ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai » 2012 » Oct 2012 »  ஞானத் துளிகள்

ஞானத் துளிகள்


                                                                          தொகுத்தவர்: - 

                                  திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை

 

    ரமஹம்ஸன் ஒருவனிடம் தென்படுகிற அகங்காரம் பொன் வாளுக்கு ஒப்பானது. பொன்னால் செய்த வாளோ, வாள் போன்று காட்சி கொடுக்கிறது. ஆனால் வெட்டுவதற்கு அது உதவாது.


 •       ஞானி ஒருவன் பெயரளவில் அகங்காரத்தை வைத்திருக்கிறான். வெந்து போன கயிறு போன்றது அவனுடைய அகங்காரம். வெந்த கயிறு, கயிறு போன்று தென்பட்டாலும் கட்டுதற்கு உதவாது. ஊதினால் தூசியாகப் பறந்து போய்விடும்.அங்ஙனம் அகங்காரம் சிறிதேனும் இல்லாத ஞானி அகங்காரம் படைத்திருப்பவன் போன்று தென்படுகிறான்.

               

 •      பிரம்ம விஞ்ஞானி ஒருவன் பரம் பொருளிடத்து பக்தி பண்ணுவானேன் ?
 •      அப்படிச் செய்வதால் அந்தப் பிரம்ம விஞ்ஞானிக்கு பக்தி அகங்காரம் சிறிது எஞ்சி நிற்கிறது. சமாதி நிலையில் அது ஒழிந்து பட்டுப் போகிறது. பக்தி பண்ணும்பொழுது தோற்றத்துக்கு வருகிறது. அதை வருவித்துக் கொள்ளுதற் பொருட்டு ஞானி பக்தி பண்ணுகிறான். சாதாரண மனிதனுக்கோ அகங்காரம் ஒருபொழுதும் அழிந்து பட்டுப் போவதில்லை.அரசமரத்தை வெட்டித்  தள்ளலாம். ஆனால் திரும்பவும் அது தளிர்த்து வருகிறது. உலகத்தவர் அகங்காரம்  அத்தகையது. 
 •        அகங்காரம் அடியோடு அகன்று போவதில்லை. சமாதி நிலையினின்று கீழே வருகிறவன் தான் பிரம்மம்தான் ஜகத்தாகவும் ஜீவர்களாகவும் அகங்காரமாகவும் ஆயிருக்கிறது என்பதைக் காண்கிறாள். இதற்குப் பிரம்ம விக்ஞானம் என்று பெயர்.        
 •       ஆட்டின் தலையை வெட்டின பிறகும் அது சிறிதுநேரம் தன் கால்களை உதறிக் கொண்டிருக்கிறது. கனவில் ஒருவனுக்குப் பயம் வருகிறது. உடனே விழித்தெழுந்திருக்கிறான். கனவு போன பிறகும் அவனுடைய ஹிருதயம் அச்சத்தால் வேகமாக அடித்துக் கொண்டிருக்கிறது. அகங்காரத்தை இவைகளோடு ஒப்பிடலாம்.
 •         தலைவன் தொண்டன் என்னும் இணக்கத்தைத் தெய்வத்தோடு வைப்பது மிக நன்று. போகமாட்டேன் என்று இந்த அகங்காரமானது பிடிவாதம் செய்வதால் அது தொண்டனாக இருந்து தொலையட்டும்.
 •         ஞானம் அடைந்தான பிறகும் எப்படியோ அகங்காரம் தோன்ற ஆரம்பிக்கிறது. புலியைப் பற்றிய கனவு ஒன்று தோன்றுகிறது. திடீரென்று பயந்து மனிதன் எழுந்து கொள்கிறான். அதன் பிறகும் படபடவென்று ஹிருதயம் துடிக்கிறது. அகங்காரம் அத்தகையது.
 •        பிரம்ம ஞானத்தை சமாதியில் அடையப் பெற்றவன் பிறகு ஒன்றும் பேசுவதில்லையா ?
 •        பிரம்ம ஞானத்துக்குப் பிறகு ஒருவன் மெளனியாய் இருக்கிறான். அந்த ஞானம் வருவதற்கு முன்பு பிரம்மத்தைப் பற்றி அவன் விசாரித்துப் பார்க்கிறான். வெண்ணெயை உருக்கினால் அது சொரசொரவென்று சத்தமிடுகிறது. அதிலுள்ள நீரெல்லாம் ஆவியாக அகற்றப்படும் வரையில் அது அப்படிச் சத்தமிடுகிறது. நீரெல்லாம் நீங்கிப்போன நெய்யினின்று சத்தம் ஒன்றும் வருவதில்லை.ஆனால் அதனுள் பச்சைமாவைப் பொரிக்கப் போடும் பொழுது அது திரும்பவும் சத்தமிடுகிறது.மாவு பொரிந்தான பிறகு சத்தமும் நின்று போகிறது. அதே விதத்தில் சமாதியில் பிரம்மத்தை அறிந்தவன் அதை மற்றவர்களுக்குப் புகட்டுதல் பொருட்டு வியவகாரிக நிலைக்குக் கீழே இறங்கி வருகிறான். பிரம்மம் எத்தகையது என்பதைப் பற்றி அவன் அப்பொழுது பகர்கிறான்.
 •         தென்னைமட்டை விழுந்த பிறகு அது இருந்த இடத்தில் வடு ஒன்று எஞ்சியிருக்கிறது. அதே விதத்தில் ஒருவன் ஞானம் அடைந்த பிறகு அகங்காரத்தின் வெறும் தோற்றம் மட்டும் அவனிடத்து எஞ்சியிருக்கிறது.காமக் குரோதங்கள் ஞானியினிடத்து இருப்பனபோன்று  தென்படுகின்றன. உண்மையில் அவைகளுக்கு ஞானியின் உள்ளத்தில் இடமில்லை.
 •         ஞானம் அமைந்தான பிறகு ஒருவன் நான் கடவுளின் தொண்டன் என்ற அகங்காரத்தை அல்லது நான் கடவுளுடைய பக்தன் என்ற அகங்காரத்தை வேண்டுமென்றே வைத்திருப்பதுண்டு.
 •         இனி பக்தன் ஒருவன்  இத்தகைய அகங்காரத்தை வளர்ப்பதன் மூலம் இறையறிவை அடைகிறான்.
 •         மனிதன் ஏன் கடவுளைக் காண்பதில்லை ?
 •         அகங்காரம் என்னும் மாயை கடவுள் காட்சியை மறைத்து வைத்திருக்கிறது. இந்த அகங்காரம் அகன்று போகுமாகில் இறை க் காட்சி எளிதில் அகங்காரம் அகலப் பெற்றவன் ஜீவன் முக்தனாகிறான்.
 •         ஆற்றில் போகிற படகு சரிந்து சென்ற பிறகு ஆற்றுக்குத் திரும்பி வருவிதில்லை என்ற பழமொழி ஒன்று உண்டு.அது கடலிலேயே வேறு ஏதோ ஒரு நாட்டுக்குப் போய்ச் சேர்கிறது. நான் என்னும் அகங்காரம் இருக்கும் வரையில் அது ஆற்று  நீர்ப் பயணத்துக்கு ஒப்பானது. அல்லல்கள் பல ஆங்கு உண்டு. ஞான விசாரங்களை ஆயிரக்கணக்கில் சாதகன் ஒருவன் செய்யலாம். ஆயினும் நான் என்னும் அகங்காரம் அழிவதில்லை. அது அழிந்துபோன பின்பே நிறைஞானம் வாய்க்கிறது.
 •         பரப்பிரம்மம் என்னும் எல்லைகாணாக் கடலினுள் அந்த ஜீவன் என்னும் படகு போய் மறைகிறது.  ஆனால் அகங்காரம் அழியாதிருக்கும் வரையில்  நான் கடவுள் பக்தன் என்கின்ற அகங்காரமாக அதை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.அப்படிச் செய்வதால் கேடு ஒன்றும் வாராது. நீரின்மீது கோடு கிழித்தால் உடனுக்குடனே அக்கோடு மறைந்து போகிறது. பக்தனுடைய அகங்காரமும் ஒரு குழந்தையினுடைய அகங்காரமும் நீர்மீது கிழித்த கோட்டுக்கு  ஒப்பானவைகள். அவைகள் நிலைத்திருப்பதில்லை.நீர்மீது போடப்பட்டுள்ள ஒரு குச்சிக்கு நிகரானது அகங்காரம். அது நீரை இரண்டாகப் பிளந்து வைத்திருப்பது போன்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் நீர் பிளவு படவில்லை. அகங்காரத்தால் ஜீவாத்மன் பராமாத்மனிடமிருந்து  பிரித்து வைக்கப்பட்டிருப்பவன் போன்று தோன்றும்;  ஆனால் பிரிவதில்லை!