ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Oct 2011   »  மறையோனின் முத்தங்கள்


மறையோனின் முத்தங்கள்

கவிஞானி G.S.T. மஹ்பூபு சுப்ஹானி 9840313283


 

இறைவன் திருப்தியடைந்த மனிதர்களுக்கு அவன் கொடுக்கும்  முத்தம் கராமத்.

      வலிமார்களின் மனக்கொள்ளிடம் கண்டு முத்தத்தை அவன் பதித்துப் பார்ப்பான்.       அத்தகைய அற்புத முத்தங்களின்  சப்தங்களில் பிற மனிதர்களைச் சொக்க வைப்பான்.  ஆண்டவனின் அழுத்தமான  முத்தங் களை அடுக்கடுக்காய்ப் பெற்றவர்களில் போற்றத்தக்க இடத்தை குத்புல் அக்தாப் முஹிய்யுத்தீன் அப்துல் ஜீலானி (ரலி) அவர்கள் பெறுகிறார்கள்.

அவர்கள் மீது இறைவன் கொண்ட  மகிழ்ச்சி மிகப் பெரியது. ஈடு இணை  இல்லாதது. அதனால்தான் அவர்களின் ஆன்மிகத் தளத்திலிருந்து  அல்லாஹ் வெளிப்படுத்திய கராமத்  என்னும் அற்புதங்கள் பிரமிக்கச் செய்கின்றன. அவ்லியாக்களின் தலைமைத் தனத்தில் அவர்கள் இருப்பதற்கான  சாட்சியங்களாக அவை  அமைந்தன.

அத்தனை  நபிமார்களிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதான தன் அளவிடற்கரிய ஆனந்தத்தை ஈடுஇணையற்ற முஃஜிஸாத்துகளாக வெளிப்படுத்திய அல்லாஹ், அத்தனை வலிமார்களிலும் முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரலி) அவர்கள் மீதான தன் மகிழ்ச்சியை மதிப்பீடு செய்ய முடியாத  மகத்தான கராமத்துகளாக காட்டித் தந்தான்.

ஈரான் நாட்டின்  ஜீலான் நகரின் அருகமைந்த நீப் என்னும் சிற்றூரில் ஹலரத்  அபூஸாலிஹ் -  பாத்திமா இருவருக்கும் ஹிக்ரி  470-ல்  ரமலான் மாதத்தின் முதல்நாளில் பிறந்த கெளதுல் அஉளம்   அவர்கள், அன்றைய பகல் முழுவதும் பால் பருகாமல் இருந்து நோன்பு திறக்கும்  வேளையில்தான் தாய்ப்பால் பருகினார்கள்.  அந்த ரமலான் முழுவதும் நோன்பு நோற்றார்கள்  என்ற செய்தி  நினைக்க நினைக்க வியக்க வைக்கும் அற்புதமாகும். அவர்கள் பிறந்த  உடனேயே கராமத் என்னும் அற்புதத்தை அவர்களிலிருந்து வெளிப்படுத்திய அல்லாஹ் அவர்களின் தன்னிகரற்ற  தகுதியை இந்தத் தரணிக்குத் தெரிவித்தான்.

வரலாற்றுப் பேழையில் பதிவான அவர்களின்  எண்ணற்ற கராமத் தொகுப்புகளின் ஒப்பற்ற  காட்சிகளில் இரண்டை மட்டும இங்கே நாம் காணலாம்.

பகுதாதைத் தலைநகராகக் கொண்டு இராக்கை ஆட்சி செய்த  அப்பாசியக் கலீபா  அல் முஸ்தஃபியுடன் பகுதாதில் வாழ்ந்த பாதிரியார் ஒருவர் நட்புக் கொண்டிருந்தவர்,

இராக்  நாட்டில் வசித்து வந்த  கிருத்துவ மக்களின் தலைவராகவும் இருந்த அவர், இஸ்லாமிய நெறிகளுக்கும்  மதிப்பளித்துப் போற்றினார். அவரது இஸ்லாமிய நெருக்கம் அவரை முஸ்லிமாக மாற்றிவிடும் என்ற  எண்ணம் மக்களின் மத்தியில் ஏற்பட்டிருந்தது.  அந்த  அளவுக்கு சன்மார்க்கத் தூணில் சாய்ந்திருப்பதைச் சுகமானதாக அவர் கருதினார்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிஃராஜ் என்னும் விண்ணேற்றப் பயணமே அந்தப் பாதிரியாரை முஸ்லிம் ஆகவிடாத  மனத் தடையை உருவாக்கி  இருந்தது.

சடவுடலோடு மக்காவிலிருந்து ஜெரூசலத்திற்கும், அங்கிருந்து அல்லாஹ்வின் அர்ஷிக்கும்  சென்று, இறைவனை நேருக்கு நேராக சந்தித்து, நீண்ட நேரம் அவனோடு உரையாடிய பின்னர் சொர்க்கங்களையும், மற்றவைகளையும் சுற்றிப் பார்த்துத்   திரும்பினார்கள், அதுவும் ஓர் இரவின்  சில மணித்துளிகளில் என்பதை ஏற்றுக் கொள்ள அவரது அறிவு மறுத்தது. அது அவரை  வெகுவாக சேதப்படுத்தியது. எப்போதும்  இந்தச்  சிந்தனையிலேயே பாதிரியாரின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. விடைகளுக்காக அவரது  மனக்கண் விழித்தே  கிடந்தது.

இராக்கின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஆலிம்களை அழைத்து வந்து மிஃராஜ் சம்பந்தமான  பாதிரியாரின்  சந்தேகங்களை நீக்குவதற்கு ஏற்பாடு செய்தார் கலீபா. ஆனால், முயற்சி அனைத்தும் வீணாயின. அவரின் மனத்தில்  எந்தத் தெளிவும் ஏற்படவில்லை.மிஃராஜின் ஞானத்தை யாராலும அவருக்குக்  கொடுக்க முடியவில்லை. இறுதியாக கவ்துல் அஉலம் அவர்களிடம் பாதிரியாரின் மனநிலைகூறி மிஃராஜின் உள்ளமையை உணர்த்த வேண்டும் என்று கலீபா வேண்டினார். இசைவு தெரிவித்த வலிகள் கோமான் ஹள்ரத் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்கள், கலீபா அல்முஸ்தஃபி -யின் அரண்மனைக்கு வந்தார்கள். அப்போது  மணிமண்டபத்தில் கலீபாவும், பாதிரியாரும் சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். வாசலுக்குள் நுழைந்த குத்புல் அக்தாப் அவர்களை ஏறிட்டுப் பார்த்த பாதிரியார் கண் இமைத்தார். நகர்த்துவதற்காக கையில் சதுரங்கக்காய் கையில் இருந்தது. கண் இமைத்துத் திறந்த ஒரு நொடிப்பொழுது இடைவெளியில் நிகழ்ந்த பாதிரியாரின் தனி வாழ்க்கையை இப்போது நாம் கண்விரித்துக் காணலாம்.

அவரின்  கண் இமைகள் கவிழ்ந்ததும் காட்சிகள் விரியத் துவங்கின.     திமிறி ஓடும் ஆறு ஒன்று அவரை அடித்துச்  செல்கிறது. இதுகண்டு பதறிய ஆட்டிடையர் ஒருவர் அந்த  ஆற்றில்  குதித்து  அவரைச் காப்பாற்றிக் கரை சேர்த்தார். கரைபுரண்டோடிய வெள்ளத்தின் கரம் அவரது உடைகளைக் கழற்றிப் போட்டிருந்தது,  நிர்வாணமாக இருந்தவர்  பெண்ணாகவும்  மாறிப் போயிருந்தார்.  பாதிரிப் பெண்ணுக்கு முதலுதவி செய்து ஆசுவாசப் படுத்திய ஆட்டிடையர் அவரைப்பற்றி விசாரித்த போது தன் சொந்த  ஊர் பகுதாது என்றும் ஆற்றில்  எப்போது விழுந்தேன் என்பது தனக்குத்  தெரியவில்லை என்றார். ஆணாக அவர் இருந்ததும் அவரின் நினைவில் மறைக்கப் பட்டிருந்தது.                   

(தொடரும்)​