ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Oct 2011   »  இறையச்சம் 


திருக்குர்ஆன் நெறிகள்

 

இறையச்சம் 

(திருச்சி (புணூயூ) வானொலியில் 28.10.11 அன்று காலை 6 மணிக்கு மறைஞானப்பேழை உதவியாசிரியர், என். அப்துஸ்ஸலாம் ஆலிம் ஆற்றிய உரை)​

 

 

திருக்குர்ஆனின் தொடக்க வரிகளில், “திருக்குர்ஆன் ஒரு வேதம், அதில் சந்தேகமில்லை.  அது இறையச்சமுடையோருக்கு வழிகாட்டும்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

இறையச்சமுள்ளோருக்கு மட்டுமே இறை மறை வழிகாட்டும் எனச் சொல்லப்படுவதால், இறையச்சத்திற்கு முழுமையான முக்கியத்துவம் தரப் படுவதை நம்மால் உணர முடிகிறது.

இறையச்சம் என்றால் என்ன? இறைவனை அஞ்சுவது.  இறைவன், அங்கு இங்கு எனப் பிரித்துக்  கூற முடியாதபடி  எங்கும் பரவி விரவி வியாபித்திருக்கின்றான் என்பதனை அறிந்திருப்பது இறையச்சமாகும்.  இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் எனும் இறை ஞானி மாணவராக இருந்த போது, அவர்களுடைய ஆசிரியர், வகுப்பில் மாணவர்கள் அனைவரிடமும், “ஒவ்வொரு மாணவரும் நாளை வகுப்பிற்கு வரும்போது, ஒரு சிறிய கவிதையை எழுதி வரவேண்டும்” எனக்  கூறி, “அவ்வாறு கவிதை எழுதுவதை யாரும் பார்க்காதவாறு எழுதி வர வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

​மறுநாள் வகுப்பிற்கு மாணவர்கள் வந்தார்கள்.  ஆசிரியர் ஒவ்வொரு மாணவரிடமும் அவர்கள் எழுதிய கவிதையை வாசிக்கும்படி கூறினார்.  “அக்கவிதையை எப்படி எழுதினாய்?, எங்கு அமர்ந்து எழுதினாய்?” என வினவினார்.  ஒரு மாணவர்,“வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் எழுதினேன்” என்றார்.  மற்றொருவர், “அறையைத் தாழிட்டுக் கொண்டு எழுதினேன்” என்றார்.  இன்னுமொருவர், “ஊருக்கு வெளியே சென்று, ஒரு சிறு மலையின் உச்சியில் அமர்ந்து எழுதினேன்” என்றார்.  இவ்வாறு ஒவ்வொரு மாணாக்கரும் தன்னிலை விளக்கம் அளித்தனர்.

இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் முறை வந்தது.  “எங்கே உமது கவிதை?” என்று ஆசிரியர் வினவினார்.  அதற்கு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், “நான் கவிதை ஏதும் எழுதவில்லை” என்றார்கள்.  “ஏன்  எழுதவில்லை” என ஆசிரியர் கோபமாக வினவினார்.  அதற்கு இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் “கண்ணியத்திற்குரிய ஆசிரியர் அவர்களே! தாங்கள், நேற்று,வெறும் கவிதையை மட்டும் எழுதி வரக் கூறவில்லை; யாரும் பார்க்காதவாறு எழுதி வர வேண்டும் என்றுமல்லவா கூறியிருந்தீர்கள்.  யார் என்னைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்,

 

இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே? இறைவன் இல்லாத ஓர் இடத்தைக் கூறுங்கள்.  நான் அவ்விடம் சென்று கவிதை எழுதி வருகிறேன் எனக் கூறினார்கள்.  ஆசிரியர், ஆனந்தவயப்பட்டு, “உமது மெய்ஞ்ஞான  அறிவு வளர்ந்தோங்க வாழ்த்துகிறேன்” என்றார்.

ஆம்... இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளான்.  அவன், சர்வத்திலும் சர்வமாக வீற்றிருக்கின்றான்.  ஐம்பூதங்களிலும் அனைத்திலும் அருவாகவும் உருவாகவும் அருவுருவாகவும் அமைந்து ஆட்சி செலுத்துகிறான் என்பதனை மனிதர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.  இதைத்தான் திருக்குர்ஆன் “தக்வா (இறையச்சம்)” என பல்வேறு இடங்களில் பறைசாற்றுகின்றது.

மனிதனின் இயல்பு, தவறு செய்யும் போது, பிறர் நம்மைக் கண்காணிக்கின்றார்களா அல்லது காண்கின்றார்களா என்பதனை அங்குமிங்கும் திரும்பிப் பார்த்துவிட்டு, பின்னர் தான் தவறைச் செய்கின்றார்கள்.  யாராவது தம்மைக் கண்காணிக்கிறார்கள் என்பதை அறிந்தால், எந்த மனிதனும், ஒரு குண்டூசியைக் கூடத் திருடமாட்டான்.  இதுதான் நடைமுறை.

மனிதன் பார்க்கின்றான் எனப் பயப்படுகிற மனிதன், இறைவன் பார்க்கிறான் என்பதனை ஏனோ மறந்து விடுகின்றான்.  எங்கும் நிறைந்துள்ள இறைவன், நம்மை எக்கணமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்னும் உணர்வு வளர்ந்தோங்கி விட்டால், மனிதனிடம் பொய் இருக்காது.  புறம் பேச மாட்டான்.  பொல்லாங்கு கூற மாட்டான்.  பொறாமை கொள்ள மாட்டான்.  களவு செய்ய மாட்டான்.  கண்டபடி பேசித் திரிய மாட்டான்.  அவனிடம் அன்பும், பண்பும், சாந்தியும் நல்லெண்ணமும் நிச்சயம் அமைந்துவிடும்.  அவனது சொல்லும் செயலும் சத்தியமானதாக மாறிவிடும்.  அவன் நல்லதையே நினைப்பான்; நல்லதையே சொல்வான்; சுயநலமின்றி பிறர் நலம் பேணுவான்.

இப்படிப்பட்ட மனோ சக்தியை உருவாக்குவது தான் இறையச்சம்.  இறையச்சத்தோடு வாழ்தல் என்பது இயற்கையோடு இயைந்து வாழ்வதாகும்.  அவ்வாழ்வே பேரின்ப நல்வாழ்வாகும்.

இறையச்சத்தைப் பேணுவோம்! இறையம்சத்தைக் காணுவோம்!