். “ஆம் நீர் கூறுவது முற்றிலும் உண்மை ; முக்காலும் உண்மை. அதில் அணுவத்தனையும் ஐயமில்லை. எம்பெருமானாரின் திருவாய்மொழி பொய்யாமொழியே யன்றி வேறென்ன ”? என்று கூறிய பின் “நல்லது அவர்கள் உள்ளே வந்து உம்மைத் தேடிய பொழுது,நீர் என்னவோ ஓதிக் கொண்டிருந்தீரே அது என்ன” ? என்று வினவினர்.


      அதற்கு ஹபீப்  அஜமீ (ரஹ்) அவர்கள் “நான் அப்பொழுது ஆயத்துல் குர்ஸீ இருமுறையும், சூரத் இக்லாஸ் பத்து முறையும், ஆமனர் ரசூல் பத்து முறையும் ஓதி இறைவனே ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களைக்காத்தருள் புரிவது உன்மீது கடமையாகும். அவர்கள் உன்னிடம் அடைக்கலம் புகுந்துவிட்டார்கள் என்று இறைஞ்சினேன்” என்று பதிலிறுத்தார்கள். அவர்களின் இப்பதில் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களின் கண்களில் நீர் மல்கச் செய்தது. “ஹபீபே! உம்முடைய இறைஞ்சுதலால் தான் இறைவன் அவர்களின் கொடும்பிடியிலிருந்தும் என்னைக் காத்தருள் புரிந்தான். அவர்கள் என்னை இங்குத் தேடுங்கால் அவர்களின் கரங்கள் ஒரு தடவையல்ல ஏழு தடவை என்மீது பட்டன. எனினும் அவர்களால் என்னைக் கண்டு கொள்ள இயலாது இறைவன் அவர்களின் கண்களில் திரையிட்டு விட்டான்” என்று அவர்கள் உணர்ச்சி ததும்ப மொழிந்தார்கள்.


      மற்றொருநாள் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், அக்கரை செல்லப் படகை எதிர்பார்த்து தஜ்லா நதிக்கரையில் காத்திருந்த பொழுது, ஆங்கு வந்த ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி ஆற்றில் இறங்கி தண்ணீரின் மீது மடமடவென்று நடந்து அக்கரை சேர்ந்து விட்டார்கள். இதைக்கண்டு பெரிதும் வியப்புற்ற ஹஸன் பஸரீ (ரஹ்) “இஃது எவ்வாறு உம்மால் இயன்றது”? என்று வினவியபொழுது, “பொறாமையை உள்ளத்திலிருந்து கிள்ளி எறியுங்கள். உலக ஆசாபாசங்களை உள்ளத்திலிருந்து வேரறப் பிடுங்கி வீசி எறியுங்கள். துன்பத்தை விலைமதிக்க முடியாத பொருள் என்று கருதுங்கள். எல்லாம் இறைவன் நாட்டப்படி நடக்கிறது என்று எண்ணி அமைதியாய் இருங்கள். அதன் பின் நீங்கள் நீரின் மீது நடந்து செல்லலாம்” என்று அவர்கள் பதிலிறுத்தார்கள்.


      கொலை செய்த ஒருவர் தூக்கு மரத்தில் ஏற்றப்பட்டுக் கொன்றொழிக்கப் பட்டார், அவரை ஒருவர் கனவில் கண்ட பொழுது, சுவனப் பூங்காவில் பட்டாடை புனைந்து பவிசாக உலவிக் கொண்டிருப்பதைக் கண்டு பெரிதும்  வியப்புற்று, “கொலைகாரராகிய உமக்கு இத்தகுதி எவ்வாறு வாய்க்கப் பெற்றது”?என்று வினவிய பொழுது, “நான் தூக்கு மரத்தில் ஏற்றப்பட்ட காலை அவ்வழியே சென்ற ஹபீப் அஜமீ (ரஹ்) அவர்களின் கடைக்கண் பார்வை என்மீது பட்டது. அவர்கள் எனக்காக இறைவனிடம் இறைஞ்சிவிட்டுச் சென்றார்கள். அதன் காரணமாக எனக்கு இத்தகுதி கிடைத்தது” என்று கூறினார் அவர்.


      மேற்கண்ட நிகழ்வுகளை கவனிக்கும்போது இறைநம்பிக்கை கல்வியை விட மேலானது; மேலும் அவ்லியாக்களின் பார்வை பட்டால் ஒருவனின் உள்ளம் சுத்தமடையும், ஆபத்துக்களிலிருந்து தப்பிப்பான், தகுதி உயர்வு பெறுவான் என்பதை உணர்ந்து குத்புமார்களையும், அவ்லியாக்களையும் ஆதரிப்போம், மதிப்போம், மகிழ்ச்சி அடைவோம்?