ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »  2012   »  Jun 2012   »  அண்ணல் நபி அவர்களின் அற்புத வரலாறு

அத்தியாயம் : 91

 

அண்ணல்நபி அவர்களின் அற்புத வரலாறு

 

அண்ணலார் கண்ட சோகக் காட்சி தொடர்கிறது...

 

உஹது யுத்தம் ஒருவாறு வெற்றி தோல்வி இன்றி முடிந்தபின் யுத்தக்களத்தில்வீரமரணம் எய்திய உத்தமர்களின் புனித சடலங்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே போகிறார்கள்.

அப்படிப் போகும்போது கைதமா (ரலி), இப்னு அத்தஹ்தாஹா (ரலி) ஆகியோரின்புனித உடல்களைக் கண்டார்கள்.  கைதமா; அவர்களின்மைந்தர் கனவில் தோன்றி விரைவில் தம்மை வந்து சேர்ந்து கொள்ளுமாறு கூறக் கேட்டவர். மற்றவர்ஓர் அனாதைக்கு ஈச்ச மரம் ஒன்றை அன்பளிப்புச் செய்தவர்.  அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “தஹ்தாஹாவின் மகன் தாபித்துக்கு சுவர்க்கத்தில் வளமான சூழ்ந்து நிறைந்த குலைகளைக்கொண்ட ஈச்ச மரங்கள் எவ்வளவு பெரிய தொகை இருக்கின்றது.”

அவ்ஸ் கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் தமது உறவினர்களின் சடலங்கள்கிடக்கின்றதா என்று பார்த்துக் கொண்டே வந்தார். அப்படி வந்தவருக்கு ஓர் அதிர்ச்சி, ஆச்சரியமான காட்சி காணக்கிடைத்தது.  ஆம்! குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த உஸைரிம்என்பவரின் காட்சிதான் அது.  நேற்றுவரை இவர்இஸ்லாத்தை ஏற்காததால் இவரை இவரது கோத்திரத்தினர் கண்டித்துக் கொண்டிருந்தனர்.  “நீங்கள் என்ன சொன்னாலும் சரி! எனக்கு இஸ்லாம் உண்மையானமார்க்கம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் அடுத்த கணமே நான் இஸ்லாத்தை ஏற்றிடுவேன்”என்று கூறிக் கொண்டிருந்தவர் தான் அந்த உஸைரிம்.

உஸைரிம் இப்போது படுகாயமுற்றவராக களத்தில் வீழ்ந்து கிடக்கிறார்.  உயிர் இன்னும் பிரிந்துவிடவில்லை.   “நீர் இங்கு வந்தது எதற்காக? உமது மக்கள் மீதுள்ளஅக்கறையினாலா? அல்லது இஸ்லாத்துக்காகவா?” என வினவினார் வியப்பிலிருந்து மீளாத அந்தநபர்.

“சத்தியமாக நான் இஸ்லாத்திற்காகவே வந்தேன்” என்றார் உஸைரிம்.  உடனே உஸைரிம் வேகமாக நான் அல்லாஹ்வின் மீதும் அவனதுதூதர் மீதும் நம்பிக்கைக் கொண்டு இஸ்லாத்தினுள் நுழைந்தேன்.  பின் நான் ஒரு வாளை எடுத்துக் கொண்டு அதிகாலையிலேயேஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து போரிட வந்து விட்டேன்.  இப்படி நான் வெட்டப்பட்டு கீழே விழும்வரை போராடினேன்!!என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.  கண்கள்மேலே சொருகி விட்டன.  கைகால்கள் தளர்ந்துவிட்டன.  தலையும் ஒருபுறம் சட்டெனச் சாய்ந்தது.  பாவம் அவர் இன்னுயிர் பிரிந்து விட்டது.  இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஓடிச் சென்று பெருமான்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உள்ளம் பதைபதைக்கக் கூறினார்.  அப்போது நபிகளார், “சுவர்க்கவாசிகளில் அவரும் ஒருவர்;கவலைப் படாதீர்கள்” என்று கூறினார்கள். 

இஸ்லாத்தில் புகுந்து இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று கூடச்செய்யாமல் நேரடியாக சுவர்க்கம் சென்றவர் என்ற பெருமை இவரையே சாரும்.  ஆக ஐந்து கடமைகளைச் செய்யாமம் சுவர்க்கம் புக வழியும்இருக்கிறது என்பது இச்சம்பவத்திலிருந்து புரிகிறது அல்லவா? ஆம்! அல்லாஹ்வின் பாதையில்வெட்டுண்டவர்களுக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம் இது.  ஆகவே அத்தகைய தியாகிகளை நாம் கருத்தில் கொண்டு இறைமைக்காகநாம் நம்மை தியாகம் செய்திட வேண்டும்.

அடுத்தபடியாக யாருக்கும் அடையாளம் தெரியாத புதிய நபர் ஒருவரும்வெட்டுண்டு மாண்டுகிடந்தார். அவர் யார் என்று முதலில் தெரியவில்லை.  பின்னர் தான் புரிந்தது; அவர் யூத கோத்திரத்தின்தலாபா என்ற பிரிவில் கல்வியறிவு மிக்கதொரு ரப்பி முகைரிக் என்று. அன்றைய தினம் முகைரிக்தம் மக்களைக் கூப்பிட்டு நபிகளாருடன் தாம் செய்து கொண்ட உடன் படிக்கையை நினைவு படுத்தி,சிலை வணக்கம் புரிபவர்கள் மீது யுத்தம் செய்யும்படி வேண்டினார்.  “ஐயோ இன்று விரதம் பூணும் ஸப்த் தினம்” என்று அவர்கள்கூறினார்கள்.  “ஆமாம் எனக்கும் தெரியும். நீங்கள்உண்மையில் ஸப்த் விரதம் பிடிப்பவர்கள் அல்ல. ஏன் இந்த வீண் பேச்சு.

சரி எனக்குரிய ஒரே வாரிசு முஹம்மத் தான் என்பதற்கு சாட்சியாக மட்டும் இருந்து கொள்ளுங்கள்.  இன்று நான் முஹம்மதுடன் சேர்ந்து போர் புரிய போகிறேன்.அதில் நான் இறந்து போய்விட்டால் எனது சொத்துக்கள் அனைத்தும் முஹம்மதையே சாரும்.  இறைவன் காட்டும் வழியில் அதனை அவர் பயன்படுத்திக்கொள்ளட்டும்” என்று கூறி விட்டு போருக்குப் புறப்பட்டவர்  வெட்டுண்டு
­ஹீதாகி விட்டார்.  பின்னர்அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் மேற்கொண்ட ஏராளமான தர்ம காரியங்களுக்குச்செலவிட்டது இந்த முகைரிக் என்ற யூதரிடமிருந்து சுவீகாரமாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்களானஈச்சமரத் தோட்டங்களி லிருந்து பெறப்பட்டவையே. பின்னர் நபிகளார் கூறும் போது “யூதர்கள்அனைவரிலும் முகைரிக் மிகவும் சிறந்தவர்”.

(தொடரும்)