ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2011   »  Oct 2011   »  புதிதாய்ப் பிற்ந்தவர்கள்


புதிதாய்ப் பிற்ந்தவர்கள்

மறுமையில் இறைவனால் கேள்வி கணக்குக் கேட்கப்பட்டு தேர்வு பெறாதவர்கள், இறைவா! எங்களுக்கு பூமியில் மீண்டும் வாழ ஒரு சந்தர்ப்பம் கொடு! உலகிற்கு மீண்டும் அனுப்பு! உனக்குப் பிரியமானவர்களாக  - உத்தமர்களாக - ஒரு வாழ்க்கை வாழ்ந்து நன்மை சுமந்தவர்களாக உன்னிடம் வந்து சேருவோம்! எனக் கெஞ்சுவார்கள். ஆனால் அவர்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்படும்.

சுடப்பட்ட   செங்கல் மீண்டும் களிமண்ணாக முடியாததுபோல வாழ்ந்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை வழங்கப்படாது. ஆனால், பூமியில் ஒரு சாராருக்கு மட்டும் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள்தாம் இறுதிக்கடமையாகிய ஹஜ்ஜை நிறைவேற்றும் ஹாஜிகள்.

ஹஜ்ஜுச் செய்வதற்கு முன்னர் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தாலும் புனித ஹஜ்ஜை முடித்தபிறகு பாபங்கள் அழிக்கப்பட்டு அன்று பிறந்த குழந்தையாக ஆக்கப்படுகிறார்கள். மக்கா மதீனாவிருந்து  திரும்பும்போது புதுவாழ்வு பெற்று ஊர் திரும்புகிறார்கள்.

இனி அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் இறைவனால் பால்போல் - பளிங்குபோல் - பரிசுத்தமாக்கப்பட்ட தங்கள் மீது பாப அழுக்குகள் படாமல் தற்காத்துக் கொள்ள வேண்டியதுதான். ஏற்கனவே வாழ்ந்த வாழ்வில் நற்செயல்கள் குறைவாகச் செய்திருந்தாலும் மீண்டும் கிடைத்த புதுவாழ்வில் ஏராளமான -எல்லையற்ற நன்மைகளை ஈட்ட முடியும்.

இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மக்கா, மதீனா நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள். மக்கா எனும் கருவறையில் இலட்சக்கணக்கான பெரியவர்கள் குழந்தைகளாகப் பிறக்கப் போகிறார்கள். நாம் அந்தப் பெரிய குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற ஆயத்தமாவோம்!