ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Sep 2011   »  புதுமைகள் சொன்ன பூரணர்


புதுமைகள் சொன்ன பூரணர்

 ஆலிம் புலவர்

 

உலகில் மூத்த மொழி தமிழ் மொழி, அது காலாகாலமும் வளர்ச்சி பெற்றுக் கொண்டே வந்தது - வருகிறது.  புதிய புதிய சொல்லாக்கங்கள் அந்தந்தக் காலங்களில் புலவர்களால் - அறிஞர்களால் உருவாக்கம் பெற்றே வந்தன.  நாம் வாழும் அறிவியல் யுகத்திற்கேற்ப அறிவியல் கலைச் சொற்கள் ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டே இருக்கின்றன.  அதன் வழியாக ஒவ்வொரு துறையிலும் புதுமைச் சொற்கள் புகுந்து கெண்டே இருக்கின்றன.

தன்னையறியும் ஞானக் கலையான மெய்ஞ்ஞானத்துறையிலும் புதுச் சொற்கள் உலா வருவதை உணரலாம்.  பிராணாயாமத்தை - மூச்சுப் பயிற்சி என்றும் - யோகாவை - ஆழ்நிலை தியானம் என்றும் தன்னையறியும் கலையை - மன வளக்கலை எனவும் சான்றோர் உரைப்பதைக் கேட்கிறோம். அந்த வகையில், தமிழில் தன்னிகரில்லாப் புலமையும்,மெய்ஞ்ஞானத்தில் மேலுக்கு மேலான நிலையிலும் அமர்ந்திருக்கும் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் ஞானப் புது மொழிகளையும் - ஞானக் கருத்துருவாக்கங்களையும் சீர்தமிழில் செம்மையுற வடித்திருப்பதை எண்ணிப் பார்த்தால் இதயத்தில் இன்பம் சுரக்கிறது!


தெய்வக்காதலர்:

இறைவனை நோக்கி அடிவைத்து நடக்கும் நல்லோர்களை அடியார்கள் என தமிழுலகம் பேசும். முஸ்லிமகள் அவர்களை அவ்லியாக்கள் என அன்புடன் அழைப்பர், அவ்லியாக்கள் என்றால் மக்களுக்கு விளங்க வேண்டுமே! எனவே அவர்களை “இறை நேசர்கள்” என மரியாதையுடன் மொழிவர்.  இறைநேசர் என்பதே இன்றைய முஸ்லிம் தமிழ் உலகச் சொல் வழக்கு. “இறை நேசர்கள் வரலாறு” என நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இறைநேசர் என்பதற்கு மாற்றாக தமிழில் வேறு எதைச் சொல்லலாம்?  சிந்தித்தால் நமக்கு எதுவும் புலப்படவில்லை. ஆனால் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் அழகாகக் கூறுகிறார்கள்.  “தெய்வக் காதலர்” என ஒரு பாடலில்,

காதலறும் தெய்வக் காதலரை யென்றும் சேர்ந்திடுவோம் என்றும் சேர்ந்திடுவோம் என்பார்கள்.

அதாவது இறைவனின் மாறா அன்பு இதயத்தில் பொங்கக் காதலுறும் தெய்வக் காதலர்களை நாம் சேர்ந்து வாழ்வோம் என விளக்குவார்கள்.

எதுகையிலாதான்:


தற்போது இஸ்லாமிய உலகில் அதிகமாக புழங்கும் வார்த்தை ஷிர்க் - இணை என்பதாகும்.  ஒன்று போல் மற்றொன்று இருப்பதை -  இணை எனவும்.  நிகர் எனவும் சமம் எனவும் கூறுவர்.  இறைவனோ இணையற்றவன்.  அவனைப் போல மற்றொருவன் இல்லா நிகரற்றவன்.  இந்த இணையற்றவன் என்ற கருத்தை சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் “எதுகை இலாதான்” என புதுமைப்படுத்திப் பேசுவர்.  தமிழ் யாப்பில் அன் எனும் சொல்லுக்கு இன் - மண். முன் என்பதெல்லாம் எதுகையாக வரும்.  அதாவது இரண்டாவது எழுத்து ஒன்று போல ன்.....ன்......ன்.... என வருகிறது.  இதையே   எதுகை என்பர். “ன்” னுக்கு மற்றொரு “ன்”  இணையாக நிகராக முடிகிறது.  ஆனால் இறைவனுக்கு இது போல் மற்றொன்று இணையாக - துணையாக வரமுடியாது.  எனவே அவன் எதுகையில்லாதவனாகிறான்.  தமிழுலகில் இதுவரை யாரும் பயன்படுத்தாத சொற்பிரயோகத்தை “எதுகை இல்லாதவன்” எனும் வார்த்தை மூலம் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துவிட்டார்கள்.

கற்றிலாக் கலைக்கடல்:அகில மனைத்துக்கும் ஆசிரியராக வந்தவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். ஆனால் அவர்கள் உலக ஆசிரியர்களிடம் பாடம் படிக்காத உம்மீ நபி.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதும் ‘மை’ போன்றவர்கள். ‘மை’ எழுதப்படும் எல்லா மொழிகளையும் அறியும். அது ஒரு மொழிக்குச் சொந்தமில்லை. எல்லா மொழிக்கும் உயிரான ஏந்தலார் அறபு மொழி மட்டும் படிப்பது அவசியமில்லை. மொழிகளுக்கு மூலமான அவர்கள் அறபுக்கும் ஆதாரமாக அமைந்திருந்தார்கள். நாவால் மொழிந்து காதால் கேட்டுப் படிக்கும் கல்வியைக் கற்காது, எல்லாமே நாவாகிப் பேசும் ஏகத்திடமிருந்து இயற்கைக் கல்வியைப் படித்தார்கள். தாமே மாணவராகி தாமே ஆசிரியராகி அவர்கள் பயின்ற கல்வி - அறிவுகளுக்கெல்லாம் அன்னையாகிப் போனது. இத்தகைய மா அறிவைப் பெற்ற மஹ்மூது நபி (ஸல்) அவர்களை சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் எவ்விதம் போற்றிப் பாராட்டுகிறார்கள் கேளுங்கள்.

கற்றிலாக் கலைக்கடல் காட்டிவைத்த புதுமையில் - வெற்றி வேத மல்குரான் மேன்மைமிக்க தாகுமே!

ஏக பேட்டி:பேட்டி.  இந்த வார்த்தை இடம்பெறாத பத்திரிகைகளே இல்லை எனலாம்.  பேட்டி என்பதற்கு நேரடிப் பொருள் என்ன? பல ஆண்டுகளுக்கு  முன் இலாஹிய்யா தரீக்காவின் நாயகர் கீழக்கரை கல்வத் நாயகம் அவர்களின் “உலூமுத்தீன்” எனும் ஞானவிளக்க நூலைப் பார்வையிடும் பேறு பெற்றேன். அதில் அவர்கள் ஓரிடத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது இறைவனிடம் உரையாடிய நிகழ்வைக் குறிப்பிடும்போது பேட்டி எனும் “சரிஇருப்பு” என எழுதியிருந்தர்கள். அப்போது தான் எனக்கு விளங்கியது பேட்டி என்பதற்கான விளக்கம் சரி இருப்பு என்று. அதாவது, நிருபர்கள் அரசியல் தலைவர்களைப் பேட்டி எடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பேட்டி கொடுப்பவர் எத்துணை உயர்வான பதவியிலிருந்தாலும் சில ஆயிரங்களே ஊதியமாகப் பெறும் ஒரு பத்தரிகைப் பணியாளர் அந்த அரசியல் தலைவர்களோடு சரிக்கு சமானமாக அமர்ந்து கேள்வி கேட்பதைப் பார்க்கலாம்.


அப்போதுதான் விளங்கும் பேட்டிக்கு சரி இருப்பு என்பது சரியான பொருள்தான் என்று. சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் தங்களின் தாகிபிரபம் ஞானக்களஞ்சியத்தின் முன்னுரையில் “எண்ணத்திற் கிளர்ந்தவை ஏக பேட்டியாகி” எனக் குறிப்பிடுவார்கள்.  கர்த்தா வினாவிடுக்க சிருஷ்டி விடை தருவதாக அமைந்த இறை ரகசிய நூல் அது. பேட்டி காண்பதற்கு இரண்டு நபர்கள் தேவை. ஒருவர் வினா விடுக்க மற்றொருவர் விடைபகர்வது வழக்கு. ஆனால் ஒன்றாயிருக்கும் இறையில் ஒன்றித்தபின் - சங்கமித்தபின் நடக்கும் உரையாடல் - முனாஜாத் - ஒன்றே கேள்விகேட்க ஒன்றே பதிலுரைத்தல் ஏக பேட்டியாக மாறிப்போகிறது.  ஏக பேட்டி என்னும் சொல்லடுக்கு தமிழுக்கு  புதிய வரவுதானே!


(இன்ஷா அல்லாஹ் புதுமைகள் தொடர்ந்து பூக்கும்)