ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Oct 2012 »  நல்ல பெண்மணி

மகளிர் பக்கம்                                                                                              நெடுந்தொடர் ....

 

 

நல்ல பெண்மணி

                          ( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு -  எம்.ஆர். எம். முகம்மது  முஸ்தபா)

 

பெற்றோர் பொறுப்பு

 

        குழந்தைகளுக்குத் தம் தந்தையின் பெயரையும், தாயின் பெயரையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். சில குழந்தைகள் வழி தவறி எங்காவது போய் விடுகின்றனர். அவர்களை எவராவது கண்டு, அவர்களின் பெற்றோர் பெயர்களைக் கேட்டால், அவர்களால் சரியாகப் பதில் சொல்ல  இயலுவதில்லை. அதனால் அந்தக் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்களிடம் சேர்ப்பது பெரும் சிரமமாகி விடுகிறது.


                குழந்தைகளுக்குக் கதைகள் கேட்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்குக் கூறப்படும் கதைகளில் சுவையும் இருக்க வேண்டும், கருத்தும் இருக்க வேண்டும். முந்தைய நபிமார்களின் வரலாறுகளில் கதையும் இருக்கிறது; கருத்தும் இருக்கிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வரலாறு சுவையில் கதையையும் மிஞ்சுவதாகும். இவற்றைக் குழந்தைகளுக்குக் கூறுவது நல்லதாகும்.


                குழந்தைகளுக்கு, அவர்கள் பிறந்த நாட்டைப் பற்றியும், அதில் வாழ்ந்த நல்லவர்களைப் பற்றியும் கூற வேண்டும். அந்த நல்லவர்கள் நாட்டிற்குச் செய்த

நன்மைகளைப் பற்றியும், நாட்டிற்காகச் செய்த தியாகங்களைப் பற்றியும் சொல்லவேண்டும்.


                குழந்தைகள் நான்கு வயதை அடைந்து விட்டால் அவர்களைக் குர்ஆன் ஓதிக் கொடுக்கப்படும் பள்ளிக்கு அனுப்பவேண்டும். ஓதுவதில் குழந்தைகளுக்கு ஓர் இன்பம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ஓதவைப்பதை ஒரு சிறு விழாவாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது. அது தான் பிஸ்மில்லாஹ் விழாஎன்று  குறிப்பிடப்படுகிறது. அதனை முஹர்ரம் பத்தாம் நாள் அன்று வைத்துக் கொள்வது நல்லது.அந்தப் பாக்கியம் மிகுந்த நாளில் ஓதத் தொடங்குபவர் சிறந்த முறையில் கல்வி கற்று மேதைகளாக விளங்குவர் என்று கூறப்படுகிறது.


                குர்ஆனை ஓதி மறந்த வரும்,ஓதக் கற்காதவரும் இறுதிநாளில் குருடர்களாய் எழுப்பப்படுவர்என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே  உங்களின் குழந்தைகளை முதலில் குர்ஆன் ஓதிக் கொடுக்கப்படும் பள்ளிக்கே அனுப்பிவையுங்கள் ! சில பெற்றோர்கள் பிறகு ஓதிக் கொள்ளட்டும்என்று தம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு  அனுப்பி வைத்து விடுகின்றனர். பள்ளிக்கூடம் சென்ற பின் பிள்ளைகள் குர்ஆன் பள்ளிகள் பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை. இதனால் அவர்கள் தம் ஆயுள் முழுதும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்களாகவே இருந்து விடுகின்றனர். இது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம் என்று எண்ணிப் பாருங்கள் ! இந்தப் பிழையை நீங்கள் செய்யாதீர்கள் !

                

            குர்ஆன் பள்ளியில் சில குழந்தைகள் ஆண்டுக் கணக்கில் உட்கார்ந்து கொண்டிருப்பர். அந்தக் காலத்தில் பின்னர் எழுத்துக்களில் குர்ஆன் பிரதிகள் வெளிவந்தன. அதனால் அவற்றை ஓதிக் கற்பது கடினமாக  இருந்தது. இப்பொழுது மிகவும் தெளிவான எழுத்துக்களில் குர்ஆன் பிரதிகள் வெளிவந்துவிட்டன. இப்பொழுது குர்ஆனை ஓதிக் கொடுப்பதிலும் சில இலகு முறைகள் வந்துவிட்டன. எனவே, உங்கள் குழந்தைகள் விரைவில் குர்ஆனை ஓதி முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்!


                குழந்தைகள், பள்ளியில் ஓதிக்கொடுத்ததை வீட்டில் ஓதவும் தூண்டுங்கள்! முடியுமானால் நீங்களே குழந்தைகளின் பக்கத்தில் அமர்ந்திருந்து ஓதிக்கொடுங்கள் அதன்பின் அவர்களை ஓதச் சொல்லிக் கேளுங்கள்! தவறு செய்தால் திருத்துங்கள்! 


                அதற்காக, குழந்தைகளை ஓது!  ஓது!!என்று சதா நச்சரித்துக் கொண்டு இராதீர்கள்! இப்படிச்செய்வது நன்மைக்குப் பதிலாகத் தீமை புரிந்து விடும். குழந்தைகள், ஓதுவதை விரும்புவதற்குப் பதிலாக, வெறுக்கத் தொடங்கி விடுவர்.