ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012  »  Mar 2012   »  உழைப்புக்குமரியாதை


உழைப்புக்குமரியாதை


ஹதீஸ்பக்கம்                                                                                                                                  ஆலிம் புலவர்
,

 

தனது கரங்களால் கடினமாக உழைத்துப் பெற்ற செல்வத்தால் உண்ணுவதைவிட சிறந்த உணவு எதுவுமில்லை.       (நபிமொழி - புகாரி ­ஷரீப்)

இயங்கிக் கொண்டே  இருக்கும் உலகம்இது!

னிதனைச் சுற்றியுள்ள இயற்கை ஒருவிநாடி கூட ஓய்வெடுத்துக் கொள்ளாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

இயக்கம் இந்த பிரபஞ்சத்தின் இயற்கை.

அல்லாஹு தஆலா “குன்” (ஆகிவிடு) என ஒரு கட்டளை பிறப்பித்தான்.  ஆக வேண்டியவையயல்லாம் ஆனது - ஆகிக்கொண்டே இயங்கிக்கொண்டே  இருக்கிறது!

சும்மா இருக்கும் மனிதனின் இரத்தம் கூட சூடாக சுற்றிக் கொண்டே இருக்கிறது! இதயம் கூட துடித்துக் கொண்டே இருக்கிறது.

இயங்கும் இயற்கை மனிதனுக்குச்சொல்லும் பாடம் இதுதான்! மனிதா இயங்கிக் கொண்டே இரு!

சுற்றும் பூமி - ஓடும் மேகங்கள் - கொட்டும் மழைத்துளி - பறக்கும் பறவைகள்- ஓடும் கால்நடைகள் - இமைக்கும் கண்ணிமைகள் - எல்லாமே மனிதனை இயங்கு இயங்கு என கட்டளையிட்டுக்கொண்டே  இருக்கின்றன!

இயற்கையின் பணி “இயக்கம்” எனும் பெயர் பெறும்போது மனிதனின் இயக்கம் “உழைப்பு”  எனும் பெயரால் மதிப்பு பெறுகிறது.

  உழைக்காமல் இந்த உலகில் மாற்றங்கள் நிகழாது!

  உழைக்காமல் இருக்க முடியுமான உலகம் சுவனம் தான்!

இங்கு உழைத்தால் தான் சுவனத்திலிருந்து பூமிக்கு வந்த மனிதன், அந்தச் சுவனத்தில்,தாம் பெற்ற சுகத்தில் ஓரளவையாவது இங்கு பெற முடியும்.

ஓயாமல்  உழைத்தவர்கள் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 

வஹீயைப் பெறுவது - அதனை ஒழுங்குபடுத்துவது - சஹாபாக்களுக்கு வழிகாட்டுவது- குடும்பத்தாருக்கு ஒத்தாசை செய்வது - ஏழை அநாதைகளுக்கு உதவுவது - போர்க்களம் காண்பது- போருக்கான திட்டம் தீட்டுவது - எதிரிகளை கண்காணிப்பது - கைதிகளைப் பராமரிப்பது -மதீனா மக்களின் வாழ்வாதாரம் பெருக்குவது - சுற்றியுள்ள இனத்தாருடன் சுமூக உடன்படிக்கைகொள்வது -  இரவெல்லாம் வணங்குவது - இவற்றுக்கெல்லாம்மேலாக இறைவனின் கடமைகளை இம்மி அளவும் குறையில்லாமல் நிறைவேற்றுவது. 

 

சுப்ஹானல்லாஹ்!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்தனை பொறுப்புகளையும் ஓய்வில்லாமல் எப்படிச் செய்தார்கள் என்பது உலக வியப்புகளில் ஒன்றாகும. 

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் மதீனாவின் தெருவில் நடந்து சென்றபோது வேலை செய்து கொண்டிருக்கும் உழைப்பாளி ஒருவரைக் கண்டார்கள்.  உழைத்து உழைத்துக் காய்ப்பேறி தழும்பின் தடம்பதித்தஅவரின் கரத்தைப் பற்றி தங்கள் இரு இதழ்களால் முத்தம் ஒன்று பதித்தார்கள். 

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரம் தொட்டு முத்தமிடமுடியாதா என ஏங்குவோர் கோடான கோடி!

ஆனால்,அந்த முத்து நபியவர்கள் முத்தம் பதித்ததோ ஓர் உழைப்பாளியின் கரத்தில்.

இந்தச் செயல் மூலம் உழைப்பின் உயர்வை இந்த உலகுக்கு உணர்த்தினார்கள் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

பெரியார்களின் கரத்தை முத்தலாமா? வேண்டாமா?என பட்டிமன்றம் நடத்துவோர் எம்பெருமானாரின் இந்தச் செயலிலிருந்து விடைதனைப்பெறலாம்.

உழைத்த ஊழியரின் வியர்வை உலருமுன் அவரின் ஊதியத்தைக் கொடுத்து விடுங்கள்!என்ற பெருமானாரின் உத்தரவு மொழி உழைப்பாளி பற்றிய பொன்மொழிகளில் மகுடம் போன்றது.

(நல்அமல் செய்வது) உழைப்பவரின் கூலியை அல்லாஹ் வீணாக்கமாட்டான் எனஅல்லாஹ் உழைப்பாளிக்கு ஊக்கம் ஊட்டுகிறான்.

சோம்பல் தான் ஷைத்தான் என உணர்த்துபவர்கள் நபிகளாரின் பேரர் ஜமாலிய்யாஅஸ்ஸைய்யித் கலீல் அவுன்மெளலனா நாயகம் அவர்கள்.

எனவே உழைப்போம்! உழைத்துக் கொண்டே இருப்போம்! வாழ்வின் உன்னத உயரத்தைப்பெறுவோம்! உழைத்த கைகளில் பெருமானாரின் மானசீக முத்தத்தைப் பெறுவோம்!