ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Sep 2011   »  நல்ல பென்மணி


 நெடுந்தொடர் ... 

நல்ல பென்மணி


நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு -  எம். ஆர். எம். முகம்மது  முஸ்தபா)

 

 

பெண்கள் சிறு, சிறு துண்டுகளாக உள்ள நகைகளை, அதாவது காதணி, சிறு மோதிரம் போன்றவற்றை அணிந்து கொள்ள அனுமதி இருக்கிறது.  பெரிய நகைகள் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணம் மூன்று.  அவை, பொருள் வீணாவது, பெருமை ஏற்படுவது, ஜகாத் அளிக்கப் பெறாமல் விடுபட்டுப்போவது ஆகியவை ஆகும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தம் குடும்பத்தினர் தங்க நகைகளை அணிவதையும், பிறர் பெரிய தங்க நகைகள் அணிவதையும் விரும்ப வில்லை.  அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (ஒருநாள்) ஹுபைராவுடைய மகள் ஹிந்தா என்பவள் வந்தாள்.  அவளின் கையில் தங்கத்தாலான முகப்பில்லாத பெரும் வளை மோதிரங்கள் இருந்தன.  அப்பொழுது,அவர்கள், அவளின் கையில் அடித்தனர்.  அவள்,  பாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று இது பற்றி முறையிட்டாள்.  அதற்கு பாத்திமா (ரலி) அவர்கள் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி, ‘இது ஹஸனின் தந்தையால் எனக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது’ என்று கூறினர்.


அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்துவிட்டனர். அந்தச்சங்கிலி பாத்திமா(ரலி) அவர்களின் கையில் தான் இருந்தது.  எனவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “பாத்திமாவே! முஹம்மதுவுடைய மகளின் கையில் நெருப்புச் சங்கிலி இருக்கிறது என்று மக்கள் பேசிக் கொள்வது உமக்குத் திருப்தியளிக்கும் விஷ­யமா?” என்று கேட்டு விட்டு அங்கு அமராமல் சென்று விட்டார்கள்.  எனவே பாத்திமா (ரலி) அவர்கள் அதனை விற்கச் செய்து அதனால் கிடைத்த பணத்திற்கு ஓர் அடிமையை விலைக்கு வாங்கி விடுதலை செய்து விட்டனர்.  பின்னர் இச்செய்தி அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்படவே அவர்கள்,“பாத்திமாவை (நரக) நெருப்பிலிருந்து காத்துக் கொண்ட அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினர்.

ஒரு நாள் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் தம் கைகளில் தங்க நகைகள் அணிந்திருப்பதைப் பார்த்தனர்.  “உமக்கு இதைவிட அதிக நன்மை தரத்தக்க விஷ­யம் ஒன்றைக் கூறுகிறேன்.  நீர் உம் கரத்திலுள்ள தங்கக் காப்பைக் கழற்றி விட வேண்டும்.  அதற்குப் பதிலாக இரண்டு வெள்ளிக் காப்புகள் செய்து, அவற்றின் மேல் குங்குமப் பூவின் நிறத்தை ஏற்றி அணிந்து கொள்ள வேண்டும்.  இதுதான் நல்ல வழியாகும்” என்று ஆயிஷா (ரலி)  அவர்களைப் பார்த்துக் கரங்களில் கிடந்த காப்புகளைக் கழற்றி விட்டனர். உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் சிறிது தங்கம் கலந்த மாலை ஒன்றை அணிந்திருந்தனர்.  அதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதை அறிந்ததும் அகற்றி விட்டனர்.

ஒரு பெண் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னிடம் இருக்கும் தங்க நகைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூறினாள்.  “அவை நெருப்பாலானவை” என்று அவர்கள் கூறினார்கள்.  அப்பொழுது  அவள்,தான் அணிந்திருந்த பொற்காப்புகள் இரண்டையும் கழற்றி எறிந்துவிட்டு, “நிச்சயமாக எந்தப் பெண்ணாவது தன் கணவருக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்ளாவிடின், அவள் தன் கணவனிடம் மதிப்பிழந்து விடுவாள்” என்று கூறினாள்.  அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,இவ்விதம் செய்வதற்கு உங்களுக்கு எது தடையாக இருக்கிறது?வெள்ளியால் காதணிகள் செய்து, பின்னர் குங்குமத்தாலோ அல்லது அபீராலோ மஞ்சள் சாயமிட்டுக் கொள்வது தானே” என்று கூறினார்கள்.

நாற்பெரும் கலீபாக்களுடன் சேர்ந்து மதிக்கத்தக்க கலீபா உமர் இப்னு அஸீஸ் (ரஹ்) அவர்கள், தம் மனைவி வைர நகைகள் அணிந்திருப்பதைப் பார்த்து, “உம் தந்தையாரிடமிருந்து நீர் பெற்று வந்திருக்கும் வைரத்தை அரசாங்கப் பொது நிதியில் சேர்த்து விடும்!  அந்த வைரம் உம்மிடம் இருக்கும் வரை, நீரும் நானும் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ முடியாது.  நான் வேண்டுமா? அந்த வைரம் வேண்டுமா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்து விடும்!” என்று கூறினர்.  அதைக் கேட்டு அவர்களின் மனைவி பாத்திமா,“அது விலை மதிக்க முடியா செல்வமாயிருக்கலாம்.  ஆனால் அது எனக்கு வாழ்வளிக்க முடியாது என்பதை நான் அறிவேன்.  விலை மதிக்க முடியாத வைரத்தை விட உங்களையே நான் நேசிக்கிறேன்” என்று கூறி அந்த வைரத்தைப் பொது நிதியில் சேர்த்தனர்.

ஒரு சமயம் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள், ஓர் இடத்தில் இருந்துகொண்டிருந்தார்கள்.  அங்கு வெள்ளியால் ஆன சுருமாப்புட்டி ஒன்று இருப்பதைக் கண்டதும் அவர்கள் அந்த இடத்தை விட்டே வெளியேறி விட்டார்கள்.

இவ்வித முன்மாதிரியும் இருக்கும் போது சில பெண்கள் தங்க நகைகள் மீது அளவிற்கதிகமான ஆவல் கொண்டுள்ளார்கள்.  அவர்கள் தங்களிடம் இருக்கும் தங்க நகைகள் பற்றித் திருப்தி அடைவதில்லை.  அவர்களிடம் வகை, வகையாக நகைகள் இருந்தாலும், மேலும் மேலும் வாங்க வேண்டுமென்றே விரும்புகிறார்கள்.  ஒரு பெண் புதிய மாதிரியில்  நகை ஒன்று அணிந்திருந்தால், அதே மாதிரியில் தங்களுக்கு ஒன்று வாங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு விடுகிறது அவர்களுக்கு.  அந்த நகையை வாங்கிய பிறகு தான் அவர்களின் கண்களில் தூக்கம் வருகிறது.

(தொடரும்)