ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Sep 2011   »  வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..​.


தொடர்....                                                                                                                             தொடர் எண்-16

வஹாபிகள் சஹாபிய வேடங்களில்..​.

 

    

“காபிர்கள் விக்கிரகங்களை ஆண்டவனுக்கு இணையாக ஆக்கிதங்களது தேவைகளை அவைகளே சுயமாக நிறைவேற்றுகின்றன என்று கருதி அவற்றின்பால் உதவி தேடுகிறார்கள். முஸ்லிம்களோ அன்பியா, அவுலியாக்களை ஆண்டவனுக்கு இணையாக ஆக்கிவைக்காமல் ஆண்டவனது அஸ்மாஉ ஸிபாத்து வெளியாகும் ‘மள்ஹர்’ ஆகக் கருதி அவர்களிடம் உதவி தேடுகிறார்கள்.


விக்கிரகங்களைக் கூப்பிட்ட வர்கள் நஷ்டவாளிகளாயினர். அன்பியா. அவுலியாக்களைக் கூப்பிட்டவர்கள் ஜெயம் பெற்றவர்களாயினர்” என்று குத்வத்துல் ஸாலிக்கீன், மெளலானா, அல்ஹாஜ்ஸெய்யிது ஷாஹ் உமர் ஸாஹிபு காதிரீ ஹைதராபாதீ (ரஹ்) அவர்கள் தப்ஸீர் கஷ்புல் கலூபில்’ வரைந்துள்ளார்கள்.


ஷாபியீ மதுஹபின் இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸுஷ் ஷாபியீ (ரஹ்) அவர்கள், ஸையிதுனா இமாம் மூஸல் காளிம் (ரலி) அவர்களுடைய கபுரு ­ஷரீபுக்குச் சென்று ஜியாரத்துச் செய்யும் போது, அந்தச் சங்கையான கபுரை நோக்கி, “நிச்சயமாக இது பிரார்த்தனைகளை ஏற்று ஒப்புக் கொள்ளப்படும் இடம் என்று அனுபவத்தில் பரீட்சிக்கப்பட்ட ஒளடதமாகும்” என்று உரைத்தார்கள்.


இவ்விபரத்தை அல்லாமா ஷெய்கு அப்துல் - ஹக் திஹ்லவீ (ரஹ்) அவர்கள் ‘அஷி ஃஅத்துல் -லமஆத்-தர்ஜுமதுல் மிஷ்காத்’ 1 -ஆவது பாகம், 633 - ஆவது பக்கத்திலும், இமாம் இபுனு ஜெளஸி (ரஹ்) அவர்கள் ‘ஸப்வத்துஸ் ஸப்வா’ விலும் ஷெய்கு முஹம்மது மள்ஹர் நஷக்­பந்தீ திஹ்லவி (ரஹ்) அவர்கள் ‘துர்ருல் முனள்ளம்’ம் விலும் கூறுவதாக முப்தீ அல்லாமா மஹ்மூது சாஹிபு மத்றாஸி அவர்கள் ‘ஸில்கல் முஅள்ளம்,’ 38 - ஆவது பக்கத்தில் எடுத்துரைத்துள்ளார்கள்.


“இமாமுல் அஃளம் ஷெஸய்யதுனா அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய கபுரு ­ஷரீபு திட்டமாக நமது முறைப்பாட்டைக் கேட்டு தேவைகளை நிறைவேற்றித் தர வல்லதாயிருக்கின்றது” என்பதாக கல்லுடைந்தாலும் சொல்லுடையாத அல்லாமா இமாம் இபுனு ஹஜர்மக்கீ (ரஹ்) அவர்கள் ‘கைராத்துல் ஹிஸானில்’ கூறுவதாக அல்லாமா முப்த்தீ  மஹ்மூது ஸாஹிபு மதறாஸீ அவர்கள் பத்ஹுல் - ஹக்கு 78 ஆவது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.


“இமாம் ஷெ­ய்கு மஃரூபுல் கர்கீ (ரஹ்) அவர்கள் பரகத்துச் செய்யப்பட்ட மனிதர்களுள் மேலானவர்கள். அவர்களது கபரு ஷ­ரீபு நிச்சயமாகப் பரீட்சித்து சோதனை செய்யப்பட்ட அவிழ்தமாகும். எவரொருவர்,அந்தக் கபுரு ­ஷரீபிலிருந்து (தமது துன்பம், துயர் விலக வேண்டுமென்ற எண்ணத்துடன்) யாதொரு வஸ்துவை எடுப்பாரேல் அவரது பலாய் முஸீபத்துக்கள் நிவர்த்தி யாக்கப்படும்” என்பதாக, ஷைகுல் இஸ்லாம். ஜக்கரியல் அன்ஸாரீ (ரஹ்) அவர்கள் ‘­ரஹு ரிஸாலத்தில் - குஷைரிய்யாவில்’ குறிப்பிட்டுள்ளதாக ஆரிபு பில்லாஹ், ஷாஹ் முஹிய்யுத்தீன் ஸாஹிப்னவேலூரீ (ரஹ்) அவர்கள் பஸ்லுல்-கித்தாப் 115 - ஆவது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.


“ஹள்ரத் ஷெ­ய்கு மஃரூபுல் கர்கீ (ரஹ்) அவர்களது வபாத்து ஹிஜ்ரி 201. அவர்களது அடக்கத்தலம் பகுதாதில் இருக்கிறது. அவர்கள் வேண்டுகோளுக்குப் பதில் அளிக்கக் கூடியவர்கள். அவர்களது கபுரு ஷ­ரீபைக் கொண்டு பகுதாதுவாசிகள் பிணி நோய் நீங்க ஷிபாவைத் தேடிப்பெறுகின்றனர். அந்தக் கபுரு ஷ­ரீபு அனுபவப் பூர்வமாகப் பரீட்சிக்கப்பட்ட சஞ்சீவியாகும் என்று இமாம் அபுல்காஸிம் குஷைரீ (ரஹ்),ஷைகுல் இஸ்லாம் ஜகரிய்யல் அன்ஸாரீ (ரஹ்) இருவர்களும் தங்கள் ரிஸாலாக்களில் வரைந்திருப்பதாக அல்லாமா முப்த்தி மஹ்மூது ஸாஹிபு மதறாஸீ அவர்கள் “பத்ஹுல்ஹக்கு 80 - ஆவது பக்கத்தில் எடுத்து அறிவிக்கின்றார்கள்.


இவ்வாறாக இமாம் யாபியீ யமனி (ரஹ்) அவர்களும் சொல்வதாக,அல்லாமா ஷைகு யூசுபு நபஹானீ (ரஹ்) அவர்களும் ‘ஜாமிஉல் கறாமாத்தில்-அவுலியா’ 2 -ஆவது பாகம் 267 - ஆவது பக்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.


குத்புல் அக்பர், ஷைகு அபுல்ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலீ (ரலி) அவர்களது 5 - ஆவது கலீபா, அல்குத்பு, ஸெய்யிது ­ஷம்சுத்தீன் ஹனபிய்யில் - ஹமவிய்யிஷ் - ஷாதுலீ (ரஹ்) அவர்கள் தங்களது வபாத்தின் வேளையில், ”தேவையுள்ள எவரும் என்னுடைய கபுருக்கு வந்து அவரது நாட்டங்களைக் கேட்பரேல் அவற்றை நான் நிறைவேற்றித் தருவேன். ஏனெனில் எனக்கும் (தேவையைக் கோரும்) அவருக்கும் இடையில் ஒரு முழம் மண்ணே தூரம். தன்னைச் சார்ந்தவர்களை ஒரு முழம் மண் தடுக்குமேயானால் அவன் ஆண் பிள்ளையன்று” என்று சொன்னதாக அல்குத்பு இமாம் அப்துல் வஹ்ஹாபுஷ் ­ஷஃரானீ (ரஹ்)  அவர்கள் ‘தபகாத்துல்-குப்றா’ 2 - ஆவது பாகம்8 - ஆவது பக்கத்தில் வரைந்துள்ளார்கள்.


அல்குத்பு, ஷெ­ய்கு முஹம்மது இபுனு அஹ்மது பர்கல் (ரலி) அவர்கள், “நான் கபுரிலிருந்து வெளிவந்து உலாவக்கூடிய தஸர்ருபாத்தெனும் சக்தியை உடையவன். எவருக்கேனும் ஹாஜத்து நாட்ட தேட்டம், இருக்குமானால் என் முகத்திற்கெதிரே வந்து, என்னிடத்தில் தேவைகளைக் கேட்பாராயின், நான் நிறைவேற்றித் தருவேன்” எனக் கூறியிருக்கிறார்கள். என்பதாக இமாம் ­ஷஃறானீ (ரலி) அவர்கள், தபக்காத்து,2 - ஆவது பாகம், 93 - ஆவது பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.​


எவரொருவருக்கு தமது தேவைகள், நாட்ட தேட்டங்கள், நிறைவேறவேண்டுமென்றிருக்குமானால், அவர், ஸூரத்துல் பாத்திஹா, ஆயத்துல் குர்ஸி, அலம் நஷ்ரஹ் ஸூரா இவைகளை ஓதி, அவற்றின் தவாபை குத்புல் அக்தாபு.  ஹள்ரத் அஷ்ஷைகு அப்துல் காதிரு ஜீலானி (ரலி) அவர்களுக்கு அளிக்க வேண்டும். பிறகு பகுதாது திசையை முன்னோக்கி பதினொரு எட்டெடுத்து வைத்து, ‘யா ஸெய்யிதீ அப்துல் காதிர்’ என்று பத்து விடுத்தம் அழைத்து வேண்டி, தமது நாட்ட தேட்டங்களைக் கேட்க வேண்டும்” என்தாக இமாம் ஷெய்கு ஜலாலுத்தீன் ஸுயூத்தி (ரஹ்) அவர்கள் கித்தாபுர் ரஹ்மா - பித் திப்பி - வல் ஹிக்மா என்ற நூலின் 284 - ஆவது பக்கத்தில் உரைத்துள்ளார்கள்.​


மேலே கண்ட வி­யங்களை நாம் இங்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம். இஸ்லாத்தின் சட்ட திட்டங்களைத் தொகுத்துக் கொடுத்து ‘மதுஹ’ புவை ஏற்படுத்தித் தந்த இமாம் முஹம்மது இபுனு இத்ரீஸ் ஷாபியீ (ரஹ்), சட்ட நிபுணர்களாகிய இமாம் இபுனு ஹஜர் மக்கீ (ரஹ்). இமாம் குஷைரீ (ரஹ்). இமாம் ஜக்கரிய்யா அன்ஸாரீ (ரஹ்) ஆகியவர்களும் அல்குத்பு ­ஷம்சுத்ஷ்தீன் ஹமவீ மிஸ் ரீ (ரலி), அல்குத்பு முஹம்மது இபுனு அஹ்மது பர்கல் (ரலி) ஆகிய குத்புமார்களும் கபுருகளைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறியுள்ளார்களென்றால் நோய் நீங்கவும் வறுமை விலகவும் வியாபாரம் விருத்தியாகவும் நாடு செழிக்கவும்  நிக்காஹ் முதலான நல்ல காரியங்கள் மங்களமாக நடைபெறவும் இன்னும் இவை போன்று நேர்மையான நாட்டங்களையும் தேவைகளையும் தாராளமாக வஸீலா மூலம் கேட்டுப் பெறலாம். ஏன் வஸீலாவாகக் கேட்டுப் பெறக்கூடாது என்பதே.

(தொடரும்)