ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Sep 2011   »  ஞானத்துளிகள்


ஞானத்துளிகள்


தொகுத்தவர்: -

செல்வி G.R.J திவ்யா பிரபு  I.F.Sசென்னை

 


வெறும் ஏட்டுக்கல்வியால் மனிதனுக்கு ஆவதென்ன?பிரார்த்தனையும் ஆத்ம சாதனமும் அவனுடைய முன்னேற்றத்துக்கு அவசியமானவை.

நல்ல விவேகமும் இறை விசுவாசமும் படைத்திருக்கிறவனுக்கு ஏராளமான சாஸ்திர ஞானம் தேவையில்லை. சாஸ்திர ஞானம் ஒரு விதத்தில் இடைஞ்சலே. ஏகாந்தத்தில் இருந்து கொண்டு உள்ளன்போடு இறைவனிடம் பரிந்த பிரார்த்தனை பண்ணு.  உனக்குத் தேவையானதை யெல்லாம் இறைவன் தந்தருள்கிறான்.

தற்கொலை பண்ணிக் கொள்ளுதற்கு ஓர் ஊசி போதுமானது.  ஆனால் பிறரைக் கொல்லுதற்கு கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் தேவை. தனக்குத் தெய்வ நம்பிக்கை வருவதற்குச் சிறிதளவு விவேகமிருந்தால் போதுமானது. ஆனால் பிறரைத் திருப்திப்படுத்துவதற்கு சாஸ்திர ஞானம் ஏராளமாக வேண்டும்.

புதிதாக வந்த கடிதத்தை ஒருவன் ஜாக்ரதையாக வாங்கி வைத்திருக்கிறான். ஆனால் அதைப் படித்து அதில் அடங்கியிருக்கிற வி­யத்தை அறிந்து கொண்ட பிறகு அக்கடிதத்ததின் மீது கருத்தை அதிகம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. சாஸ்திர ஞானமும் அத்தகையதே.

வெறும் ஏட்டுக்கல்வி படைத்துள்ள பண்டிதர்கள் பொருத்தமற்ற எதையயதையோ பிதற்றுவண்டு. பண்டிதர் ஒருவர் ஒரு சபையில் உபந்யாசம் பண்ணினார். அப்பொழுது “இறைவனிடத்து ரசம் ஒன்றுமில்லை.  நமது பக்தியின் மூலம் ரசத்தைப் பொழிந்து அவரை இனிமை நிறைந்தவராக்க வேண்டும்” என்றார்.  உலகெங்குமுள்ள ரசம் அல்லது இனிமை எந்த இறைவனிடத்திருந்து ஓயாது வந்துகொண்டிருக்கிறதோ அந்த இறையிடத்து அது ஒன்றுமில்லையென்று இயம்ப இந்தப் பண்டிதர் துணிந்தார், என்னே!

தத்துவங்களைப் பற்றிய விசாரத்தை அளவுக்கு மிஞ்சிச் செய்வது சாதனத்துக்கு இடைஞ்சல்.

விவாதம் பண்ணுகிற மனப்பான்மை தமோ குணத்தின் செயல். ஆனால் பொருந்தாத பேச்சுப் பேசுகிற ஒருவனைப் பொருந்திய பேச்சால் மடக்கி அறிவுறுத்துதலில் தோ­ஷமில்லை. இத்தகைய செயலின் மூலம் சத்துவகுணம் தமோகுணத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.


 

மத வி­யத்தில் பிடிவாதம் உதவாது. யாருக்கு எத்தகைய கொள்கையும் சாதனமும் ஒத்துக் கொள்கிறதோ அதை அவன் கையாளட்டும். மற்றவர்கள் போக்கை அவன் தாக்க வேண்டிய அவசியமில்லை.

மனிதன் ஒருவன் சாகும் பொழுது அவனுடைய சூட்சும சரீரம் ஸ்தூல சரீரத்தை விட்டுப் பிரிந்து போகிறது என்று பலர் பகர்கின்றனர். அதைக் காட்டித் தர முடியுமா?

உண்மையான பக்தர்கள் இது போன்ற வீண் வி­யங்களைப் பற்றி எண்ணுவதே கிடையாது.

இரவில் தென்படுகிற மின்மினிப் பூச்சி உலகுக்கு தான் வெளிச்சம் கொடுப்பதாக எண்ணிக் கொள்கிறது. ஆனால் நட்சத்திரங்கள் தோன்றும் பொழுது மின்மினிப் பூச்சிகளின் கர்வம் அடங்கிப் போகிறது. நட்சத்திரங்களோ தாங்கள் தாம் உலகுக்கு வெளிச்சம் தருவதாக எண்ணி இறுமாப்புறுகின்றன. ஆனால் நள்ளிரவில் சந்திரோதயம் ஆனதும் நட்சத்திரங்கள் பின்னணிக்குப் போகின்றன. இவைகளின் கர்வமும் அடங்கிவிடுகிறது. உலகம் முழுதுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்து மகிழ்ந்திருக்கச் செய்வது தான் என்று திங்களுக்குக் தற்பெருமை வருகிறது.  ஆனால் சூரியோதயம் ஆகும்பொழுது சந்திரன் மங்கிப் பிறகு மறைந்து போகிறது. செல்வத்தைக் குறித்தோ வேறு சம்பத்தைக் குறித்தோ செருக்குற வேண்டாம். உன்னிலும் மிக்கார் உலகில் பலர் உளர்.

மதவெறி பிடித்திருக்கிறவர்கள் அவரவர் மதத்தின் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும் என்று விவாதிக்கின்றனர். இந்த மனப்பான்மை சாதகன் ஒருவனுக்குப் பொருந்தாது. பலதரப்பட்ட மார்க்கங்களுள் எந்த மார்க்கத்தின் மூலமாகவும் இறைவனை அடைய முடியும்.

பகவத் கீதையையோ, பாகவதத்தையோ அல்லது வேறு ஏதாவது வேதாந்த சாஸ்திரத்தையோ சிறிது கற்கின்றான். தனக்கு எல்லாம் விளங்கி விட்டது என எண்ணிக் கொள்கிறான்.

இறைவனுடைய சிருஷ்டியில் அனைத்துக்கும் இடமுண்டு.  ஆதலால் உன்னுடைய கொள்கைதான் சரியானது, மற்றவர்களுடைய கொள்கைகள் தப்பானவை என்னும் எண்ணம் உன் உள்ளத்தினுள் நுழையாதிருக்கும்படி பார்த்துக் கொள்வாயாக.

மக்களுக்கு வீண் கர்வம் மிக எளிதில் வருகிறது. தக்ஷிணேசுவரத்தில் இருந்த தோட்டியின் மனைவி ஒருத்திக்குத் திடீரென்று தற்பெருமை வந்துவிட்டது. அவ்வழியில் சென்றவர்களை அவள் அதட்டிப் பேசினாள். அத்தனைக்கும் காரணம் அவளுக்குப் புதிதாக இரண்டொரு நகை கிடைத்ததுதான். தோட்டித் தொழில் பண்ணுகிறவளுக்கு அவ்வளவு கர்வம் என்றால் இனி மற்றவர்களைப் பற்றி கேட்பானேன்? வீண்கர்வம் மிகப்பொல்லாதது.

- தொடரும் -