ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Oct 2011   »  சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்..


தொடர்.......

சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்..

அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:  கிப்லா ஹள்ரத், திருச்சி.


சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ அவர்களிடம் வினவப்பட்ட வினோதமான வினாக்களுக்கு சங்கைமிகு இமாம் அவர்கள் அளித்த வியப்பான பதில்கள் :

      வினா :  மனிதர் ஒருவர் தன் வீட்டில் ஓர் ஆட்டை அறுத்துக் கொடுத்து விட்டு, பின்பு வெளியில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பினார்.  அப்போது தனது மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்து, ‘எனக்கு அந்த ஆட்டின் இறைச்சி ஹராமாகி விட்டது.  நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார்.  அதற்கு மனைவியும் மக்களும், “எங்களுக்கும் அந்த ஆட்டின் இறைச்சி ஹராமாகி விட்டது” என்றார்கள்.  இதற்கு என்ன விளக்கம்? 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் : அந்த மனிதர் வீட்டிலிருந்த போது, முஷ்ரிக்காக இருந்தார் (இணைவைப்பவராக இருந்தார்).  அந்நிலையில் அந்த ஆட்டை அறுத்திருந்தார்.  வீட்டை விட்டு வெளியே சென்ற போது,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் விருப்பத்தின் படி, புனித இஸ்லாத்தைத் தழுவி விட்டார். எனவே, அந்த ஆட்டின் இறைச்சி,அவருக்கு ஹராமாகி விட்டது.  ஏனெனில், ஒரு முஷ்ரிக்கானவர் (இணைவைப்பவர்), கலிமா சொல்லாமல் ஆட்டை அறுத்ததால்அந்தக் கறி முஸ்லிமானவர் சாப்பிட ஹராமாகி விட்டது.  

வெளியே சென்ற கணவர் புனித இஸ்லாத்தில் இணைந்து விட்டார் என்னும் செய்தி தெரிந்ததும், மனைவியும் புனித இஸ்லாத்தில் இணைந்து விட்டார்.  அதைத் தொடர்ந்து, அவர்களின் பிள்ளைகளும் புனித இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள்.  எனவே, ஒரு முஷ்ரிக் (இணைவைப்பவர்) அறுத்த ஆட்டின் இறைச்சி, அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஹராமாகி விட்டது.

வினா : ஓர் அடிமை ஓடிப் போய் விட்டார்.  அவரது உரிமையாளர், “நான் அவனைக் காணாமல் (பார்க்காமல்) சாப்பிட்டால், அவன் உரிமை பெற்றவனாவான்” என்று கூறினார்.  அந்த அடிமையின் உரிமையாளர், உண்ணவும் வேண்டும்.  அந்த அடிமை உரிமை பெறாதிருக்கவும் வேண்டும்.  அதற்கு என்ன செய்வது? 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் : அந்த அடிமையின் உரிமையாளர் தனது மக்களில் ஒருவருக்கு அந்த அடிமையை ஹிபத்தாக (அன்பளிப்பாக) கொடுத்து விட வேண்டும். இப்போது அந்த அடிமை அவருக்குச் சொந்தமல்ல.  எனவே,அவர் “தாராளமாக”ச் சாப்பிடலாம்.  பின்னர், தனது விருப்பத்தின் படி, அன்பளிப்பாக வழங்கப்பட்ட அடிமையை மீட்டிக் கொள்ளலாம்.

வினா :முஸ்லிமான - ஆகிலான (புத்தியுள்ளவர்) அடிமை இல்லாத, சுதந்திரமான இரண்டு நபர்கள், கள்ளைக் குடித்தார்கள்.  அவர்களில் ஒருவனுக்கு, ஹத்து (சவுக்கடி) கொடுப்பது கடமையாகி விட்டது.  மற்றொருவருக்கு ஹத்து (சவுக்கடி) கொடுப்பது, கடமையாகவில்லை.  இது எப்படி? 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் :  அவ்விருவரில் ஒருவர் பாலிகானவர். அவருக்கு கள்ளைக் குடித்தால்,ஹத்து (சவுக்கடி) கடமையாகி விட்டது.  மற்றொருவர், வயதுக்கு வராதவர் அதனால் அவருக்கு ஹத்து (சவுக்கடி) கடமை இல்லை.

வினா : ஜைது என்பவர், தன் மகனைப் பார்த்து, “நான் இறந்து போனால், என்னுடைய ஆஸ்தியில் (சொத்தில்) உனக்கு இரண்டாயிரம் கிடைக்கும்.  நீ எனக்கு முறைமையில் சித்தப்பன் மகனாய் இருப்பாயானால், என் சொத்தில் உனக்கு பதினாயிரம் கிடைக்கும்” என்றார்.  இதற்கு என்ன விளக்கம்? 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் : ஜைதுக்கு முப்பதாயிரம் பெறுமானமுள்ள சொத்து இருந்திருக்க வேண்டும்.  அவருக்கு 28 பெண் பிள்ளைகளும் ஓர் ஆண் மகனும் இருந்திருக்க வேண்டும்.  இருபத்தெட்டு பெண் பிள்ளைகளுக்கு, தலா 1000 வீதம் அந்த முப்பதாயிரத்திலிருந்து கொடுக்க வேண்டும். மீதமுள்ள இரண்டாயிரத்தை ஒரே ஆண் மகனுக்குக் கொடுத்து விட வேண்டும்.

ஒரு வேளை ஜைதிற்கு ஆண்பிள்ளை இல்லாமலிருந்து.  அவருக்கு சித்தப்பாவுடைய மகன் ஒருவர் இருந்திருந்தால்,அந்தப் பெண் பிள்ளைகளுக்கு மூன்றில் இரு பங்கிற்கு இருபதினாயிரமும், மீதிப் பத்தாயிரம் சித்தப்பாவுடைய மகனுக்கும் கிடைக்கும்.

​ வினா : ஒருவர், ஒரு கலயத்தில் தண்ணீரை எடுத்து வாயில் வைத்துக் குடித்தார்.  கொஞ்சம் குடித்த போது, ஹலாலாக இருந்த தண்ணீர்.  திடீரென ஹராமாகி விட்டது.  அது எப்படி? 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் : அவர் தண்ணீரைக் கொஞ்சம் குடித்த பின்னர், அவரது சில்லு மூக்குடைந்து, இரத்தம் தண்ணீரில் கலந்து விட்டது.  எனவே, குடிக்கும் நீர் நஜீஸாகி விட்டது

​ வினா : அம்ரு என்பவர், தனது மனைவியிடம் ஒரு பையில் ஒரு பொருளை வைத்து நிரப்பிக் கொடுத்து, “இந்தப் பையைத் திறந்தாலும் கிழிந்தாலும் பையின் முத்திரையை உடைத்தாலும் அந்தப் பையிலுள்ளதை வெளியில் எடுத்தாலும் பையை வெறும் பையாக்கினாலும், நீ தலாக்காகி (மணமுறிவு) விடுவாய்” என்று கூறினார்.  இதற்கு என்ன தீர்வு? 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் : அந்தப் பையில் உப்பு அல்லது சீனி இருந்திருக்க வேண்டும். அதனை சூடான தண்ணீரில் முக்கினால், அதெல்லாம் உருகிப் போய்விடும்.  அந்தப் பையை அவன் வைத்த முத்திரைப்படியே அப்பெண் கணவரிடம் திருப்பிக் கொடுத்து விடலாம்.  ஆதலால், அப்பெண்ணுக்கு தலாக் ஏற்படாது.

​வினா : ஜினா என்னும் கொடிய பாபத்தைச் செய்த  ஐந்து நபர்களுக்கு, ஐந்து விதமான தண்டனைகள் கொடுக்கப்பட்டது. முதலாவது நபருக்கு அவர் மீது கல்லெறியும்படி தீர்ப்பளிக்கப் பட்டது.  மூன்றாவது நபருக்கு நூறு  சவுக்கடி கொடுக்க உத்தரவிடப்பட்டது.  நான்காவது நபருக்கு.  50 சவுக்கடி தர உத்தரவிடப்பட்டது.  ஐந்தாவது நபருக்கு மட்டும் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.  இதற்கு என்ன விளக்கம்? 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் : முதலாவது நபர் ஜினா என்னும் பாபத்தை ஹலால் எனக் கூறியவர்.  இரண்டாமவர் திருமண மானவர்.  மூன்றாமவர் திருமணம் ஆகாதவர்.  நான்காமவர் ஓர் அடிமை.  ஐந்தவது நபரோ பைத்தியக்காரர்.  அவருக்கு தண்டனை எதுவும் வழங்க முடியாது.அதனாலேயே  ஐந்தாம் நபருக்கு தண்டனை வழங்கவில்லை.  


(தொடரும்) ​